தற்கொலைகள் மற்றும் தற்கொலை முயற்சிகளை தடுத்தல்.!
சுறுசுறுப்பானவனாக மருத்துவமனையில் சுகாதார முகாமைத்துவ உத்தியோகத்தராக பணியை ஏற்ற முதல் நாளிலிருந்து, அர்ப்பணிப்புடன் பணியாற்றி வந்தான்.
திருமணத்திற்குப் பிறகு இல்லற வாழ்க்கையிலும் அமைதியும் இனிமையும் நிரம்பியதாய் இருந்தது.
வைத்தியசாலையின் பல்வேறு நிகழ்வுகளில் எப்போதும் உதவிக்கரமாக இருந்த அவன், அனைவருக்கும் ஆதரவான நண்பனாக திகழ்ந்தான். வைத்தியசாலை சேவைகளில் மிகவும் ஆர்வத்தோடு செய்து வந்தவர்.
ஆனால், எமக்கு தெரியாமல், நம் பகுதிகளில் சிலரிடம் பரவிக்கொண்டிருக்கும் ஒரு "தொற்று வியாதியான ஒன்லைன் வியாபாரம் – குறிப்பாக cryptocurrency எனும் வர்க்கத்தில் அவனும் ஈடுபட்டிருந்தான். உலகம் முழுவதும் பலர் இந்த தொழிலை செய்கின்றனர்.
Raj Suicide" – என்று அதிகாலையில் எமக்கு வந்த செய்தி, அதிக துயரத்தைத் தந்தது.
தற்கொலைகள் பல காரணங்களால் நடந்தேறுகிறது. அடிக்கடி பல இளைஞர்கள் யுவதிகள் தற்கொலைகள் செய்வது சாதாரண விடயங்களாகவிட்டது.
கடன் தொல்லைகள், மன அழுத்தம், தற்கொலை – இந்தச் சொற்கள் நாளுக்கு நாள் நம்மைச் சுற்றி நடக்கின்ற கதைகளின் பொதுவாகிவிட்டன.
உலக நாடுகளில், அமெரிக்காவின் திடீர் அறிவிப்பினால் பல இடங்களில் பொருளாதார நிலைமைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அதேபோல், சமூக வலைத்தளங்களில் வெளியாகும் திடீர் செய்திகளும், உலக சந்தையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.
நேற்றிரவு நிகழ்ந்த சம்பவங்களும், நேற்று ஒரு நாளிலேயே பல லட்சம் ரூபாய் திடீர் நட்டத்தை உருவாக்கின.
இதே நேரத்தில், யாரோ சிலருக்கு மிகுந்த லாபமும் கிடைத்திருக்கும்.
அந்த லாபத்தின் பேரில், அவர் எதிர்காலத்தில் இன்னும் அதிக அளவில் இந்த வியாபாரத்தில் ஈடுபட தூண்டப்பட்டிருப்பார்.
அவ்வாறான ஒருவர், ஒருநாளில் பெரிய நட்டத்தில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்படும் வரை, இந்த வர்த்தக முயற்சியில் இருந்து விலகமுடியாத மனநிலையில் தான் இருப்பார்.
அவன் இனி இல்லை.
வடபகுதியில், பல்வேறு காரணங்களால் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவது மிகுந்த கவலையளிக்கிறது.
இதைத் தடுப்பதற்கான முடிவுகளும் முயற்சிகளும் தாமதமின்றி எடுக்கப்பட வேண்டும்.
நிதி நெருக்கடிகளைத் தவிர்க்க, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் சில முக்கியமான காரியங்கள்:
நுண்ணிதி நிறுவனங்கள், கிராமப்புறங்களுக்குள் சென்று, மக்களை ஏமாற்றி கடனாளிகளாக மாற்றும் முயற்சிகளை கட்டுப்படுத்தும் விதமான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
வியாபாரம் தொடங்கும் முன், அது லாபகரமானதா? சந்தை நிலை என்ன? என்பதைக் கூர்ந்து தெரிந்து கொள்ளும் ஆலோசனை தேவை.
பொருளாதாரத் திறன்கள் இல்லாமலே, வியாபார முயற்சியில் ஈடுபடுவதால் நிதி சிக்கல்கள் உருவாகின்றன. இதைத் தவிர்க்க, தொழில் தொடக்க பயிற்சிகள் அவசியம்.
வருமானத்தைவிட அதிகமாகச் செலவழிப்பது, கடன் சுழற்சிக்கு வழிவகுக்கும். இந்த உண்மையை உணர்த்தும் கல்வி வேண்டும்.
சமூக ஊடகங்களில் பரவும் மாய தகவல்களை நம்பி, உண்மை நிலையை அறியாமல் வியாபாரம் தொடங்குவது மிகப் பெரிய அபாயம்.
இவை அனைத்தும், இறுதியில் கடுமையான நிதி நெருக்கடிக்குள் மக்களை தள்ளுகின்றன.
தடுப்பு நடவடிக்கைகள் அவசியம்:
மனநல ஆலோசனை மையங்கள் கிராமங்களிலும் நகரங்களிலும் நிறுவப்பட வேண்டும்.
இளைஞர்களுக்கான நிதி கல்வி கட்டாயமாக்கப்பட வேண்டும்.
தகவல் பரிமாற்றம், வியாபார அனுபவங்களை பகிரும் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.
அளவுக்கு மீறிய ஆசைகள், ஒப்பீடுகள், விரைவான வெற்றி போன்ற மூர்க்கமான எண்ணங்களை கட்டுப்படுத்தும் மனப்பான்மை வளர்க்கப்பட வேண்டும்.
மனித உயிரை விட மதிப்புமிக்கதொரு சொத்து இல்லை. ஒரு தவறான முடிவால், ஒரு குடும்பம் சிதறும். சமூகமாக, குடும்பமாக, நாமெல்லாம் ஒன்றாகக் கைகோர்த்து இத்தகைய துயர சம்பவங்களைத் தடுக்க முயற்சிக்க வேண்டியது அவசியம்.
வாழ்க்கை நிச்சயமாக சவால்கள் கொண்டது. ஆனால், அந்தச் சவால்களை சந்திக்க துணிவும், துணையும் நம்மிடம் இருக்க வேண்டும்.
நம்முள் ஒருவர் வீழ்ந்தால், நாம் அனைவரும் தளர்வதாக ஆகக்கூடாது. அதற்கு பதிலாக, நாம் அனைவரும் ஒன்றாக நிமிர்ந்து நிற்க வேண்டும்.
ஒருவருக்கு மிகுந்த மனவிரக்தி ஏற்ப்படுகின்ற போது அவர் தன்னுடைய உண்மையான நிலையை இன்னொருவருக்கு கட்டாயம் கூற வேண்டும்.
கருத்துகள் இல்லை