ஐ.நா.வில் பலத்த எதிர்ப்புக்கிடையே பாலஸ்தீன ஜனாதிபதிக்கு காணொளியில் உரையாற்ற அனுமதி!
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் காணொளியின் ஊடாக உரையாற்ற அனுமதிக்கும் தீர்மானம் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது. அவருக்கு நியூயோர்க் வருவதற்கு அமெரிக்கா விசா மறுத்ததாலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தீர்மானம், 145 நாடுகளின் ஆதரவுடனும், 5 நாடுகளின் எதிர்ப்புடனும், 6 நாடுகளின் வாக்களிப்பின்மையுடனும் நிறைவேற்றப்பட்டுள்ளது. அடுத்த வாரம் நடைபெறவுள்ள உயர் மட்ட வருடாந்திரக் கூட்டத்தில், தொலைவிலிருந்து உரையாற்ற அப்பாஸுக்கு இது வழி வகுத்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் சில நாடுகள் இந்த நடவடிக்கையை எதிர்த்தன.
அப்பாஸ் மற்றும் சில பாலஸ்தீன அதிகாரிகளுக்கான விசாவை அமெரிக்கா இரத்துச் செய்தமைக்கு, உறுப்பு நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஐ.நா. தலைமையகத்தை நடத்தும் நாடாக அமெரிக்காவுக்கு உள்ள பொறுப்புகளை இது குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக பல நாடுகள் தெரிவித்துள்ளன.
அப்பாஸ் நேரில் கலந்துகொள்ள திட்டமிட்டிருந்ததுடன், பிரான்ஸ் மற்றும் சவூதி அரேபியாவினால் கூட்டப்பட்ட இரு-அரச தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளிலும் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், விசா மறுக்கப்பட்டதால், காணொளி உரையை அனுமதிக்கும் அசாதாரணமான நடவடிக்கையை மேற்கொள்ள பாலஸ்தீன அதிகாரிகள் கோரினர்.
பிரான்ஸ், ஐக்கிய இராச்சியம் மற்றும் கனடா உட்பட பல மேற்கு நாடுகள், வரும் வாரங்களில் பாலஸ்தீனத்திற்கு உத்தியோகபூர்வ அங்கீகாரத்தை வழங்கத் தயாராகி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், பாலஸ்தீன அரசின் அந்தஸ்து குறித்த சர்வதேச கவனம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை