ஜிஎஸ்டி வரி குறைப்பால் உள்நாட்டு வர்த்தகம் சிறக்கும் !
அமெரிக்க ஏற்றுமதியில் எந்தவித பாதிப்பும் இல்லை. அமெரிக்க வரி விதிப்புக்கு 5 வாரங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக தலைவர் சக்திவேல் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் 52-வது நிட் ஃபேர் எனும் சர்வதேச பின்னலாடைத் துறை தொடர்பான வர்த்தகக் கண்காட்சி வருகிற 12 ஆம் தேதி முதல் 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதுகுறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கழக (AEPC) தலைவர் சக்திவேல், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் கே.என்.சுப்பிரமணியன் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது பேசிய ஏஇபிசி தலைவர் சக்திவேல், "ஐரோப்பா உடனான வரியில்லா வர்த்தக ஒப்பந்தத்திற்கு பிறகு நடக்கும் கண்காட்சி என்பதால் இதற்கு மிகவும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அவர்களுடன் செய்யக்கூடிய 1 பில்லியன் ஏற்றுமதி 2 பில்லியன் வரை உயர வாய்ப்புள்ளது. ஐரோப்பாவுடன் வரி இல்லா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இது ஏற்றுமதியை மேலும் அதிகரிக்க உதவும். இந்த கண்காட்சியில் 60 ஏற்றுமதியாளர்கள் தங்கள் கடைகளை அமைத்துள்ளனர். அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஜப்பான், ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 200 புதிய வர்த்தகர்கள் வருவதற்கு வாய்ப்புள்ளது," என்றார்.
தொடர்ந்து, "அமெரிக்க ஏற்றுமதியில் எந்தவித பாதிப்பும் இல்லை. 5 வாரங்களுக்குள் அமெரிக்க வரி விதிப்பு பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். தற்போது டிரம்ப், எங்களுக்கு இந்தியா வேண்டும் என தெரிவித்துள்ளார். இதற்கு பிரதமர் மோடியும் பதில் அளித்துள்ளார். இதன் மூலம் மீண்டும் இயல்புநிலை திரும்பும். சுமூக தீர்வு எட்டப்பட்டு அமெரிக்க ஏற்றுமதி தொடர்ந்து அதிகரிக்கும்," என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், "அமெரிக்க வரி விதிப்பால் நிறுவனங்கள் மூடப்பட்டதாக தவறான தகவல்கள் பரவி வருகின்றன. இது முற்றிலும் தவறு. தொழில்கள் வழக்கம்போல் நடைபெற்று வருகின்றன. அமெரிக்காவிற்கு மட்டும் ஏற்றுமதி செய்த சில நிறுவனங்கள் மட்டும் பாதிப்பை சந்தித்துள்ளன. இவர்களுக்கு விலை சலுகை மூலம் தீர்வுகள் எட்டப்பட்டுள்ளன. எந்தவொரு நபருக்கும் வேலை இழப்பு ஏற்படவில்லை.
வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் மூலம், கடந்த ஆண்டு 45 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி நடைபெற்ற நிவையில், இந்த ஆண்டு 15 சதவீதம் கூடுதல் ஏற்றுமதி நடைபெறும் என எதிர்பார்க்கிறோம். மத்திய அரசு, ஏற்றுமதிக்கு 15 சதவீதம் கூடுதல் மானியம் வழங்க வேண்டும். மாநில அரசு மின்கட்டணத்தை குறைத்தால் பயனுள்ளதாக இருக்கும்” என்றும் அவர் அரசுக்கு கோரிக்கை வைத்தார்.
மேலும், "ஜிஎஸ்டி வரி குறைப்பால் உள்நாட்டு வர்த்தகம் சிறக்கும்; மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும்" எனவும் அவர் கூறினார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை