யாழ் மாவட்ட அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு!


யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்ற நிலையை மதிப்பீடு செய்வதற்கான மீளாய்வு கூட்டம் நேற்று (13.11.2025) முற்பகல் 11.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது.


கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் பன்முகப்படுத்தப்பட்ட வரவு–செலவுத்திட்டம், மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம், கிராமிய அபிவிருத்தித்திட்டங்கள், கிராமிய வீதி அபிவிருத்தித்திட்டம், வீடமைப்பு திட்டங்கள், தேசிய ஒருமைப்பாட்டு நிகழ்ச்சித்திட்டம், நலன்புரி நன்மைகள் வழங்கல், பிரதேச செயலகங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள், மீள் குடியேற்ற வேலைத்திட்டம், விவசாய மேம்பாட்டு நடவடிக்கைகள் உள்ளிட்ட முக்கிய துறைகள் அனைத்திற்குமான முன்னேற்றங்கள் விரிவாக ஆராயப்பட்டன.


நிறைவேற்றப்பட்ட மற்றும் இன்னும் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடன் விவாதிக்கப்பட்டதுடன், எதிர்நோக்கும் சவால்களை சமாளிக்கவும், செயல்திறனை மேம்படுத்தவும் தேவையான உரிய அறிவுறுத்தல்கள் அரசாங்க அதிபர் அவர்களால் வழங்கப்பட்டன.


இக்கூட்டத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட உள்ளக கணக்காய்வாளர், பிரதம பெறியியலாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உதவி, பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலக துறைசார் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


யாழ்ப்பாண மாவட்டத்தின் நிலைத் தன்மையான அபிவிருத்தியை நோக்கிய இம்மாதிரியான முறையான மீளாய்வுகள் எதிர்காலத்திலும் தொடரும் என கூட்டத்தில் குறிப்பிடப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.