தமிழீழத் தேசிய மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2025-சுவிஸ்!📸
தாயக விடுதலையை நெஞ்சினில் சுமந்து இறுதிவரை களமாடி தமது இன்னுயிர்களை உவந்தளித்த எமது மண்ணின் அழியாச்சுடர்களான மாவீரர்கள் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் கடந்த 29.06.2025 (ஞாயிறு) சப்கவுசன் மாநிலத்தில் சிறப்பாகவும், எழுச்சியாகவும் நடைபெற்றது.
தமிழீழ விளையாட்டுத்துறை சுவிஸ் கிளையினால் நடாத்தப்பட்ட இப் போட்டிகளானது பொதுச்சுடரேற்றலுடன், சுவிஸ் மற்றும் தமிழீழத் தேசியக்கொடிகளுடன், தமிழீழ விளையாட்டுத்துறைக் கொடியும் ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்து அகவணக்கம் செலுத்தி மலர்வணக்கத்துடன் போட்டிகள் ஆரம்பமாகின.
தமிழ்த் தேசியத்திற்கு வலுச்சேர்க்கவும், தாயகம் நோக்கிய தேடலுடன் இளையோர்களை வழிப்படுத்தவும், மாவீரர்களின் தியாக நினைவுகள் ஊடாக தாயக உணர்வோடு அவர்களை ஒருமைப்படுத்தும் நோக்கிலும் ஒழுங்கமைக்கப்பட்ட மாவீரர் நினைவு சுமந்த இவ் விளையாட்டுக்களில் நூற்றுக்கணக்கான போட்டியாளர்களோடு தமிழின உணர்வாளர்களும், விளையாட்டு ஆர்வலர்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர்.
ஆரம்ப வணக்க நிகழ்வுகளில் சுவிசின் பல கழகங்களில் இருந்தும் கலந்து கொண்ட இளம் தலைமுறையினர் மிகுந்த பற்றுடனும், ஆர்வத்தோடும் உரிய நேரத்தில் பங்குபற்றி எமது மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தியமையானது அவர்களின் தேசிய உணர்வையும், பற்றையும் வெளிப்படுத்தி நின்றது.
முப்பத்திநான்காவது தடவையாக நடத்தப்பட்ட வளர்ந்தோருக்கான உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியுடன் இளையோர் உதைபந்தாட்டம், மென்பந்து துடுப்பாட்டம் என அனைத்து விளையாட்டுக்களிலும் ஆன்கள்,பெண்கள்,சிறுவர்களென அனைவரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இம்முறை பெண்கள் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் 7அணிகள் பங்கு பற்றியிருந்தது சிறப்பம்சமாகும். இறுதியாக வெற்றி பெற்ற கழகங்களுக்கும் வீரர்களுக்கும் பதக்கங்களும், வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து அனைத்துக்கொடிகளும் கையேற்கப்பட்டு தாரக மந்திரத்துடன் போட்டிகள் சிறப்பாக நிறைவடைந்தன.
முதற்தடவையாக சப்கவுசன் மாநிலத்தில் இடம்பெற்ற இவ் விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற அனைத்து வகைகளிலும் ஒத்துழைப்பு நல்கிய சப்கவுசன் மாநில மக்கள், தமிழின உணர்வாளர்கள், கழக நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் மற்றும் கழகவீரர்கள், ஆர்வலர்கள், ஆதரவாளர்கள், செயற்பாட்டாளர்கள், இனஉணர்வாளர்கள் உள்ளிட்ட அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்
நன்றி
தமிழீழ விளையாட்டுத்துறை சுவிஸ் கிளை
@highlight #tamilarulnet #Tamilarulmedia #TamilArulTV #website #socialmedia #temple #Swiss
கருத்துகள் இல்லை