'எம்ஜிஆர் என்னிடம் சொன்னது இது தான்''!

 


அதிமுக மூத்த நிர்வாகிகளில் ஒருவரும், தமிழக முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் மீதான நடவடிக்கையை சசிகலா கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், எம்ஜிஆர் தன்னிடம் சொன்னதை உடனே செயல்படுத்திக் காட்டியதாகவும் சசிகலா கூறி பரபரப்பை எகிறவிட்டுள்ளார்.


அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை மீண்டும் சேர்க்க வலியுறுத்தி, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று (செப்டம்பர் 5) செய்தியாளர்களை சந்தித்து பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு திடீரென கோரிக்கை விடுத்து 10 நாள் காலக்கெடுவையும் விதித்தார். இதற்கு பதிலடி தருகிற வகையில் செங்கோட்டையன் வகித்து வந்த கட்சிப் பொறுப்புகளை எடப்பாடி பழனிசாமி பறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


சசிகலா அறிக்கையில் கூறியிருப்பது என்ன?


இந்நிலையில் செங்கோட்டையன் மீதான நடவடிக்கையை ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:


அதிமுகவின் மூத்த முன்னோடியும், தமிழக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான செங்கோட்டையன் மீதும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுப்பது அறிவார்ந்த செயலாகாது. இது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது. இது, கட்சி நலனுக்கு உகந்தது அல்ல. அனைவரும் ஒன்றிணைய வேண்டும். மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்ற செங்கோட்டையனின் நேர்மையான எண்ணத்தை எண்ணிப் பார்க்க வேண்டும்.


இரவு உணவு கேட்டு வாங்கி சாப்பிட்ட எம்ஜிஆர்


அதிமுகவில் இருந்து எஸ்.டி.சோமசுந்தரம் பிரிந்து சென்ற போது அவரை இழந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில், அன்றைய தினம் தான் ஒரு முதலமைச்சராக இருந்த போதும் எம்ஜிஆர் அவரது இல்லத்திற்கே நேரில் சந்திக்க சென்றார். அவர் வீட்டில் இல்லை என்ற பொய்யான தகவல் சொல்லப்பட்ட போதும் சிறிது நேரம் வீட்டிலேயே காத்திருந்து அவரது மனைவியிடம் இரவு உணவு கேட்டு வாங்கி சாப்பிட்டுவிட்டு திரும்பினார்.


மேலும் அவரை சமாதானப்படுத்த வேண்டும். மீண்டும் கட்சிக்கு அழைத்து வர வேண்டும் என என்னிடமும் எம்ஜிஆர் கூறினார். இதை உடனே செயல்படுத்தியதையும் இந்த நேரத்தில் எண்ணிப் பார்க்கிறேன்.


கருணாநிதி கண்ட கனவை மொத்தமாக கலைத்தோம்


எம்ஜிஆர் மறைவிற்கு பின்னர் கட்சி சந்திக்காத பிளவா? எத்தனையோ பேர் அன்றைக்கு அதிமுகவிற்கு இனி எதிர்காலம் இல்லை. அதிமுகவின் கதை முடிந்து விட்டது. என்றெல்லாம் சொன்னார்கள். மறைந்த திமுக தலைவர் கருணாநிதி இதே கனவோடு இருந்தார். ஆனால் என்ன நடந்தது? கருணாநிதி கண்ட கனவை மொத்தமாக கலைத்தோம். இது நம்மால் எப்படி சாத்தியப்பட்டது?


ஒரு பிரிந்த கட்சியை எப்படி சேர்ப்பது? என்ற கலையை அன்றே நான் தெளிவாக கற்று கொண்டு விட்டேன். இரு அணிகளாக பிரிந்தவர்களை மீண்டும் ஒன்றிணைத்த பிறகு அனைவரையும் நம் கட்சிக்காரர் என மட்டும் தான் பார்த்தோமே தவிர, இவர் இந்த அணியை சேர்ந்தவர். அவர் அந்த அணியை சேர்ந்தவர் என்றெல்லாம் வேற்றுமைப்படுத்தி பிரித்து பார்த்ததில்லை. இதை நாங்கள் கற்றுக் கொண்டது எம்ஜிஆரிடம் தான்.


திமுகவை வலுவிழக்க செய்வதே இன்றைக்கு குறிக்கோள்


எம்ஜிஆர் அனைத்தையும் கற்று தேர்ந்தவர். ஒன்று மட்டும் அவருக்கு தெரியாது. என்னவென்றால், யாரையும் பிரித்து பார்க்கமாட்டார். சமமாக பார்ப்பார். யாரையும் துண்டாட மாட்டார். இதைத் தான் நாங்கள் அன்றைக்கு கடைப்பிடித்தோம். அதில் வெற்றியும் பெற்றோம். திமுக கட்சியை வலுவிழக்க செய்வதே இன்றைக்கு நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு நாமே அவர்களுக்கு இடம் அளித்து விடக்கூடாது.


மேலும் திமுகவினரின் சூழ்ச்சிகளுக்கு யாரும் இரையாகிடாமல் கட்சி நலனையும், மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு நமது ஒவ்வொரு செயல்களும் இருக்க வேண்டும். அவர்கள் தான் அதிமுகவின் உண்மையான ரத்தத்தின் ரத்தங்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும். இது தான் நமது இருபெரும் தலைவர்கள் நமக்கு கற்று கொடுத்த பாடம் ஆகும்.


பாடல் வரிகள் வாயிலாக எம்ஜிஆர் சொன்ன கருத்து


"சிந்தித்து பார்த்து செய்கையை மாத்து.. சிறுசா இருக்கையில் திருத்திக்கோ.. தவறு சிறுசா இருக்கையில் திருத்திக்கோ" என்ற எம்ஜிஆரின் பாடல் வரிகளுக்கேற்ப யாராக இருந்தாலும், தாங்கள் செய்கின்ற தவறை திருத்திக்கொள்ள வேண்டும். அது தான் அனைவருக்கும் நல்லது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.


எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரை தலைவர்களாக ஏற்றுக் கொண்டு அவர்களது கொள்கைகளை பின்பற்றுகிற ஒவ்வொரு தொண்டரும் நமது கட்சிக்கு சொந்தக்காரர்கள் தான். அவர்கள் எத்தனை பிரிவுகளாக பிரிந்து நின்றாலும், அனைவருக்கும் இருக்கும் ஒரே ஒற்றுமை, மக்கள் விரோத திமுகவை எதிர்ப்பது தான்.


தமிழக மக்களின் நலனை கருத்தில் கொண்டு வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் கண்டிப்பாக ஏற்பட வேண்டும். இதற்கு ஒன்றுபட்ட வலிமைமிக்க அதிமுக தான் ஒரே தீர்வு. எனவே, அனைவரையும் ஒன்றுப்படுத்தி இயக்கத்தை கண்டிப்பாக வெற்றிப் பாதைக்கு கொண்டு செல்லவும், திமுக தலைமையிலான மக்கள் விரோத அரசை வீட்டுக்கு அனுப்பி மக்கள் வாழ்வில் ஒளியேற்றிடவும் ஒன்றுபடுவோம்.


இவ்வாறு சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.