நகச்சுத்தியை குணமாக்கும் எளிய வழி முறை!
நகம் என்றாலே பாலீஷ் போட ஒரு அழகான பாகம் என்ற அளவில்தான் பெரும்பாலோர் புரிந்து வைத்திருக்கிறார்கள். நகம் என்பது அழகுக்காக மட்டுமல்ல. அது ஒரு அத்தியாவசிய உறுப்பு. நகச்சுத்தி வரும்போது நகத்தில் கட்டுப் போட்டுக்கொண்டு வீட்டுப் பூட்டைத் திறந்து பாருங்கள். அப்போது புரியும், நகத்தின் அருமை.
நம் உடல் ஒரு அதிசயம், அதனால் தான் நம்மளுக்கு உடம்பு சரியில்லை என்றால் எதாவது ஒரு விதத்தில் அதை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கும். அந்த வகையில் நகங்களில் ஏற்படும் சில மாற்றங்கள் நம் உடல் நோய்க்கான அறிகுறிகள் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
விரலுக்கு ஒரு கவசம்போல அமைந்துள்ள நகமானது 'கரோட்டீன்' எனும் புரதப்பொருளால் ஆனது.
கண்ணில் பளிச்சென்று தெரிகிற, வழுவழுப்பான பகுதிதான் நகத்தின் உறுதியான பாகம்.
இதற்குள் நரம்புகளோ, ரத்தக்குழாய்களோ இல்லை. இந்த வெளிநகத்துக்கு அடியில் ரத்த ஓட்டம் உள்ள திசுக்களால் ஆன ஒரு படுக்கை இருக்கிறது.
இதற்கு நகத் தளம் (Nail bed) என்று பெயர். நகத்துக்கு உணவும் உணர்வும் உயிரும் தருகின்ற ஒரு உயிர்ப்படுக்கை இது. இந்த நகத்தளத்தைக் கடந்து வளரும் நகப்பகுதி செத்துப்போய்விடும். இதனால்தான் நுனி நகத்தை வெட்டும்போது நமக்கு வலிப்பதில்லை.
நம்மில் சிலர் நக சுத்தியால் அவதிப்பட்டிருப்போம் அல்லது நக சுத்தியால் அவதிப்பட்டவர்களைப் பார்த்திருப்போம். நக சுத்தி என்பது பூஞ்சை அல்லது பாக்டீரியாவால் நகம் பாதிக்கப்படுவது ஆகும். இதை உடனடியாக சரி செய்யாவிட்டால், செப்டிக் ஆகி விரலுக்கே ஆபத்தாக முடியும்.
நகத்துக்கு வெளியே இருக்கும் பாக்டீரியா போன்ற கிருமிகள் உள்ளுக்குள் நுழைந்து அது நாளடைவில் கொஞ்சம் கொஞ்சமாக சீழ் கோர்க்க ஆரம்பித்து, ஒரு கட்டத்தில் நகச்சுற்றாக மாறிவிடுகிறது. அவ்வப்போது நகங்களை வெட்டிக் கொள்ள வேண்டும். பாக்டீரியா, பூஞ்சைகள் தேங்காத வண்ணம் அடிக்கடி கை கழுவி சுத்தமாக இருக்க வேண்டியது மிக அவசியம்.
நம் வீட்டில் இருக்கும் சில சாதாரணப் பொருட்களைக் கொண்டே நக சுத்தியை எளிதில் குணப்படுத்த முடியும்.
கற்றாழை
மிக எளிதாக கிடைக்கக் கூடிய கற்றாழைக்கு நக சுத்தியை ஆற்றும் சக்தி உள்ளது. கற்றாழை சாறுடன் மஞ்சள் தூள் அரைத்து, விளக்கெண்ணைய் விட்டு சூட வைத்து, அதை நகத்தில் பூசினால் நகசுத்தி குணமாகும்
விக்ஸ்
இது நக சுத்திக்கு ஒரு எளிய தீர்வாகும். விக்ஸ் வேப்போரப்பை பாதிக்கப்பட்ட நகத்தில் நன்றாகத் தேய்த்து, அப்படியே காற்றில் ஆற விட வேண்டும் அல்லது பாண்ட்-எய்டு கூட பயன்படுத்தலாம். காலை மற்றும் இரவு நேரங்களில் இச்சிகிச்சையை செய்யலாம்.
வேப்ப எண்ணெய்
வேப்ப எண்ணெயை பாதிக்கப்பட்ட நகத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நன்றாக மசாஜ் செய்து தேய்க்க வேண்டும். பூஞ்சைக்கு எதிரான பண்புகள் வேப்ப எண்ணெயில் மிகுந்து இருப்பதால் இதனால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
உப்பு நீர்
உப்பு நீரில் பாதிக்கப்பட்ட விரலை வைத்தாலும், நக சுத்தி சரியாகும். சாதாரண கல் உப்பை கரைத்து அந்த நீரையே இதற்கு பயன்படுத்தலாம். கடல் நீரில் கால் நனைத்தாலும் நக சுத்தி சரியாகும். பின்னர். காலைத் துடைத்து விட்டு அந்த இடத்தில் வினிகரை தடவ வேண்டும்.
சோடா உப்பு
சோடா உப்பு பசையை நக சுத்தி வந்த இடத்தில் தடவினால், அதில் உள்ள அலகலைன் பூஞ்சைகளை வளரவிடாமல் தடுத்து நக சுத்தியை குணமாக்குகிறது.
மஞ்சள்
மஞ்சளை விட மருத்துவம் எதுவும் இல்லை என்றே சொல்லலாம். நக சுத்திற்கு எளிமையான ஒரு மருத்துவம் என்னவென்றால், நீரில் மஞ்சளை கலந்து நகத்தில் தடவினால் போதும். *நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்*
கருத்துகள் இல்லை