''G"வெடுக்குநாறி மலை ஆலய நிர்வாகிகள் இருவருக்கு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு அழைப்பாணை!
வவுனியா, நெடுங்கேணிப் பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் முன்னாள் தலைவர் மற்றும் செயலாளர் ஆகிய இருவரை விசாரணைக்காக ஆஜராகுமாறு பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவுப் பொலிஸார் (TID) அழைத்துள்ளனர்.
இந்த அழைப்பாணை கடிதங்கள் திங்கட்கிழமை (அக்டோபர் 06) நெடுங்கேணிப் பொலிஸார் ஊடாகக் குறித்த இருவருக்கும் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டன.
விசாரணைக்கான அழைப்பு
ஆலயத்தின் முன்னாள் தலைவர் சசிகுமார் மற்றும் முன்னாள் செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் எதிர்வரும் அக்டோபர் 9 ஆம் திகதி காலை 10 மணிக்கு பயங்கரவாதத் தடுப்பு விசாரணைப் பிரிவின் வவுனியாவில் உள்ள அலுவலகத்தில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த அழைப்பாணையில், இருவரிடமும் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காகவே வருகை தருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் சிவாரத்திரி தினத்தன்று குறித்த இரு நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இருப்பினும், பின்னர் அவர்கள் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். இந்தச் சம்பவங்களின் பின்னணியிலேயே தற்போது பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு மீண்டும் இவர்களை விசாரணைக்கு அழைத்துள்ளது.
அத்துடன், இந்தச் சம்பவம் நடந்த பின் ஆலயத்திற்குப் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டு பல மாதங்கள் கடந்துள்ள நிலையில், முன்னாள் நிர்வாகிகளுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை