வைத்திய கலாநிதி ராஜினி திரணகம இன்று சுட்டுக் கொல்லப்பட்ட நாள்!
புலி எதிர்ப்பு, புலி ஆதரவு அரசியலை மட்டும் கையில் எடுப்பதனால் மக்களை விடுதலை செய்ய முடியாது!
1989, September 21 ஆம் திகதி ராஜினி அவர்கள் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்டார். அவரது மரணம் 36 வருடங்களைக் கடந்து செல்கிறது.
இந்திய அமைதிப்படையின் பிரசன்னம், இந்திய அமைதிப்படையுடன் சேர்ந்தியங்கிய அயுதக் குழுக்களின் அடாவடித்தனங்கள், கொலைகள், ஆயுதம் தாங்கிய புலிகளின் மறைமுக தாக்குதல்கள், கொலைகள் என பயங்கரமானதொரு சூழல் நிலவிய காலம் அது.
வாய்திறப்பதற்கே நடுக்கமடையும், ஜனநாயக மறுப்புடன் கூடிய எதேச்சாதிகார சூழல் அது.
அந்த சூழலில் அனைத்து ஜனநாயக மறுப்புளுக்கும் எதிராக குரல் எழுப்பிய, வைத்திய கலாநிதி ராஜினி திரணகம ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டார்.
அந்தக் கொலையை கண்டித்து, யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட ஜனநாயக விரும்பிகளால் யாழில் பாரியதொரு எதிர்ப்பு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது.
அந்த எதிர்ப்புப் பேரணியில், வானைப் பிளக்கும் கோசங்கள், சுலோகங்கள், கண்டன அறிக்கைகள் என எதிர்ப்புக்குரல்களை வெளிப்படுத்திய ஒலிபெருக்கி தாங்கிய வாகனம் ஒன்று பேரணியின் நடுவே நகர்ந்துகொண்டிருந்தது.
ஊர்வலம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை பிரதான ஒலிபெருக்காளராக (அறிவிப்பாளராக) போராட்ட களத்தில் இருந்தேன். அப்போது யாழ் பல்கலைக்கழகத்தில் நான் முதலாம் வருட மாணவன். இப்போதும் அந்த நினைவுகள் ஞாபகத்தில் வந்து தொலைகின்றன.
அந்த ஞாபகம் மட்டும் அல்ல, இப்படி ஆயுதம் தாங்கிய அனைத்து அமைப்புகளாலும், அரச படையினராலும் பலியெடுக்கப்பட்ட பல புத்திஜீவிகள், சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், தன்னார்வ தொண்டு அமைப்புகளின் பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்கள், எதேட்சாதிகராங்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர்கள், இடதுசாரிகள், சந்தேகத்தின் பேரில் கொல்லப்பட்ட அப்பாவிகள் என பல கொலைகளை நேரில் கண்டும், கொலைச் சூழலுக்குள் வாழ்ந்தும் மனம் வெதும்பியிருக்கிறேன். என்போன்ற பலரும் துயரமடைந்திருக்கிறார்கள்.
ஆயுதம் தாங்கிய அனைத்து விடுதலை இயக்கங்களாலும், மேற் கொள்ளப்பட்ட இவ்வாறான அனைத்து கொலைகளும், கண்டிக்கப்பட வேண்டியவை. சுயவிமர்சனம் செய்யப்பட வேண்டியவை.
அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை உள்ளிட்ட அனைத்து மனிதாபிமானமற்ற கொடூரங்களும் கண்டிக்கப்பட வேண்டியவை, பொறுப்புக் கூறலுக்கு உட்படுத்த வேண்டியவை.
குறிப்பாக தனியே புலி எதிர்ப்பு அரசியலுக்காக புலிகளால் கொல்லப்பட்டவர்களது நினைவு தினங்களை மட்டும் முன்னிலைப்படுத்துவதால் ஏனைய விடுதலை இயக்கங்கள் செய்த கொலைகள் நியாயப்படுத்தக் கூடியவை அல்ல.
அதுபோல் அரச படைகளால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள், வன்புணர்வக்குப்பின் மேற்கொள்ளப்பட்ட கொலைகளும் மறைக்கப்பட, மறக்கப்பட முடியாதவை.
இங்கே கொல்லப்பட்டவர்களின் பட்டியலை வரிசைப்படுத்துவது எனது நோக்கமும் அல்ல. உதாரணமாக இரண்டு கொலைகளை இங்கு சொல்ல முயல்கிறேன்.
காரணம் முற்போக்கான இயக்கம், பல அறிவுஜீவிகள் இருந்த இயக்கம், சமூகத்தில் தனகென ஒரு இடத்தை கொண்டிருந்த இயக்கமாக பாலகுமாரன் அவர்கள் தலமையில் இயங்கிய ஈரோஸ் இயக்கம் அக்காலத்தில் பலராலும் பொற்றப்பட்டது.
ஆனால் அந்த EROS இயக்கம் TRRO என்று அழைக்கப்பட்ட அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்தின் ஸ்தாபகர் கந்தசாமி அவர்களை, 1988 June 19ல் கடத்திச் சென்று சுட்டுக்கொன்றது.
இவர் லண்டனில் இருந்து நாடு திரும்பி அகதிகள் அகதிகள் புனர்வாழ்வுக் கழகத்தை ( (NGO) ஸ்தாப்பித்து சிறப்பாக செயலாற்றியவர்.
இதேபோல் அந்த EROS இயக்கம் இன்னும் ஒரு அபத்தத்தை நிறைவேற்றியது. சர்வோதயம் அமைப்பின் இணைப்பாளர் கதிரமலையைக் கடத்திச்சென்று சுட்டுக் கொன்றது.
அந்தக் கொலை குரூரமானது. அவரையே வாகனத்தில் அழைத்துச்சென்று அவருக்கு அளவான பிரேதப் பெட்டியை அவர் மூலமாகவே கொள்வனவு செய்து, அந்தப் பெட்டியில் வைத்து ஈரோஸ் இயக்கம் அவரைக் கொலை செய்தது.
இங்கு ஈரோஸ் இயக்த்தை உதாணம் எடுத்தமைக்கு காரணம் அந்த இயக்கம், அக்காலத்தில் சிறந்த விடுதலை இயக்கமாக மக்களால் கருதப்பட்டிருந்தது. அதுவே இப்படி பல கொலைகளைச் செய்தது என்றால் மற்ற விடுதலை இயக்கங்கள் பற்றி சொல்வதற்கில்லை.
இடதுசாரிச் சிந்தனையுடன் மக்கள் புரட்சியை மையமாகக் கொண்டு இயங்கிய மிகச் சிறிய இயக்கங்களான NLFT, PLFT, பாதுகாப்புப் பேரவை (பாதுகாப்புப் பேரவை மீதும் சில விமர்சனங்கள் இருந்தன ஆனால் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை) போன்ற சில விடுதலை அமைப்புகள் தவிர்ந்த ஏனைய பெரிய இயக்கங்கள், தாம் இத்தகைய கொலைகளை செய்யவில்லை என விரல் நீட்ட முடியாது. அல்லது அவ்வியக்கங்களின் அனுதாபிகள் அவர்களை நியாயப்படுத்த முடியாது.
ஆக கடந்த 40 வருட ஆயுதப் போராட்ட வரலாற்றில் இடம்பெற்ற இத்தகைய கொலைகள் குறித்து அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்கு அப்பால் விரிவான பார்வையை செலுத்த வேண்டும்.
அவைகுறித்து சுயவிமர்னங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இடம்பெற்ற கொலைகளுக்கு தயக்கம் இன்றி மன்னிப்புக் கேட்க வேண்டும்.
கொல்லப்பட்டவர்கள் அனைவரும் நினைவு கூரப்பட வேண்டும்.
அதன் மூலமே உண்மையான மக்கள் விடுதலையை நோக்கி, சமூக விடுதலையை நோக்கி, அடுத்த கட்டத்திற்கு நகர முடியும்.
தவிரவும் சுய அரசியல் இலாபங்களுக்காக தனியே புலி எதிர்ப்பு, புலி ஆதரவு அரசியலை மட்டும் கையில் எடுப்பதனால் மக்களை விடுதலைசெய்ய முடியாது.
கடந்த 2021ல் இதே நாளில் வெளியான இந்தப் பதிவை மீளப் பதிவேற்றியுள்ளேன்!
படம் – Thanks - Richard Aadhidev (FB)
#ஞாபகங்கள் #nadarajah_kuruparan #journalist #நடராஜா_குருபரன்
Born 23 February 1954
Jaffna, Sri Lanka
Died 21 September 1989 (aged 35)
Jaffna, Sri Lanka
கருத்துகள் இல்லை