அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் கஜேந்திரகுமார் எம். பி. அழைப்பு!!



பொறுப்பு கூறல் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பில் பொதுவான வேலைத்திட்டம் ஒன்றை ஒன்றிணைத்து செயலாற்றுவது குறித்து தமிழ் அனைத்து தமிழ் தேசிய கட்சிகளுடனும் தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் சிவில் சமூக பிரதிநிதிகளுடனும் பேச்சு நடத்த உள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தல்களின் பின்னர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளூராட்சி மன்றங்களில் இணைந்து ஆட்சி அமைப்பது  குறித்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் தமிழ் அரசுக்கட்சி உள்ளிட்ட தமிழ் தேசிய தரப்புகளுடன் பேச்சுகளை முன்னெடுத்திருந்தது. அதன் பிரகாரம் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியுடன் கொள்கை ரீதியிலான இணக்கப்பாடொன்றும் கைச்சாத்திடப்பட்டது.

இவ்வாறான நிலையில், எதிர்வரும் செப்ரெம்பரில் நடைபெற இருக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 60வது கூட்டத்தொடரை காத்திரமான முறையில் கையாள வேண்டியது அவசியமானது எனச் சுட்டிக்காட்டியுள்ள கஜேந்திரகுமார், பொறுப்பு கூறலை உறுதிப்படுத்துவதன் மூலமே தமிழர்கள் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன் அடிப்படையில், பொறுப்பு கூறல் மற்றும் அரசியல் தீர்வு விவகாரங்களில் தமிழ் தேசிய தரப்புகள் ஒத்த நிலைபாபாட்டுடன் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டியது அவசியம் எனவும் இதன் காரணமாக தமிழ் அரசுக்கட்சி மற்றும் தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் சிவில் சமூக பிரதிநிதிகளுடனும் பேச்சு நடத்த இருப்பதாக தெரிவித்துள்ள அவர், 

தமிழர்களின் நலனை முன்னிறுத்தி தமிழரசுக் கட்சியும் இதில் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

எதிர் வரும் 11ம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள தமது கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் மேற்படி பேச்சுகளுக்கான திகதி தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.