பல கோயில் வளாகத்திற்கு ஒவ்வாத விடயங்கள் அரங்கேற்றப்படுதலுக்கு இசை நிகழ்ச்சியும் கேடுதலும்!
‘அடுத்தவன் சட்டியில என்ன வேகுது என்டு பார்க்காம நம்ம சட்டியில என்ன கருகுது என்டு பார்க்கோனும்’
என்று சொல்ல கேட்டிருப்போம்.
அதைப்போல தான் நம்மூர் மதங்களுக்கிடையிலான சமூக வலைத்தள விமர்சனங்களும் காணக்கிடைக்கின்றது.
நான் பெரும்பாலும் மதம் சார்ந்த விமர்சனங்களை பொதுவெளியில் வைக்க விரும்புவதில்லை, என்னுடைய சைவசமயம் சார் கோயில்களில் அல்லது நிர்வாகத்தில் எம் சமயத்தை கேவலப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுவோரை விமர்சித்தாலும் கூட, ஏனைய மதம் சார் செயற்பாடுகளை கண்டும் காணாமலும் கடந்து செல்வதே வழமை.
நானும் ஓரிரு மாதங்களுக்கு முன்னர் நம்மூரில் பல அற்புத அதிசயங்களை அள்ளி வழங்கிடும் போதகர் ஒருவர் பற்றி விமர்சனத்தை முன் வைத்திருந்தேன், அதுவும் மதம் சார் விமர்சனமாக தனிநபர்களை பாதித்துவிடக்கூடாது என்று மதத்தின் பெயரால் அப்பாவி மக்களை மடையர்களாக்குவதோடு நின்றுவிடாமல், அவர்களின் அறியாமையை பொதுவெளியில் பகிர்ந்து அந்த மக்களை Trolling Material ஆக ஆக்கி அந்த views ஊடாகவும் பணத்தினை இலக்காக கொண்டு செயற்படும் செயல் தவறு என்பதையும், குறித்த சம்பவம் மூலம் நானறிந்த யுவதி ஒருவர் தன்னுயிரை மாய்க்க முனைந்த சம்பவத்தையும் அடிப்படையாக கொண்டே அந்த பதிவு அமைந்திருந்தது.
ஓகே விடயத்துக்கு வருவோம்.
சம காலத்தில் நம்மூர் ஆலயங்களில் தென்னிந்திய பிரபலங்களை யாராவது ஒரு செல்வந்தரின் அனுசரணையோடு கூட்டிவந்து இசை நிகழ்ச்சிகளை நடாத்துதல் பிரபல்யமாகியுள்ளது. பெரும்பாலான ஆலயங்களில் இந்த கலாச்சாரம் ஆலய நடைமுறைகளில் ஒன்றாக மாறிவருகின்றமை கண்கூடு.
இசை நிகழ்ச்சிக்கோ, இசை கலைஞர்களுக்கோ நான் எதிரானவன் அல்ல, தென்னிந்திய கலைஞர்களோடு நம்மவர்களும் தங்களது இசைத்திறமையை வெளிக்கொணர்வதும் சாதித்தலும் நாமும் எதிர்பார்க்கும் ஒன்றே.
ஆனாலும்;
அதற்குரிய இடம் கோயில் வளாகமா, அதற்குரிய காலம் திருவிழாக்காலமா எனக்கேட்டால் என்னைப்பொறுத்தவரை இல்லை என்பேன்.
இசை நிகழ்ச்சியில் பக்திப்பாடல்கள் மட்டும் ஒலிக்கப்படுமாயின் ஏற்றுக்கொள்ளலாம், அவ்வாறு மட்டுமே இடம்பெறும் திருவிழாக்களும் உண்டு மறுப்பதற்கில்லை என்று ஓரிரு ஆலயங்களே அதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்கின்றன.
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், இடைநடுவே கைகலப்பு, வெ*ட்டுக்கு*த்து, சேட்டை பகிடி இன்னும் பல கோயில் வளாகத்திற்கு ஒவ்வாத விடயங்கள் அரங்கேற்றப்படுதலுக்கு இவ்வகை இசை நிகழ்ச்சியும் முக்கிய பங்காற்றுகின்றன.
இதை தடுத்து நிறுத்த தவறாத ஆலய நிர்வாகத்தினர் ஆலயத்தை தாண்டி தமது தேவைகளுக்காகவும், சுய இலாப நோக்கத்தினையும் அடிப்படையாக கொண்டு செயற்படுவதால் இதை தடுத்து நிறுத்த அந்தந்த [பிரதேச சபைகளும், நகர சபைகளும், மாநகர சபைகளும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும்] முன்வர வேண்டும் என்பது எனது கோரிக்கை.
இதைத்தடுத்து நிறுத்துவதால் மட்டுமே மேற்குறித்த ஆலய வளாகத்திற்கு ஒவ்வாத செயற்பாடுகள் நிறுத்தப்படுமா எனும் கேள்வியெழுந்தால் பாரியளவிலான செயற்பாடுகள் நிறுத்தப்படும் என்பதே உண்மை.
* செல்வந்தர்கள் இசை நிகழ்ச்சி மூலம் தனக்கும் தன் ஊருக்கும், தன் கோயிலுக்கும் கௌரவம் கிடைத்துவிடும் எனும் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்; அப்படியும் இல்லையேனில் குறைந்தபட்சம் பக்திப்பாடல்களை மட்டும் பாடக்கூடிய நிகழ்ச்சியை நடாத்திவிட்டு, திருவிழாக்காலம் முடிந்ததும் உங்கள் ஊர்களில் உள்ள பெரிய மைதானத்தை ஏற்பாடு செய்து இசைநிகழ்ச்சியை ஒருங்கமையுங்கள்.
* நிர்வாகத்தினர் ஆலயத்தின் வருமானத்திலும், அதனூடாக ஏதும் இலாபம் காணலாம் எனும் மனநிலையை மாற்றி ஆலயம் மற்றும் வளாகத்தினுள் சைவ சமயத்தின் கலாசார விழுமியங்களை பாதுகாக்க அதற்குரிய வழிவகைகளை செய்யவும், ஒவ்வாத விடயங்களுக்கு அனுமதி மறுப்பையும் உறுதி செய்யும் மனநிலையையும் உறுதி செய்து கொள்ளுங்கள்.
* ஊரவர்கள், விளையாட்டு கழகங்கள் ஆலயத்தின் புனித தன்மையையும், திருவிழா காலங்களில் ஆலயம் பாதுகாப்பான சூழலாக இருப்பதை உறுதி செய்வதோடு, இவ்வாறான நிகழ்ச்சிகளினால் ஏற்படும் பாதிப்புக்களை கருத்திற்கொண்டு எதிர்ப்பை வெளிப்படுத்திடுங்கள்.
இரு சம்பவங்கள் தொடர்பில் கூற முனைந்ததற்கு காரணம் இன்னுமொரு மதத்தின் தவறுகளை பொதுநல நோக்கோடு சுட்டிக்காட்டுதல் தவறில்லை, ஆனால் அதைத்தாண்டி எம் மதத்தின் புனிதத்தன்மையை காக்க அதைவிட ஒருபடி மேலே ஆரோக்கிய விமர்சனங்களை முன்வைப்பதன் ஊடாக ஏதாவது மாற்றத்தை உருவாக்க முனையலாம் என்பது எனது கருத்து.
குறிப்பு : இந்த வருடம் நம்மூர் கோயில்களில் நடந்து முடிந்தவை நடந்து முடிந்தவைகளாகவே இருக்கட்டும், இனிவரும் காலங்களில் இது தொடர்பில் அனைவரும் விழிப்புடன் இருந்து எதிர்ப்பினை அவர்களுக்கு புரியும் வகையில் தெரிவித்திடுங்கள்.
✍️ சஜன் செல்லையா
கருத்துகள் இல்லை