யாழ் புதிய பேருந்து நிலைய இயங்குநிலை குறித்து கலந்துரையாடல்!


யாழ்ப்பாண நகரின் நெரிசல் மற்றும் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் நோக்கில் புதிய பேருந்து நிலையத்தைப் பயன்படுத்துவதற்கான கலந்துரையாடல் இன்று (14.10.2025) யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.


இக்கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா. வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தின் தொடக்கத்தில் யாழ். மாவட்டச் செயலர் ம. பிரதீபன், கலந்துரையாடலின் நோக்கத்தை விளக்கினார்.


அதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த ஆளுநர், யாழ்ப்பாண நகரம் தற்போது பேருந்து நிலையம், மருத்துவமனை, வர்த்தக நிலையங்கள் ஆகியவை ஒரே இடத்தில் அமைந்துள்ளதால் நெரிசல் மிக்கதாக மாறியுள்ளதாகக் குறிப்பிட்டார். நகரத்தின் எதிர்கால அபிவிருத்திக்காக போக்குவரத்து அமைப்பை ஒழுங்குபடுத்துவது அவசியம் என்றும், நெடுந்தூர மற்றும் குறுந்தூர சேவைகள் முறையே புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்படுவது நெரிசலைக் குறைக்கும் என்றும் வலியுறுத்தினார்.


நாடாளுமன்ற உறுப்பினரும், போக்குவரத்து செயற்குழுத் தலைவருமான க. இளங்குமரன், பொதுப் போக்குவரத்து மக்களின் தேவைக்கு ஏற்ப அமைய வேண்டும் எனவும், தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபை இணைந்து செயல்பட வேண்டுமெனவும் தெரிவித்தார்.


அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன், நிபுணர்களும் பொதுமக்களும் யாழ். நகரத்திலிருந்து பேருந்து நிலையம் நகர்த்தப்படவேண்டும் என்றே கருத்து தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.


இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதான பிராந்திய முகாமையாளர் கே. கேதீசன், பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள 63 கடைகளிலிருந்து தினசரி வசூல் செய்யப்பட்டுவருவதை குறிப்பிட்டதுடன், தூய்மை இலங்கை செயற்றிட்டத்தின் கீழ் நிலையம் புனரமைக்கப்படும் போது அவை அகற்றப்படும் என்றும் தெரிவித்தார்.


நகர அபிவிருத்தி அதிகார சபை, வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை, வர்த்தக சங்கம், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட பிரதிநிதிகள் தமது கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் தெரிவித்தனர்.


இக்கலந்துரையாடலின் இறுதியில், புதிய பேருந்து நிலையத்தின் செயற்பாட்டை முன்னெடுக்குவதற்கு முன் கள ஆய்வொன்றை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.


இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உட்பட பல அதிகாரிகள் மற்றும் அமைப்புப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.