செங்கோட்டையன் பதவி பறிப்பு!

 


அதிமுக கட்சி பதவிகளில் இருந்து செங்கோட்டையனை நீக்கியது சர்வாதிகாரத்தின் உச்ச நிலை எனவும், இச்செயலுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.


அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் இணைக்க நடவடிக்கை வேண்டும் எனவும், அதற்காக கட்சி தலைமைக்கு 10 நாட்கள் கெடு விதிப்பதாகவும் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், செங்கோட்டையனை அதிமுக ஈரோடு புறநகர் மாவட்டச் செயலாளர் மற்றும் அமைப்பு செயலாளர் பொறுப்புகளிலிருந்து நீக்குவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அதிரடியாக அறிவித்தார். இந்த செயல், அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது


இந்நிலையில், தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று தான் செங்கோட்டையன் கூறி வந்தார். மாறுபட்ட கருத்தை கூறவில்லை. யார் மீதும் அவர் குற்றச்சாட்டை வைக்கவில்லை. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என அவர் தெரிவித்த கருத்துக்கு இவ்வளவு பெரிய தண்டனையை தர வேண்டுமா? என தமிழக மக்கள் அனைவரும் கேட்கிறார்கள்.


அதிமுக இரண்டாக உடைந்ததில் இருந்து, தொடர்ந்து 11 தோல்விகளை சந்தித்துள்ளது. இது தேவைதானா? என கட்சி தொண்டர்களும், மக்களும் கேள்வியெழுப்புகின்றனர். இதிலிருந்து மீள வேண்டும் என்றால், அதிமுகவினர் ஒன்றிணைய வேண்டும் என்ற எண்ணம் தொண்டர்கள் மனதில் உள்ளது.

இதனைதான் செங்கோட்டையனும் தெரிவித்தார். ஆனால், செங்கோட்டையனின் கருத்துக்களை புறந்தள்ளிவிட்டு, அவரை கட்சியின் அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கியது சர்வாதிகாரத்தின் உச்சநிலை. இந்த செயலுக்காக, எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்," எனத் தெரிவித்தார்.


மேலும் பேசிய அவர், “கட்சியின் விதிமுறைகளுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது தான் ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார். ஆனால், அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று கூறியவர்கள் மீது எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கூட நடவடிக்கை எடுத்ததில்லை. அதிமுகவை தொண்டர்கள் இயக்கமாக மாற்றியது எம்ஜிஆர், அதிமுகவை யாராலும் வெல்ல முடியாத இயக்கமாக மாற்றியவர் ஜெயலலிதா. இன்று முக்கிய தலைவர்கள் பிரிந்து இருப்பதால், அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.


எனவே, அதிமுக தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதே தமிழ்நாடு முழுவதும் உள்ள தொண்டர்களின் மனக்குமுறலாக உள்ளது. அதனை அவர்கள் தேர்தல் சமயத்தில் வெளிப்படுத்துவார்கள். செங்கோட்டையனின் ஒருங்கிணைப்பு முயற்சி வெற்றி பெற என்னுடைய வாழ்த்துகள். கெடு முடிந்த 10 நாட்களுக்கு பிறகு, செங்கோட்டையனை சந்திப்பேன்” என ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.