சிவாலயத்தில் நடந்த அநீதி! திட்டமிட்ட சுமார்த்தர் சதி??


சிவ வடிவங்களில் ஒன்றான சரபேஸ்வரமூர்த்தியை பலர் அறிந்திருக்கமாட்டார்கள்.

சிவபராக்கிரமத்தை உணர்த்துகின்ற சரபமூர்த்தமானது இலங்கையில் பல இடங்களில் "இன்ன தன்மையன் என்றறியாது" வழிபடப்பட்டு வருகிறது .


சரபர் வடிவமானது திருவுருவச்சிலையாக இல்லாவிடினும் முச்சூலமாக வழிபடுகின்ற மரபு இலங்கையில் உண்டு.


அது வைரவரையும்,சிவபெருமானையும், வீரபத்திரரையும்,காளியையும் குறிப்பது போல சரபரையும் மக்கள் முச்சூலமாகவே வழிபாடு வந்தனர்.


காமிகஆகமம் சரபரை ஆகாசவைரவர் என்று குறிப்பிடுவது போலே இலங்கையில் சரபர் நரசிங்கவைரவர் அல்லது நரசிம்ம வைரவர் என்று வழிபடப்படுகின்றார்.


ஆனால் இப்போது வடபகுதியிலுள்ள கவுணாவத்தை நரசிங்க வைரவர் உட்பட பல சரபர் ஆலயங்கள் முச்சூலவழிபாடு காரணமாக தவறான புரிதல் மற்றும் வழிகாட்டல் மூலம் வைரவராகவே வழிபடப்பட்டுவருகிறது.


 நரசிங்கவைரவர் என்பது சரபரை குறித்ததே என்பதை கவனிக்க.


இவை நிற்க....


இன்னும் அபத்தமாக கிழக்கிலங்கையில் சரபவழிபாடு முச்சூலமாகவே வழிபடப்பட்டபோதும். அதை தவறாக திருமாலின் அவதாரமான நரசிம்மர் என்று தவறான கற்பிதம் கொள்கின்றனர்.


மக்களின் சைவசித்தாந்த தெளிவின்மையும் தவறான வழிகாட்டலுமே இந்த குழப்பத்துக்கு காரணமாகும்.

முச்சூலம் சிவ வடிவங்களுடன் தொடர்புடையது என்ற சிறு புரிதல்கூட இல்லை எனலாம்.


சரபருக்குரிய தனிக்கோயில்கள் இலங்கையில் வேறெங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.

இருப்பின் பின்னுட்டமிடுக. தரவுகளை அறிந்து கொள்ள தகவல்களை திரட்ட வழிவகையாக இருக்கும்.

 

பாடல்பெற்ற சிவாலயமான மாந்தை திருக்கேதீச்சரத்திலும், கீரிமலை நகுலேச்சரத்திலும் சரபேஸ்வரருக்கு பஞ்சலோக எழுந்தருளித்திருவுருவம் உண்டு.

ஏனைய ஆலயங்களில் இருப்பின் பின்னூட்டத்தில் கருத்திடுக.


இப்படியாக சரபவழிபாடு மருவி வழக்கொழிந்து போகின்ற போது 

பழமையான சிவாலயமான ( சிலாபம்) முன்னேச்சரத்தில் இராஐகோபுரத்தை அண்டிய சுவரில் அழகிய முறையில் அமைக்கப்பட்ட புடைப்புச்சிற்பமாக சரபர் திருவுருவம் பலகாலமாக இருந்தது.


கடந்த குடமுழுக்குக்கு முன்னரான திருப்பணியின் போது நயவஞ்சகமாக சரபர் திருவுருவம் இடித்தழிக்கப்பட்டது.


இது முற்றிலும் சுமார்த்தசதியாகும்.

சிவபராக்கிரமத்தை தாங்கிக்கொள்ளமுடியாத சிவாசாரியார் வேடமணிந்த சுமார்த்தர்கள் சிவாலயங்களில் புகுந்ததன் விளைவே இதுவாகும்.


இந்த உண்மையை உலகம் வாழ் சைவர்கள் அறிந்திருக்க வேண்டும்.

சைவப்பெருஞ்சமயத்தில் ஒருசிவாலயத்தில் நடந்த இந்த அநீதியை யாரும் கண்டுகொள்ளவில்லை.

சமயத்தெளிவில்லாத அறங்காவலரும் சிவபரத்துவமில்லாத சுமார்த்தரும் ஆலயத்தில் புகுந்ததன் விளைவு இது.


சரபர் அகற்றப்பட்ட ஆலயத்தில் விஸ்வரூப திருமாலின் புடைப்புச்சிற்பம் ,திருமாலின் நரசிம்மர் அவதாரக்கோலம் என்பன அமைக்கப்பட்டு திருமாலின் ஒரு முகமாக சிவபெருமான் காட்டப்பட்டுள்ளமை எவ்வளவு பாரதூரமான சிவநிந்தை.


சிவாலயத்தில் விட்ணுபரத்துவம் சாதிக்கவேண்டிய அவசியமென்ன??.

இதை சதியென்றூரைக்காமல் என்ன சொல்வது??


பிறப்பால் சுமார்தாராயிருந்தும் தீக்கைகள் பெற்று சிவாசாரியார் அபிடேகம் பெற்றுக்கொண்டால் அவர்கள் சிவாச்சாரியார்களே.

ஆன்மார்ந்த சிவபூசை, சிவாகம வழிபாடுகள் போன்றவற்றைச்செய்துகொண்டு சுமார்தமத கொள்கையினை கொண்டொழுகுபவர் துரோகிகளே.


ஏற்றுக்கொண்ட சிவபரத்துவத்தை நிந்தனைசெய்து தம் சுமார்த்தமத அனுட்டானங்களை செய்துழன்று சிவத்துரேகம் செய்வோர் கட்டிய கணவனுக்கு உண்மையாயிராது துரோகம் செய்யும் பெண்டிருக்கு ஓப்பானவர் என்பதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை.


சைவ மக்கள் இந்த புல்லுருவிகளை அடையாளம்கண்டு அவர்கள் சைவத்திற்கு இழைக்கின்ற சதிகளை உணர்ந்து சிவபராக்கிரமவடிவமான சரபவழிபாட்டை ஆலயங்கள் தோறும் ஏற்படுத்த பரம்பொருளாகிய சிவபெருமான் திருவருள் புரிவதாக🙏


"ஆகம் கனகனைக் கீறிய கோளரிக்கு அஞ்சி விண்ணோர்

பாகம் கனங்குழையாய் அருளாய் எனத் தில்லைப்பிரான்

வேகம் தரும் சிம்புள் விட்டு அரி வெங்கதம் செற்றிலனேல்

மோகம் கலந்தன்று உலந்ததன்றோ இந்த மூவுலகே"


"அடுக்கிய சீலைய ராய்அகல் ஏந்தித் தசைஎலும்பில் 

ஒடுக்கிய மேனியோ டூண்இரப் பார்ஒள் இரணியனை 

நடுக்கிய மாநர சிங்கனைச் சிம்புள தாய்நரல 

இடுக்கிய பாதன்தன் தில்லை தொழாவிட்ட ஏழையரே" 


- கோயில் திருப்பண்ணியர் விருத்தம் 


"சிம்மாந்து சிம்புளித்து" 

- சுந்தரர் 


"மடங்கலாய்க் கனகன் மார்புகீண் டானுக்கு

அருள்புரி வள்ளலே!" 

- திருவிசைப்பா


🙏திருச்சிற்றம்பலம் 🙏


சிவாசாரியார் அகோரசிவம் உமையரசு 

விஜய் சுதுமலை

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.