புலிகளுக்கு எதிராக, ராஜபக்ஸக்கள் பயன்படுத்திய மூலோபாயத்திற்கு ஈடான தந்திரோபாயத்தை, NPPயும் JVPயும் கையில் எடுத்தனவா?
இறுதி யுத்தத்தை இலங்கை அரசாங்கம் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே, விடுதலைப் புலிகளை முழுமையாக அழித்தொழிக்கும் திட்டம் உருவாக்கப்பட்டிருந்தது.
2006 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே அந்நாள் அரசாங்கத்திற்கு நெருக்கமான ஒருவரின் வாயிலாக இதனை அறிந்திருந்தேன்.
அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ, பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ, இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, மேலும் புலனாய்வுத்துறையின் முக்கியஸ்த்தர் ஹெந்தவிதாரன தலைமையிலான குழு இத்திட்ட உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்ததாக அறியப்படுகிறது.
இத்திட்டத்தில் நேருக்கு நேரான போரைக் கடந்து, விடுதலைப் புலிகளின் நுண்ணிய வலையமைப்புகளை நிர்மூலமாக்கும் மூலோபாயமே பிரதான இடத்தைப் பெற்றிருந்தது.
தெற்கில் இருந்து புலிகளுடன் தொடர்பு பேணியிருந்த முப்படையினர், பொலிசார், அரசாங்க அதிகாரிகள் எனப் பலர் கண்டறியப்பட்டு, புலிகளின் தகவல் வலையமைப்பு முற்றாக சிதைக்கப்பட்டது.
புலிகளுக்கு புலம்பெயர் நாடுகளில் இருந்து சென்ற பண உதவித் தளங்கள்—ஹவாலா பணப்பரிமாற்ற வலைப்பின்னல்கள்—கண்டறியப்பட்டு, அவற்றுடன் தொடர்புடையவர்கள் இல்லாதொழிக்கப்பட்டனர். உள்நாட்டிலிருந்தே புலிகளுக்கு பொருளாதார ஆதரவு அளித்த வர்த்தகர்கள், கொடையாளர்களும் வேட்டையாடப்பட்டனர்.
விடுதலைப் புலிகளின் போராட்டத்தை தெற்கில் நியாயப்படுத்திய தமிழ் அரசியல் பிரமுகர்கள் இலக்கு வைக்கப்பட்டனர். புலிகளுக்கு ஆதரவாக இருந்த ஊடகங்கள் மீது கடுமையான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. ஊடகவியலாளர்களும் முடக்கப்பட்டனர்.
தெற்கில் நடந்த தாக்குதல்கள், கொலைகளில் புலிகளுக்கு உதவியதாகக் கருதப்பட்ட பாதாள உலகக் குழுக்கள் முற்றாக ஒடுக்கப்பட்டன.
அந்த காலத்தில் தெற்கு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சில விடுதலை அமைப்புகளின் உறுப்பினர்களுக்கும், பாதாள உலகக் குழுக்களுக்கும் இடையிலான நெருங்கிய உறவுகள் காரணமாக, தெற்கில் நடைபெற்ற சில தாக்குதல்களும், கொலைகளும் அத்தகைய ஒத்துழைப்புகளால் நிகழ்ந்ததாக அன்றைய அரசாங்கம் கருதியிருந்தது.
இதன் விளைவாக, புலிகளுடன் தொடர்பில் இருந்த படையினர், பொலிசார், வர்த்தகர்கள், பாதாள உலகக் குழு உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், தெற்கில் செயற்பட்ட உளவாளிகள் என புலிகளின் முழு வலையமைப்பும் தகர்க்கப்பட்டன. பலர் கொல்லப்பட்டனர், பலர் காணாமல் ஆக்கப்பட்டனர், சிலர் நிரந்தரமாக முடக்கப்பட்டனர்.
இறுதி யுத்தத்தில் புலிகளை அழிக்கும் முன்பாகவே, ராஜபக்ஸக்கள் தலைமையிலான அரசாங்கம் வகுத்த யுத்த மூலோபாயத்தில் இத்தகைய உளவுத்துறைத் தந்திரங்களும், அரசியல் தந்திரோபாயங்களும் முக்கிய பங்கு வகித்தன.
அத்தகைதொரு மூலோபாயத்தையும், தந்திரோபாயத்தையுமே, இன்று அநுர தலைமையிலான NPP அரசாங்கமும், அதனை வழிநடத்தும் JVPயும் தமது புதிய வடிவில் கையிலெடுத்திருக்கின்றன என நான் உணர்கிறேன்.
கடந்த கால அரசாங்கங்களின் நிலைபேற்றிற்கும், தொடர்ச்சிக்கும் அடிப்படையாக பெரு வர்த்தகளும், பிரபல அரசியல் பிரமுகர்களுமே இருந்தனர்.
அவர்களின் பலத்திற்கும், அடாவடித்தனங்களுக்கும், பின்னணியில் இயங்கிய பாதாள உலகக் குழுக்களும், அதற்குப் பசளையிட்ட போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளுமே காரணம் என NPP அரசாங்கமும் JVPயும் துல்லியமாக இனங்கண்டிருப்பதாக தோன்றுகிறது.
அதனால் தயவோ தாட்சண்யமோ இன்றி, அந்த “underworld” எனப்படும் பாதாள உலகத்தின் முதுகெலும்பை முறிக்கவும், அதனைப் பேணும் போதைப்பொருள் வலையையும் ஒடுக்கவும் தொடங்கியுள்ளன.
இதன் மூலம் பலம்வாய்ந்த முன்னாள் அரசியல் பிரமுகர்களையும், அவர்களின் கட்சிகளையும், அவர்களின் அரசியல் இயக்கங்களையும் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என அவர்கள் நம்புகின்றனர்.
அதனால்தான், கடந்த எழுபது ஆண்டுகால அரசியல் வரலாற்றில் உலகறிந்த பலமான தலைவர்களும் அரசாங்கங்களும் செய்ய முடியாத பல செயற்பாடுகளை இன்று NPP அரசாங்கமும், அதனை வழிநடத்தும் JVPயும் இன்று செய்து காட்டுகின்றன.
சர்வதேசத்துக்குள் புகுந்து, அங்கிருந்த வலையமைப்புகளையும் உடைத்து, நெருங்க முடியாதவர்கள் என கருதப்பட்ட பல பாதாள உலகப் பிரமுகர்களை இலகுவாக நெருங்கி, அள்ளிக்கொண்டு வருகின்றனர்.
இதன் விளைவாக, கடந்த காலங்களில் மறைக்கப்பட்டு மௌனமாக்கப்பட்ட பல முக்கிய சம்பவங்களின் உறங்கிக் கிடந்த உண்மைகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. அவை இன்று மக்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளன.
இந்த செயற்பாடுகளினூடு, NPP அரசாங்கமும், அதனை வழிநடத்தும் JVPயும் தமது நிலைபேற்றையும் தொடர்ச்சியையும் உறுதிப்படுத்தும் வலுவான அஸ்திவாரத்தை அமைத்து வருகின்றன.
இந்த வருட இறுதிக்குள், தங்கள் மூலோபாயத்திலும் தந்திரோபாயத்திலும் வெற்றி பெற்றால், மாகாண சபைத் தேர்தல்கள் மட்டுமல்லாமல், அனைத்து தேர்தல்களையும் நடத்தத் துணிந்து விடுவர் எனத் தோன்றுகிறது.
#ஞாபகங்கள் #nadarajah_kuruparan #journalist #நடராஜா_குருபரன்
இந்தப்பதிவு எனது தனிப்பட்ட பதிவு. அதற்கு முழுமையாக நானே பொறுப்பு. ஆரோக்கியமான விவாதங்கள், கருத்தியல் ரீதியான விமர்சனங்கள் மகிழ்வுக்க உரியதாக இருக்கும்
கருத்துகள் இல்லை