போலி அரசியல் தலைமைகளும் , தியாகத் தலைமைகளும்!
சம்பந்தர் என்று ஒரு அரசியல்வாதி இருந்தார். 2009 இற்குப் பிறகு தமிழர்களின் அரசியலை தீர்மானிக்கும் ஒரே சக்தி என்று உள்ளக/ வெளியக சக்திகளினாலும் அவரது அல்லக் கைகளினாலும் ஊதிப் பெருபிக்கப்பட்டு உலா வந்தவர் அவர் மடிந்த போது இந்த இனத்திற்கு என்ன விட்டுச் சென்றார் என்பது யாருக்குமே தெரியவில்லை. கடந்த வருடம் அவர் மறைந்து ஓரிரு வாரங்களிலேயே அப்படி ஒருத்தர் வாழ்ந்த தடயம் எதுவுமின்றி அவரது அடிப்பொடிகள் உட்பட அனைவராலும் மறக்கப்பட்டார். அரசியல் மொழியில் சொன்னால் வரலாற்றிலிருந்து தூக்கியெறியப்பட்டார்.
அண்மையில் அவரது முதல் வருட நினைவு நாள் வந்த போது ஒரு பதிவு எழுத ஆளில்லை. ( கவனிக்கவும் திட்டிக் கூட ) தீபம் ஏற்ற ஒரு நாதியில்லை. அவ்வளவு ஏன் அவரது நினைவு நாள் அது என்று கூட ஒருத்தருக்கும் தெரியவில்லை. நாம் நக்கலடித்த பிறகு தமிழரசுக் கட்சிக் கிழடுகள் நாலு பேர் நாலு நாள் கழித்து ஒரு கூட்டம் போட்டார்கள். இதை வரலாற்று மறதி என்பதை விட வரலாற்றின் பழி வாங்கல் என்றுதான் சொல்ல வேண்டும்.
விடுதலைப் போராட்டத்திற்கு முன்பே அரசியல்வாதியான ஒருத்தரின் 60 - 70 வருட கால வரலாற்றை ஒரு இனம் ஒரேயடியாகத் தூக்கிக் கடாசுவதென்பது இலேசான விடயம் அல்ல.
அதன் பின்னணியும், வரலாறும், உளவியலும் கனதியானது.
🟥திலீபன்.
இருபத்தி மூன்று வருடங்களே உயிர் வாழ்ந்து கிட்டத்தட்ட நான்கு வருடங்கள் மட்டுமே அரசியலில் இருந்த ஒருத்தனை இந்த இனம் நாலு தசாப்தங்கள் நெருங்கும் தருணத்திலும் உணர்வுபூர்வமாக மட்டுமல்ல உக்கிரமாகவும் நினைவு கூர்ந்து கொண்டிருக்கிறது. நினைவு நாள் அன்று மட்டுமல்ல அந்த மாதம் முழுவதும் குறிப்பாக பன்னிரு நாளும் எங்கும் 'திலீப' மயம்.
நேரடி இன அழிப்பு முடிந்து கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு தொடரும் சூழலில் - அதுவும் தோற்கடிக்கப்பட்ட, வீழ்த்தப்பட்ட இனம் என்று தோல்வி உளவியலை விதைத்து - குறிப்பாக ( புலி) நீக்க, நினைவு அழிப்பு அரசியலை எதிரிகள் உள்ளும், வெளியுமாக நிகழ்த்திக் கொண்டிருக்கும் புறச் சூழலில் ஒவ்வொரு வருடமும் கடக்கக் கடக்க நினைவு கூர்தல் உக்கிரமடைகிறதே ஒழிய நீர்த்தபாடில்லை.
இதுதான் திலீபம் எனும் கோட்பாட்டுத் - தத்துவச் செறிவு. அதுதான் போராடும் தேசிய இனங்களின் நவீன விடுதலைக் கோட்பாடான நந்திக்கடல் 'திலீபம்' குறித்துப் பெருமிதம் கொள்கிறது. தனது கோட்பாடுகளின் மையத்தில் 'திலீபத்தை' நிறுத்தியிருக்கிறது.
ஆனால் சம்பந்தர் போன்ற எதிரிகளின் நிகழ்ச்சி நிரலில் இயங்கும் போலித் தலைவர்கள் 'இனத்தின் பொக்கிசம்' என்ற பம்மாத்து இன்று வரையும் தொடர்கிறது.
ஆனால் இனத்தின் அரசியல் உள்ளடக்கம், வரலாறு, தொடர்ச்சி, பண்பாடு, உளவியல், தலைமை என்பது திலீபன்களும், மில்லர்களும், அங்கயற்கண்ணிகளும் தான்.
இதை இன்னும் தூலமாக விளக்கினால் இந்தத் 'தியாகிகளின்' கொள்கலனான பிரபாகரனியம்தான் இனத்தின் பொக்கிசம்.
#திலீபம்💕
#நந்திக்கடல்💕
#பிரபாகரனியம் 💕

.jpeg
)





கருத்துகள் இல்லை