நாவற்குழி காணாமல் போனோர் வழக்கு: நீதிமன்ற விசாரணை ஒத்திவைப்பு!
யாழ்ப்பாணம், நாவற்குழி இராணுவ முகாமில் இராணுவ அதிகாரிகளால் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் மூன்று இளைஞர்களின் ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என சாவகச்சேரி நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நேற்று (ஜூலை 30) விசாரணைக்கு வரவிருந்த இந்த வழக்கு, நீதவான் விடுமுறையில் இருந்ததால் ஆகஸ்ட் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பின்னணி: 24 இளைஞர்களின் கட்டாய காணாமல் போதல்
இந்தச் சம்பவம் 1996 ஆம் ஆண்டு, இலங்கையின் உள்நாட்டுப் போர் உச்சத்தில் இருந்த காலகட்டத்தைச் சேர்ந்தது. அப்போதைய அதிகாரி துமிந்த ஹெப்பட்டிவல தலைமையிலான இராணுவத்தினரால் நாவற்குழி இராணுவ முகாமில் 24 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அன்று முதல் அவர்களில் எவரும் காணப்படவில்லை அல்லது எவரைப் பற்றியும் தகவல் இல்லை.
காணாமல் போன இந்த இளைஞர்களில் மூவர் தொடர்பில், அவர்களின் பெற்றோர் நீதி கோரி 2017 நவம்பர் மாதம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். ஆரம்பத்தில், சட்டமா அதிபர் திணைக்களம் இந்த மனுக்களை ஏற்றுக்கொள்வதற்கு பல ஆட்சேபனைகளை எழுப்பியது.
எனினும், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அனைத்து ஆட்சேபனைகளையும் நிராகரித்தது. அத்துடன், இந்த விடயம் குறித்து ஆரம்பகட்ட விசாரணையை நடத்தி, மேல் நீதிமன்றத்திற்கு பொருத்தமான பரிந்துரைகளை சமர்ப்பிக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்திற்கு பணிப்புரை விடுத்தது.
இதன் விளைவாக, சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த விசாரணை ஆகஸ்ட் 28 ஆம் திகதி தொடரும்.
கருத்துகள் இல்லை