இலங்கையை 80 ரன்களில் சுருட்டிய ஜிம்பாப்வே!

 

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, டி20 தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.


ஆசியக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில், இலங்கை அணி ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த ஒருநாள் தொடரில் இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் தொடரை வென்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது.


இந்த தொடரின் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்ற நிலையில், தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இரண்டாவது போட்டி நேற்று (செப்டம்பர் 6) ஹராரேவில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி பேட்டர்கள் ஜிம்பாப்வேவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.


80 ரன்னில் ஆல் அவுட்


இதில் அதிகபட்சமாக கமில் மிஷாரா 20 ரன்களையும், கேப்டன் சரித் அசலங்கா 18 ரன்களையும், தசுன் ஷனகா 15 ரன்களையும் எடுத்ததைத் தவிர்த்து மற்ற எந்த வீரரும் இரட்டை இலக்க ரன்களைக் கூட எட்ட முடியாமல் ஏமாற்றமளித்தனர். இதனால் இலங்கை அணி 17.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 80 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதன் மூலம் அந்த அணி டி20  கிரிக்கெட்டில் தங்களது இரண்டாவது மிகக்குறைந்த ஸ்கோரையும் பதிவுசெய்தது. முன்னதாக கடந்தாண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில், இலங்கை அணி 77 ரன்களில் ஆல் அவுட்டானதே அந்த அணியின் மிகக்குறைந்த ஸ்கோராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜிம்பாப்வே அணி தரப்பில் அபாரமாக பந்து வீசிய கேப்டன் சிக்கந்தர் ரசா மற்றும் பிராட் எவான்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய ஜிம்பாப்வே அணிக்கு பிரயன் பென்னெட் - மருமணி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் மருமணி 17 ரன்னிலும், பென்னெட் 18 ரன்னிலும் என விக்கெட்டுகளை இழந்தனர்.

ஜிம்பாப்வே வெற்றி

அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய சீன் வில்லியம்ஸ் ரன்கள் ஏதுமின்றியும், கேப்டன் ரசா 2 ரன்னிலும், டோனி மின்யோங்கா 3 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றினர். பின்னர் இணைந்த ரியான் பார்ல் - தஷிங்கா முசேகிவா இணை இறுதிவரை களத்தில் இருந்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதில் ரியான் 20 ரன்களையும், முசேகிவா 21 ரன்களையும் சேர்த்தனர்.

இதன் மூலம் ஜிம்பாப்வே அணி 14.2 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரையும் ஜிம்பாப்வே அணி 1-1 என்ற கணக்கில் சமன்செய்துள்ளது. இந்த போட்டியில் சிறப்பாக பவுலிங் செய்த ஜிம்பாப்வே கேப்டன் சிக்கந்தர் ரசா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

நடப்பு சாம்பியனின் பரிதாப நிலை

இதனையடுத்து ஜிம்பாப்வே - இலங்கை அணிகளுக்கு இடையேயான தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி தொடரை வெல்லும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.