“மகாண சபை முறைமையும், தமிழ் தேசிய மந்திரமும், அதி மேதாவிகளும்”


JVP வழிவந்த NPP க்கு எதிரான ஒரு பலமான கூட்டை உருவாக்க தெற்கில் முனைப்புகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.


நீண்ட காலம் வீழ்ச்சியில் துவண்டுகிடந்த ஐக்கியதேசியக் கட்சியை தூக்கி நிறுத்தியவர்களில் இள ரத்தம் ஹரின் பெனான்டோ முக்கியமானவர். பின்னர் ரணிலுடன் முரண்பட்டு சஜித்துடன் சென்று பின் ரணிலுடன் மீண்டும் சங்கமமாகியுள்ளார்.


இந்த முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவுக்கு அரசியல் ஒன்றிணைப்பு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 


நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து, ஒரு பொதுவான நிகழ்ச்சி நிரலில் ஈடுபடுத்துவதற்காகவும், ஐக்கிய தேசியக் கட்சி ஏற்பாடு செய்யும் ஆயிரம் பொது கூட்டங்களை முன்னின்று செயற்படுவதற்காகவும் இப்பதவி வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


இப்போது “மஹா ஜன ஹந்த” என்ற எதிர் கட்சிகளின் கூட்டணியை அமைத்து அதில் அவர்கள் முதலாவது கட்டத்தை எட்டியிருக்கிறாரக்ள். சஜித்தின் SJB இந்த இணைப்பு கூட்டத்தில் பங்குகொள்ளவில்லை.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP), ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP), ஐக்கிய தேசியக் கட்சி (UNP), பிவிதுரு ஹெல உறுமய (PHU), மகஜன எக்சத் கட்சி, தேசிய சுதந்திர முன்னணி (NFF), ஸ்ரீலங்கா மகஜன பெரமுன மற்றும் நவ ஜனதா கட்சி உட்பட பல எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன.


80களின் பிற்பகுதியில் ஐக்கியதேசியக் கட்சியின் பிரேமதாஸா ஆட்சிக்கால்தில் JVP யின் இரண்டாவது ஆயுதக் கிளர்ச்சியின் போது இடம்பெற்ற பாரிய மனித உரிமைகளுக்கு எதிராக பலமான எதிர்கட்சிகளின் கூட்டணி தெற்கில் உருவாகியது. இதற்கு மனித உரிமைகள் அமைப்புகளும் ஆதரவளித்தன. இக்காலத்திலேயே மகிந்த ராஜபக்ஸ நீதி கோரி ஜெனீவா பயணித்தார்.


2006ன் பின் புலிகளை ஒடுக்குவதற்கான யுத்தத்தை JVP உட்பட தெற்கின் கட்சிகள் ஆதரித்ததோடு சிறிலங்கா என்ற கோசத்துடன் அனைத்து கட்சிகளும், நேரடியாகவோ மறைமுகமாகவே மகிந்தவை ஆதரித்திருந்தன.


தெற்கில் ஆபத்துகள் வரும் போதெல்லாம் எதிரும் புதிருமாக இருப்பவர்கள். தமது முரண்பாடுகளுக்குள் உடன்பாடு கண்டு தமது பொது எதிரிக்கு எதிராக ஒன்றிணைந்து போராடுவார்கள்.


ஆனால் துர்ப்பாக்கியம் அகிம்சைப் போர் ஆயதப் போராக மாறிய காலத்தில் இருந்து தமிழ்த்தரப்புகள் சுயம்புலிங்களாக தனித்து நின்று தோல்விகளையே சந்தித்திருக்கின்றன. 

 

அகமுரண்பாடு எது புற முரண்பாடு எது என்பதை கணிக்காது உள்முரண்பாடுகளையும் பகைமுரண்பாடுகளாக்கி அசிங்கமான அரசியல் மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர். 


பொது எதிரிக்கு எதிராக அரசியல் வியூகங்களை வகுக்காது தனக்கு மூக்குப் போனாலும் தமது எதிரிக்கு சகுணப்பிழை ஆகவேண்டும் என தாமே தம் இனத்தின் அழிவுக்கு காரணமாகி வருகின்றனர்.


இப்போது மாகாண சபை குறித்து மீண்டும் அக்கப் போர் ஆரம்பித்திருக்கிறது.


1978 ஆம் ஆண்டின் அரசியல் அமைப்பில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைடன் நிறைவேற்றப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை மீண்டும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நீக்க முடியும்.

 

இதனை நீக்குவதற்கு தெற்கின் இனவாத கட்சிகளின் நெருக்குதல்கள் வரும் போதெல்லாம், இரண்டு நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டத்தப்பட்ட ஒப்பந்தம் என்ற அடிப்படையில் ஆளும் தரப்புகள் இந்தியாவுடன் முரண்படாமல் அதனை தவிர்த்து வந்தன.


இன்று தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் மாகாணசபை வெறும் கோதாக இருப்பினும், யாப்பில் இருக்கும், - இந்தியாவின் குறைந்தபட்ச கரிசனையிலாவது இரு்க்கும் ஒரு சட்டமாக இந்த மகாணசபையே இருக்கிறது. இம்முறை இடம்பெற்ற ஐநா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலும் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


இப்போ மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ள மாகாண சபையை தமிழ் தரப்பு நிராகரிப்பதற்கு முன் அதற்கு மேலான அதிகாரத்தை கொண்ட அரசியல் அலகு ஒன்றை இலங்கையின் அரசியல் யாப்பில் உள்ளடக்குவதற்கான உத்தரவாதங்களை பெறவேண்டும். அதற்கு ஒருமித்து செயற்பட வேண்டும்.


அதனை விடுத்து கண்ணை மூடிக்கொண்டு அதனை எதிப்பது ஆரோக்கியமானதா? அரசியல் புரிந்த, கடந்தகால அனுபவங்களை பெற்ற எவரும் மீண்டும் ஓர் அரசியல் தவறை புரிய துணியமாட்டார்கள்.


முதலமைச்சரின் ஆலோசனை இன்றி மாகாண சபையை கலைக்க முடியாது என ஏற்கனவே இருந்த மாகாண சபைச் சட்டத்தில், திருத்தத்தை கொண்டுவர முன்னைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸாவுக்கு நாமே அழுத்தத்தை கொடுத்திருந்தோம். 


EPRLF கட்சிக்கும், வரதருக்கும் சகுணம் பிழைக்க வேண்டும் என்பதற்காக நமது மூக்கை நாமே அறுத்துக்கொண்டோம்.


ஏற்கனவே வந்த பல அரிய சந்தர்ப்பங்கள் ஊடாக ஆட்சி புரிந்த அரசாங்கங்களை சிக்கவைத்து சர்வதேசத்தில் அம்பலப்படுத்தி இருக்க முடியும் அதனையும் நாம் செய்யவில்லை.


1987 ல் கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறையை எதிர்த்து ஈழமே தீர்வு என முன்னெடுக்கப்பட்ட போரின் ஊடாக இந்தியாவுடன் மோதி, ராஜீவைக் கொன்று இறுதியில் முள்ளிவாய்க்காலில் விடுதலைப் போர் மௌனித்துப் போக காரணமானோம். 


தமிழ் மக்களின் விடுதலைக்கான போர், சர்வதேசத்தால் பயங்கரவாதமாக அடையாளப்படுத்ஷதவதற்கான காரணிகளில் இதுவும் ஒன்று.


இதுவரை வந்த தீர்வு வரைபுகளில் உச்சமானது எனக் கருதப்பட்ட நீலன் திருச்செல்வத்தின் வழிநடத்தலில் கொண்டுவரப்பட்ட சந்திரிக்காவின் தீர்வுப் பொதியையும் எதிர்த்து நீலனையும் சுட்டுக்கொன்றோம். 


ஐக்கியதேசியக்கட்சி நாடாளுமன்றில் இந்த தீர்வு வரைபை எரித்தது. அதுவல்ல பிரச்சனை தமிழர் தரப்பு அதனை ஏற்கவில்லை என்பதுவே சர்வதேசத்தில் முனிலைப்படுத்தப்பட்டது.


2002ல் ஆரம்பிக்கப்பட்ட சமாதானப் பேச்சுக்களின் ஊடு கிடைத்த ஒஸ்லோ பிரகடனத்தை நிராகரித்ததனால், சமாதானப் பேச்சுகளின் முறிவுக்கு தமிழ்த் தரப்பே காரணம் என்ற நிலை சர்வதேசத்தால் முதன்மைப்படுத்தப்பட்டது. 


ஈழத்தை தவிர புலிகள் எதனையுமே ஏற்கமாட்டார்கள் என்ற முடிவுக்கு சர்வதேசம் வருவதற்கு நாமே காரணம் ஆனோம். 


ஒன்றில் சமாதானப் பேச்சுவார்த்தை ஒரு பொறி எனக் கருதியிருந்தால் அந்தப் பொறியில் சிக்கியிருக்கக் கூடாது.


சமாதானப் பேச்சுவார்த்தையை ஏற்று அதில் கலந்துகொண்டால் அரசாங்கத்தை சிக்கவைக்கும் ராஜதந்திரத்தை பிரயோகித்திருக்க வேண்டும். அரசாங்கம் நம் தலையில் அரப்பு வைக்க இடமளித்திருக்கக் கூடாது.


அதனால் முள்ளிவாய்கால் போர் உக்கிரமடைந்த போது இந்தியாவும் சர்வதேசமும் கைகட்டி வேடிக்கை பார்த்ததுடன் புலிகளை அழிக்கவும் முழுமையாக துணை போயின.


ஒஸ்லோ உடன்படிக்கையை அரசாங்கமும் ஏற்கவில்லை, புலிகளும் ஏற்கவில்லை என எரிக் சொல்ஹெய்ம் கூறியிருந்தார். 


ஆயின் அரசாங்கம் ஏற்றதோ ஏற்கவில்லையோ தமிழ்த் தரப்பு ஏற்றிருந்தால் அரசாங்கம் சர்வதேசத்தில் அம்பலப்பட்டிருக்கும். நம்மீது எவரும் கைநீட்டியிருக்க முடியாது.


(அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதனப் பேச்சுவார்த்தை அனைத்திலும் செய்தி சேகரிப்பிற்காக கலந்துகொண்ட இருவரில் ஒருவர் நான் என்பதனால் என்ன நடந்தது என்ற உமைகளை நான் அறிவேன்.)


இப்போ இலங்கை இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்த, 1987ல் இந்திய எதிர்ப்பு வாத போரை நடத்திய JVPயின் வழி வந்த NPP அரசாங்கம் ஆட்சியில் இருக்கிறது. தமிழ் மக்களின் போராட்டத்தின் ஊடாக கிடைத்த மாகாண சபை முறைமையை நீக்கும் எண்ணம் தமக்கு இல்லை என தேர்தலுக்கு முன்னதாக அநுர கூறியிருந்தார்.


ஆனால் மாகாண சபை முறைமை தேவையில்லை பொதுஜன வாக்கெடுப்பின் ஊடாக அதனை இல்லாது செய்யலாம் என JVPயின் தலைமையகமான பெலவத்தையில் கலந்துரையாடல் இடம்பெற்றதாக பிறிதொரு தகவல் கூறுகிறது.


எது எப்படி இருப்பினும் மாற்று ஏற்பாடுகள் எதுவும் இன்றி மாகாண சபைமுறையை தமிழ் தரப்பு எதிர்ப்பது ஆரோக்கியமானதல்ல. காரணம் தமிழ் தரப்பே வேண்டாம் என கூறும் மாகாண சபை நமக்கு எதற்கு என ஜனாதிபதியும், NPPயும் இந்தியாவிடம் ஆதரபூர்வமாக கூறமுடியம்.


 மறுபுறம் நீங்களே மாகாண சபையை வேண்டாம் எனும் போது நாம் ஏன் NPPயுடன் மல்லுக்கட்ட வேண்டும் என இந்தியா இந்த விடயத்தை கைவிட்டு தேசிய அளவில் NPP அரசாங்கத்துடன் அரசியல் பொருளாதார சமூக உறவுகளை வலுப்படுத்தலாம். அதற்காகத் தான் ரிவின் இந்தியா செல்கிறாரோ தெரியவி்ல்லை. 


அதனால்த் தான் சொல்கிறேன், மீண்டும் மீண்டும் தமிழ்த் தேசிய மந்திரத்தை உச்சரித்தபடி கூழ்பாணைக்குள் விழுவதா? என்பதனை தமிழ்க் கட்சிகள் தீர்மானிக்க வேண்டும். 


குறிப்பாக தெற்கில் NPPக்கு தமது கடுப்பை காட்ட, எதிர்ப்பை வெளிப்படுத்த வேறு வழயில்லாமல் தவிக்கும் எதிர்கட்சிகள் விரும்பியோ விரும்பாமலோ மாகாண சபையை பற்றிப்பிடிக்க வேண்டியுள்ளது. NPPயின் வாக்கு வங்கியில் சரிவைக் காட்டி மக்கள் அரசாங்கத்தை வெறுப்பதாக காட்ட வேண்டியிருக்கிறது. 


இந்த சந்தர்ப்பத்தை வடக்கு கிழக்கு மலையகக் கட்சிகள் பயன்படுத்தி மாகாண சபைத் தேர்தலை நடாத்த வலியுறுத்த வேண்டும். 


அதனால் NPP அரசாங்கத்திற்கு நிர்ப்பந்தம் ஏற்படும். ஒன்று மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டும். இல்லாவிடின் புதிய அரசியல் யாப்பை விரைவில் தயாரித்து நாடாளுமன்றில் சமர்ப்பிக்க வேண்டும்.


மாகாண சபைத் தேர்தலை புறக்கணிக்க NPP தீர்மானித்தால், அல்லது மாகாண சபை முறைமையை முற்றாகவே நீக்க முற்பட்டால் புதிய அரசியல் யாப்பை உருவாக்கியே ஆக வேண்டும். 


அந்த யாப்பு ஏக்கிய ராட்சிய யாப்பா? அல்லது ஜனாதிபதி கூறியவாறு அனைத்த இனமக்களுக்குமான யாப்பா என்பது தெளிவாகிவிடும்.


இந்த விடயத்தில் தமிழ்த்தரப்புகள் அனைத்தும் ஒருமித்த முடிவை எடுத்து, NPP க்கு அரசியல் அழுத்தத்தை கொடுக்க வேண்டும். ஆனால் தனித் தவில் அடிக்கும் தமிழ்த் தரப்பகள் மீண்டும் முருங்கை மரத்திலா என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.


#ஞாபகங்கள் #nadarajah_kuruparan #journalist #நடராஜா_குருபரன்


இந்தப்பதிவு எனது தனிப்பட்ட பதிவு. அதற்கு முழுமையாக நானே பொறுப்பு. ஆரோக்கியமான விவாதங்கள், கருத்தியல் ரீதியான விமர்சனங்கள் மகிழ்வுக்க உரியதாக இருக்கும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.