வடமாநில கொலையாளிகளை விரைந்து கைது செய்யவேண்டும்!
ஒட்டன்சத்திரத்தில் தம்பி சரவணனை கொடூரமாகப் படுகொலை செய்த வடமாநில கொலையாளிகளை விரைந்து கைது செய்து கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டும்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே தும்பலப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த அன்புத்தம்பி சரவணன், அங்குள்ள செங்கல் சூளையில் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது. தமிழ்நாட்டில் குடியேறியுள்ள வடமாநிலத் தொழிலாளர்களால் கொலை கொள்ளை உள்ளிட்ட கொடுங்குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது வன்மையான கண்டனதுக்குரியது.
தமிழ்நாட்டின் மாநகரங்கள் மட்டுமின்றி, இரண்டாம்நிலை நகரங்கள், குக்கிராமங்கள் வரை இலட்சக்கணக்கில் அதிகரித்து வரும் வடமாநிலத்தவர் ஆதிக்கத்தால் தமிழர்களின் வேலைவாய்ப்பு, பொருளாதாரம் ஆகியவை பறிபோவதோடு கொலை, கொள்ளை, போதைப்பொருள் விற்பனை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடுங்குற்றங்கள் அதிகமாகி, மக்கள் வெளியில் நடமுடியாத அளவிற்குச் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு வருகிறது. தமிழ்நாடு காவல்துறையையே தாக்கும் அளவிற்கு வடவர்களின் வன்முறை வெறியாட்டம் நடைபெறுவது எந்த அளவிற்குப் பேராபத்தான சூழலை நோக்கி தமிழ்நாடு தள்ளப்படுகிறது என்பதற்குச் சான்றாகும். வடவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்தவுடனேயே குடும்ப அட்டை வழங்கி, அதன் மூலம் இருப்பிடச் சான்றும், ஆதார் அட்டையும் பெற்றதன் விளைவே, தற்போது வாக்குரிமை வரை பெறும் நிலைமை மிக மோசமாகியுள்ளது.
தமிழ்நாட்டில் வேலை பார்க்கும் பீகார் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடைபெறுகின்றது என்று பொய்ச் செய்தி பரவியதற்கே பீகார் சட்டமன்றம் வரை பிரச்சனை எழுப்பப்பட்டு, அம்மாநில அரசு தமிழ்நாட்டிற்கு ஆய்வுக்குழு அனுப்பி, தம் மக்களின் நலன் உறுதிசெய்த நிலையில், வடவர்களால் அடுத்தடுத்து தமிழ் மக்கள் கொல்லப்பட்டும் எந்தப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? இதுதான் தமிழ்நாட்டு மக்களை திராவிட மாடல் அரசு பாதுகாக்கும் செயலா? இதுதான் தமிழர் உரிமைகள் காக்கும் முறையா?
தமிழ்நாட்டில் வேலை பார்க்கும் அனைத்து வடமாநிலத்தவருக்கும் உள்நுழைவுச் சீட்டினை உடனடியாக நடைமுறைப்படுத்தி, வருகையை ஆவணப்படுத்துவதும், கட்டுப்படுத்துவதும் மட்டுமே வடவர்களால் தமிழ் மண்ணில் நடைபெறும் கொடும் குற்றங்களைத் தடுக்கவும், எளிதில் அடையாளம் காணவும் ஒற்றை வழியாகும். ஆனால், காவல்துறையினர் மீதான வடவர்களின் தாக்குதலுக்குப் பிறகும்கூட விழித்துக்கொள்ளாத தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு, நாம் தமிழர் கட்சியின் கண்டனத்தையும், கோரிக்கையையும் அலட்சியம் செய்ததன் விளைவே கும்மிடிப்பூண்டி பள்ளிச்சிறுமி பாலியல் வன்கொடுமை முதல் தற்போது ஒட்டன்சத்திரத்தில் தம்பி சரவணன் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டது வரை கொடுங் குற்றங்கள் கட்டுக்கடங்காமல் அதிகரிக்க முதன்மைக் காரணமாகும்.
ஆகவே, காவல்துறையை நேரடியாக நிர்வகிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் அவர்கள், முற்றுமுழுதாகச் சீரழிந்து வரும் சட்டம்-ஒழுங்கினை சீரமைக்க இனியாவது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், வடமாநிலத்தவருக்கு உள்நுழைவுச் சீட்டு முறையினை உடனடியாக நடைமுறைப்படுத்தி, இதுபோன்ற கொடூரங்கள் இனியும் தொடராதவாறு தடுக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், ஒட்டன்சத்திரத்தில் தம்பி சரவணனை கொடூரமாகக் கொலைசெய்த கொடூரர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தி, விரைந்து மிகக்கடுமையான தண்டனைப் பெற்றுத்தர வேண்டுமெனவும், பாதிக்கப்பட்ட தம்பி சரவணன் குடும்பத்திற்கு உரிய துயர்துடைப்பு உதவி வழங்குவதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
கருத்துகள் இல்லை