இன்று உலக தற்கொலை தடுப்பு தினம்!
ஒவ்வொரு 40 விநாடிகளிலும், உலகின் ஏதேனும் ஒரு மூலையில் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆண்டுதோறும் சுமார் 8 லட்சம் பேர் தற்கொலை செய்து உயிரிழக்கின்றனர். மேலும், பலர் மருத்துவ சிகிச்சை பெற்று காப்பாற்றப்படுகின்றனர்.
இந்தக் காரணங்களால், ஆண்டு தோறும் செப்டம்பர் 10 ஆம் திகதி உலக தற்கொலை தடுப்பு தினம் (World Suicide Prevention Day) என உலகளவில் அனுசரிக்கப்படுகிறது. இதனை தற்கொலை தடுப்பிற்கான சர்வதேச அமைப்பு (IASP) மற்றும் உலக சுகாதார நிறுவனம் (WHO) இணைந்து 2003ஆம் ஆண்டு முதல் பிரகடனப்படுத்தி வருகின்றன.
முக்கிய புள்ளிவிவரங்கள்
உலகளவில் 15 முதல் 29 வயது இளைஞர்களின் இறப்பில், தற்கொலை இரண்டாவது முக்கியக் காரணமாக உள்ளது.
உலகளவில் தினசரி சுமார் 3,000 பேர் தற்கொலை செய்கின்றனர்.
பெண்களை விட இரண்டு மடங்கு ஆண்கள் தற்கொலை செய்கின்றனர்.
அதிக தற்கொலைகள் சீனா மற்றும் கிழக்கு ஐரோப்பா பகுதிகளில் நடைபெறுகின்றன.
குறைந்த தற்கொலை விகிதம் லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் காணப்படுகிறது.
தென் கிழக்கு ஆசியாவில் உலக தற்கொலை வழக்குகளில் 39% இடம்பெறுகின்றன.
தற்கொலையின் காரணங்கள்
தற்கொலை செய்யத் தூண்டும் சில காரணங்கள்:
மன அழுத்தம், குற்றவுணர்வு, வெட்கம், இயலாமை
கடுமையான உடல் வலி அல்லது நோய்கள் (புற்றுநோய், பக்கவாதம்)
நிதிச் சிக்கல்கள், வேலை இழப்பு, வியாபார பிரச்சினைகள்
காதல் தோல்வி, திருமண முறிவு, குடும்ப பிரச்சினைகள்
தாம்பத்திய வாழ்வில் சந்தேகம், குழந்தை இல்லாமை
போதைப்பழக்கம், மது அடிமை
பாலியல் வன்முறை, கற்பழிப்பு, திருமணத்திற்கு முந்தைய கர்ப்பம்
கல்வித் தோல்வி, சமூக அவமதிப்பு
இவை ஒருவரை தனிமைப்படுத்தி, தவறான முடிவை எடுக்கத் தூண்டும்.
இலங்கையில் நிலைமை
நம் திருநாட்டில் சமீபகாலமாக நுண்கடன் சிக்கல்கள் காரணமாக அதிகமானோர் தற்கொலை செய்து வருகின்றனர். குறிப்பாக பெண்களிடையே இந்தப் பிரச்சினை அதிகமாகக் காணப்படுகிறது.
வடக்கில் அபயம் மையம் போன்ற அமைப்புகள் தற்கொலை முயற்சி செய்தவர்களுக்கு உளவியல் ஆலோசனைகள் வழங்கி, மீண்டும் தற்கொலை முயற்சியில் ஈடுபடாமல் காப்பாற்றுகின்றன.
சமூக நோக்கத்திற்காக நடைபெற்ற தற்கொலைகள்
சில சமயங்களில் தற்கொலைகள் தனிப்பட்ட காரணங்களால் அல்லாது, சமூக நோக்கங்களுக்காகவும் நடைபெறுகின்றன.
முத்துக்குமார் – ஈழத் தமிழர்களுக்கான நியாயம் வேண்டி தன்னைத் தீக்கிரையாக்கிக் கொண்டார்.
செங்கொடி – பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனையை எதிர்த்து தன்னுயிரை மாய்த்துக் கொண்டார்.
முகமது புவாஸிஸி (துனிசியா) – ஊழல் மற்றும் அநீதி எதிராக தன்னைத்தானே தீ வைத்து கொண்ட சம்பவம், அரபு புரட்சிக்கு வித்திட்டது.
தற்கொலை தடுப்பதற்கான வழிகள்
மன அழுத்தத்தில் இருப்பவர்களுக்கு அன்பும் கவனமும் காட்ட வேண்டும்.
அவர்களை தனிமைப்படுத்தாமல் உரிய மருத்துவ ஆலோசனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.
சமூகத்திற்குள் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும் சூழல் உருவாக்கப்பட வேண்டும்.
பிரச்சினைகளை எதிர்கொள்ள துணிவூட்டும் குடும்ப ஆதரவு மற்றும் சமூக புரிதல் அவசியம்.
நிறைவாக
தற்கொலை என்பது ஒருவரின் தனிப்பட்ட பிரச்சினை மட்டும் அல்ல. அது சமூகத்தின் பொது பிரச்சினையாகும். உண்மையான அன்பும் பரிவும் மட்டுமே ஒரு உயிரை மீட்கும் சக்தியாகும்.
“உங்கள் வாழ்க்கையை நேசிக்கவும். உங்களைச் சுற்றியுள்ளவர்களை அன்புடன் அரவணைக்கவும். உயிர் விலைமதிப்பற்றது – வாழ்வதே வெற்றி.”
— என். ஹரன்
கருத்துகள் இல்லை