இலங்கை இளையோர் அணிக்கு பின்னடைவு!!
மேற்கிந்திய தீவுகள் 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கு எதிரான 5ஆவது இளையோர் ஒருநாள் சர்வதேச போட்டியில் 2 விக்கெட்டுகளால் தோல்வியுற்ற இலங்கை இளையோர் அணி ஏழு போட்டிகளைக் கொண்ட இந்தத் தொடரில் 2–3 என பின்னடைவைச் சந்தித்துள்ளது.
அன்டிகுவாவில் நேற்று முன்தினம் (09) நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி 48 ஓவர்களில் 172 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஆரம்ப வீரர் திமன்த மஹவிதான அதிகபட்சமாக 38 ஓட்டங்களைப் பெற்றார்.
இந்நிலையில் பதிலெத்தாடவந்த மேற்கிந்திய தீவுகள் இளையோர்களுக்கு விக்னேஷ்வரன் ஆகாஷ் மீண்டும் ஒருமுறை நெருக்கடி கொடுத்தார். யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரியின் சுழல் வீரரான ஆகாஷ் 10 ஓவர்களுக்கும் 30 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
என்றபோதும் கடைசி வரை போராடிய மேற்கிந்திய தீவுகள் அணி 48.4 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கான 173 ஓட்டங்களை எட்டியது.
இலங்கை இளையோர்கள் இந்த ஒருநாள் தொடரை கைப்பற்ற வேண்டுமாயின் எஞ்சியுள்ள இரு போட்டிகளிலும் வெல்வது கட்டாயமாகும். இரு அணிகளுக்கும் இடையிலான ஆறாவது ஒருநாள் போட்டி இதே அன்டிகுவா மைதானத்தில் நாளை (12) நடைபெறவுள்ளது.
கருத்துகள் இல்லை