முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா கணிப்பு என்ன!

 


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, டி20 ஆசியக் கோப்பை தொடரில் இந்தியா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டியில் மோதுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கணித்துள்ளார்.

ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் செப்டம்பர் 9-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ளது. இந்த முறை டி20 முறையில் நடைபெறும் இத்தொடரில், மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கின்றன. குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய அணிகள் இடம்பெற்றுளன. குரூப் பி பிரிவில் ஆஃப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஹாங்காங் அணிகள் இடம்பெற்றுள்ளன. இதனால் இந்த தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்ப ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் எந்தெந்த அணிகள் மோதும் என்ற தனது கணிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதில் அவர், ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவும், ஆஃப்கானிஸ்தானும் மோத வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆகாஷ் சோப்ரா கணிப்பு

இதுகுறித்து தனது யூடியூப் பக்கத்தில் பேசியுள்ள ஆகாஷ் சோப்ரா, "இந்த முறை ஆஃப்கானிஸ்தான் அணியை எளிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. தற்போது வரையிலும் அந்த அணி எந்த பட்டங்களையும் வென்றதில்லை. ஆசியக் கோப்பை தொடரில் கூட அவர்கள் வென்றதில்லை என்பது உண்மை தான். ஆனால் அவர்கள் டி20 உலகக் கோப்பையில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். மேலும் ஒருநாள் உலகக் கோப்பையிலும் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அதனால் இந்த முறை ஆசியக் கோப்பை தொடரில் ஆஃப்கானிஸ்தான் அணி சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், "தற்சமயம் ஆஃப்கானிஸ்தான் அணி தங்களின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் வலுவாக உள்ளது. முஜீப் உர் ரஹ்மான், அல்லா கசான்ஃபர் ஆகியோரும் சிறப்பாக செயல்படுகிறார்கள். முன்னதாக இந்தியாவும், இலங்கையும் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடும் என்று கூறியிருந்தேன், ஆனால் இப்போதைய சூழலில் இந்தியாவும், ஆஃப்கானிஸ்தானும் இறுதிப் போட்டியில் விளையாட அதிக வாய்ப்புள்ளது" என்று சோப்ரா கணித்துள்ளார்.

ஆகாஷ் சோப்ரா கூறுவது போல் ஆஃப்கானிஸ்தான் அணி சமீப காலமாக ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் சமீபத்தில் கூட பாகிஸ்தானுக்கு எதிரான டி20 போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அபார வெற்றியைப் பெற்றிருந்தது. அணியின் பேட்டிங்கில் குர்பாஸ், செதிகுல்லா அடல், ஜத்ரான், நபி, ஒமர்ஸாய், குல்பதீன் ஆகியோரும், பந்துவீச்சில் ரஷித் கான், நூர் அஹ்மத், ஃபசல்ஹக் ஃபரூக்கி, அல்லா கசான்ஃபர், நவீன் உல் ஹக், முஜீப் உர் ரஹ்மான் ஆகியோரும் இருப்பதால் நிச்சயமாக எதிரணிக்கு சவாலை கொடுக்கும் என்று நம்பலாம்.

பயிற்சியைத் தொடங்கிய இந்திய அணி

ஆசியக் கோப்பை தொடருக்காக துபாய் சென்றுள்ள இந்திய அணி வீரர்கள் பயிற்சியைத் தொடங்கியுள்ளனர். இதில் இந்திய அணி எதிர்வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி தனது முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்த்து விளையாடவுள்ளது. பின்னர் செப்டம்பர் 14 ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்திய அணி, செப்டம்பர் 19 ஆம் தேதி ஓமனுக்கு எதிரான தமது கடைசி லீக் போட்டியை விளையாடவுள்ளது. அதனைத் தொடர்ந்து சூப்பர் 4 சுற்று செப்டம்பர் 20 முதல் நடைபெறும். அதில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

இந்திய அணி
இந்திய அணி (IANS)

ஆசியக் கோப்பைக்கான தொடருக்கான இந்திய அணி

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மன் கில் (துணை கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, ரிங்கு சிங்.

ஆஃப்கானிஸ்தான் அணி
ஆஃப்கானிஸ்தான் அணி (IANS)

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.