பிரான்ஸ் பாரிஸ் நகரில் பரபரப்பு!
ஓட்டுநர் கோப்பி குடிக்கச் சென்ற நேரம் .. RATP பேருந்தைத் திருடி 13 கி.மீ ஓட்டிச் சென்ற வீடில்லாத நபர். ஆரவாரமின்றி , போக்குவரத்து விதிகளை மதித்து அமைதியாக ஓட்டிச் சென்றதாகப் போலீஸ் தகவல்!
பாரிஸில், ஓட்டுநர் தனது இடைவேளைக்காகப் பேருந்தை விட்டு இறங்கியபோது, வீடில்லாத நபர் ஒருவர் அந்தப் பேருந்தைத் திருடிச் சுமார் 13 கிலோமீட்டர் தூரம் ஓட்டிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று திங்கட்கிழமை அதிகாலை 5 மணியளவில், பாரிஸின் Montparnasse தொடருந்து நிலைய முனையத்தில், RATP நிறுவனத்திற்குச் சொந்தமான இரவு நேரப் பேருந்தின் (Noctilien) ஓட்டுநர், தனது இடைவேளைக்காகப் பேருந்தை நிறுத்திவிட்டு கோப்பி அருந்தச் சென்றுள்ளார். அவர் திரும்பி வந்து பார்த்தபோது, பேருந்து அங்கே இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனடியாக, அவர் RATP-யின் கட்டுப்பாட்டு மையத்தைத் தொடர்புகொண்டு விபரத்தைக் கூறியுள்ளார். ஜிபிஎஸ் மூலம் பேருந்து எங்கிருக்கிறது என்று பார்த்தபோது, அது நகரைச் சுற்றியுள்ள பிரதான சுற்றுச்சாலையில் (Périphérique) சென்று கொண்டிருப்பது தெரியவந்தது.
காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டு, அவர்கள் பேருந்தைப் பின்தொடர்ந்தனர். இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், பேருந்தைத் திருடிச் சென்ற அந்த நபர், எந்தவிதமான பதற்றமும் இல்லாமல், போக்குவரத்து விதிகளைச் சரியாகக் கடைப்பிடித்து, மிகவும் அமைதியாகப் பேருந்தை ஓட்டிச் சென்றுள்ளார். சுமார் 13 கிலோமீட்டர் பயணத்திற்குப் பிறகு, காலை 5:30 மணியளவில் Bagnolet பகுதியில் வைத்துப் பேருந்தைக் கைப்பற்றிய காவல்துறை அந்த நபரைக் கைது செய்தது.
விசாரணையில், அவர் வீடில்லாதவர் என்றும், அவர்மீது இதற்கு முன் எந்தக் குற்றப் பதிவுகளும் இல்லை என்றும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து RATP தொழிற்சங்கப் பிரதிநிதியான அஹமது பெர்ரஹால் கூறும்போது, "இந்தச் செய்தி கேட்பதற்கு வேடிக்கையாக இருக்கலாம், ஆனால் இது மிகவும் பாரதூரமான விஷயம். பேருந்தை இயக்குவதற்கு அடிப்படை நுட்பங்கள் தெரிந்திருக்க வேண்டும். அது கார் ஓட்டுவது போன்றதல்ல. ஒரு பேருந்து சுமார் 12 டன் எடை கொண்டது. அவர் யாரையாவது காயப்படுத்தியிருக்கலாம் அல்லது ஒரு பெரிய விபத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அதிர்ஷ்டவசமாக எதுவும் நடக்கவில்லை," என்றார்.
மேலும், இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க, பேருந்துகளில் திருட்டைத் தடுக்கும் கருவிகளைப் பொருத்த வேண்டும் என்றும், இரவு நேரங்களில் பேருந்து முனையங்களுக்குப் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
RATP நிர்வாகம் இந்தச் சம்பவம் தொடர்பாகப் புகார் அளித்துள்ளது. பேருந்து திருடப்பட்டபோது அதில் பயணிகள் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மே 2024-ல், RATP-யின் முன்னாள் ஊழியர் ஒருவர், தனது வேலை மிகவும் பிடித்துப்போனதால், பேருந்தைத் திருடிப் பயணிகளுடன் இரண்டு மணி நேரம் ஓட்டிச் சென்ற சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை