இன்று மகாளய அமாவாசை!
மகாளய அமாவாசை என்பது புரட்டாசி மாதத்தில் வரக் கூடிய அமாவாசை ஆகும். மகாளய அமாவாசை அன்று செய்யக் கூடிய முன்னோர் வழிபாடு நம்முடைய பாவங்களை போக்கி, நமக்கு நன்மைகளை தருவது மட்டுமின்றி யம லோகத்தில் துன்பப்படும் நம்முடைய முன்னோர்களின் பாவங்களையும் போக்கி, அவர்களுக்கு நற்கதியை வழங்கி, பித்ருலோகத்தில் சுகமாக வாழக் கூடிய வாய்ப்பை தரக் கூடியதாகும்.
மகாளய பட்சத்தின் 15 நாட்களும், மகாளய அமாவாசை அன்றும் நாம் செய்யும் வழிபாடுகள், தானங்கள் ஆகியவற்றை ஏதாவது ஒரு வடிவத்தில் நம்முடைய முன்னோர்களே நேரடியாக பெற்றுக் கொள்வதால் நமக்கு முன்னோர்களின் ஆசிகள் கிடைத்து, அதன் மூலமாக பித்ருதோஷம், பித்ரு சாபங்கள் ஆகியவற்றில் இருந்து விடுபட்டு, பலவிதமான துன்பங்களில் இருந்தும் விடுபடுவதற்கான வாய்ப்பை கொடுக்கக் கூடியதாகும்.
மகாளய அமாவாசை வழிபாடு :
ஒரு ஆண்டில் வரும் மிக முக்கியமான மூன்று அமாவாசைகளில் ஒன்று புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை. மகாளய அமாவாசைக்கு முந்தைய 15 நாட்களையும் மகாளய பட்சம் என்கிறோம். பித்ருலோகத்தில் உள்ள நம்முடைய முன்னோர்கள் பூமிக்கும் வந்த நம்முடன் தங்கி இருந்து, நாம் செய்யும் வழிபாடுகள், தர்ப்பணம் போன்றவற்றை ஏற்றுக் கொண்டு, நமக்கு ஆசி வழங்குவதற்கான காலமாக கருதப்படுகிறது.
மகாளய பட்சத்தின் 15 நாட்களும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது சிறப்பு. அப்படி செய்ய முடியாதவர்கள் மகாளய அமாவாசை அன்று மட்டுமாவது கண்டிப்பாக தர்ப்பணம் செய்து, முன்னோர் வழிபாட்டினை முறையாக மேற்கொள்ள வேண்டும்.
இந்த ஆண்டு மகாளய பட்சம் செப்டம்பர் 08ம் தேதி துவங்கி, செப்டம்பர் 21ம் தேதி வரை உள்ளது. செப்டம்பர் 21ம் தேதியன்று மகாளாய அமாவாசை விரதம் கடைபிடிக்கப்படுகிறது.
செப்டம்பர் 21ம் தேதியன்று அதிகாலை 01.03 மணிக்கு துவங்கி, செப்டம்பர் 22ம் தேதி அதிகாலை 01.42 வரை அமாவாசை திதி உள்ளது. பித்ருக்களுக்கு காரணமான கிரகமான சூரிய பகவானுக்கு உரிய ஞாயிற்றுக்கிழமையில் மகாளய அமாவாசை வருவது இன்னும் விசேஷமானதாகும். அன்றைய தினம் காலை 10.55 மணிக்கு துவங்கி, சூரிய பகவானுக்குரிய உத்திரம் நட்சத்திரம் இருப்பதும் இன்னும் கூடுதல் சிறப்புடையதாகும். இந்த நாளில் சூரியனை சாட்சியாக வைத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது பித்ருக்களின் ஆத்மாக்களை வேகமாக திருப்தியும், மகிழ்ச்சியும் அடைய செய்யும்.
மகாளய அமாவாசை அன்று காலையில் செய்ய வேண்டியவை :
மகாளய அமாவாசை விரதம் இருப்பவர்கள் அதிகாலையிலேயே எழுந்து புனித ஆறுகள், குளங்கள் அல்லது கடலில் புனித நீராடி முன்னோர்களை வழிபட வேண்டும். சூரிய உதயத்திற்கு பிறகு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, எள்ளும் தண்ணீரும் இறைக்க வேண்டும். வீட்டில் முன்னோர்களின் படங்களுக்கு மாலை அல்லது பூ அணிவித்து, தனியாக தீபம் ஏற்றி, தீப தூப ஆராதனை காட்டி வழிபட வேண்டும். முன்னோர்களுக்கு பிடித்த சைவ உணவுகளை சமைத்து, பகல் பொழுதில் படையல் இட வேண்டும். முன்னோர்களுக்கு படையலிட்டு வழிபட்ட பிறகு, காகங்களுக்கு உணவு வைக்க வேண்டும். அதற்கு பிறகு முன்னோர்களுக்கு படையலாக இட்ட உணவை வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு சாப்பிட கொடுக்கலாம். பெரியவர்கள் யாரும் இல்லை என்றால் அமாவாசை விரதம் இருப்பவர்கள் முதலில் அந்த உணவை சாப்பிடலாம்.
மகாளய அமாவாசை தர்ப்பணம், படையல் வைக்க நல்ல நேரம் :
மகாளய அமாவாசை தர்ப்பணம் கொடுத்து, படையல் இடும் போது ராகு காலம், எமகண்டம் இல்லாத நேரத்தில் தான் செய்ய வேண்டும். அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மாலை 04.30 மணிக்கு தான் ராகு காலம் துவங்கும். அதே சமயம், பகல் 12 மணி முதல் 01.30 வரை எமகண்ட நேரம் உள்ளது. அதோடு உச்சி காலத்திற்கு முன் தர்ப்பணம் கொடுத்து விட வேண்டும் என்பதும் விதி.
தர்ப்பணம் செய்ய நல்ல நேரம் - காலை 6 மணி முதல் 11 மணி வரை
படையல் இடுவதற்கான நல்ல நேரம் - காலை 11 மணி முதல் பகல் 12 மணி வரை
பகல் 12 மணிக்குள் படையல் இட்டு வழிபட முடியாதவர்கள் பகல் 01.35 மணிக்கு பிறகு முன்னோர்களுக்கு படையலிட்டு வழிபடலாம்.
மகாளய அமாவாசையில் கண்டிப்பாக செய்ய வேண்டியது :
காலையில் தர்ப்பணம் கொடுக்க முடியாவிட்டால் மூன்று தலைமுறை முன்னோர்களின் பெயர்களை சொல்லி, காசி மற்றும் கயா ஆகிய தலங்களை மனதில் நினைத்துக் கொண்டு, எள்ளும் தண்ணீரும் இறைத்து வழிபட வேண்டும். சூரிய பகவானுக்கு தண்ணீர் விட்டு வழிபட வேண்டும். மகாளய அமாவாசை அன்று அந்தணர்கள், ஏழைகள் என யாருக்காவது தானம் அளிக்க வேண்டும். குறைந்தபட்சம் இரண்டு பேருக்காவது அன்னதானம் வழங்க வேண்டும். மாடுகளுக்கு அகத்திக்கீரை சாப்பிடக் கொடுப்பது நல்லது. மாலை 6 மணிக்கு பிறகு அருகில் உள்ள விநாயகர் கோவில் அல்லது சிவன் கோவிலுக்கு சென்று நல்லெண்ணெயில் அகல் விளக்கில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இப்படி செய்வதால் முன்னோர்கள் மனம் மகிழ்ந்து, நமக்கு ஆசி வழங்குவார்கள். இதனால் நம்முடைய குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சியும், நன்மைகளும், நிம்மதியும், வளர்ச்சியும் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை.
கருத்துகள் இல்லை