வவுனியா வடக்கு வெடுக்குநாறி ஆலய முன்னாள் நிர்வாகத்தினரிடம் ரிஐடி இரண்டு மணிநேரம் விசாரணை!📸


வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தின் முன்னாள் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரிடம் பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவினர் (ரிஐடி) இன்று (09.10) இரண்டு மணிநேரம் விசாரணை நடத்தினர்.


வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தின் முன்னாள் தலைவர் செ.சசிகுமார் மற்றும் செயலாளர் து.தமிழ்ச்செல்வன் ஆகியோரை விசாரணை ஒன்றுக்கு வருமாறு வவுனியா பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவுபொலிசாரால் (ரிஐடி) கடந்த சில தினங்களுக்கு முன்பாக நெடுங்கேணி பொலிசாரால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.


இதனையடுத்து, குறித்த இருவரும் வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவின் அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் ஆலயம் தொடர்பாகவும், குடும்ப விபரங்கள் மற்றும் விடுதலைப் புலிகள் தொடர்பாகவும் ஏனைய பல விடயங்கள் தொடர்பாகவும் வாக்கு மூலங்கள் பெறப்பட்டிருந்தது.


விசாரணையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஆலயத்தின் முன்னாள் செயலாளர் து.தமிழ்செல்வன்,



குறித்த விசாரணையின் போது எமது ஆலயம் சார்ந்த விடயங்களையும், எமது தனிப்பட்ட தகவல்களையும் கேட்டிருந்தனர். நாம் அனைத்திற்கும் பதில் அளித்திருந்தோம். அந்தவகையில், மதம் சார்ந்த பணிகளை முன்னின்று மேற்கொள்பவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி அச்சுறுத்தி நசுக்கும் செயற்பாடாகவே இதனை பாக்க வேண்டியுள்ளது. மதம் சார்ந்த செயற்பாடுகளுக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி ஏன் விசாரணை செய்யப்பட வேண்டும். இந்த அரசாங்கமும் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்குவதில் முன்னின்று செயற்படுகின்றது.


குறிப்பாக எமது ஆலயத்தின் விக்கிரகங்கள் உடைக்கப்பட்ட விடயம் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில் எங்களை மாத்திரம் தொடர்ச்சியாக விசாரணை செய்கின்றனர் என தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.