ஒரு முறை செய்த முட்டாள்த்தனத்தை இன்னொரு முறை தமிழ் சமுகமா செய்யாது!
ஓய்வுபெற்ற நீதிபதி இளஞ்செழியனின் உரைகளை அவ்வப்போது முகநூல்களில் காண முடிகின்றது. ஏற்கனவே, அரசியல்வாதியாக மாறிய ஒரு நீபதிதியுடன் பணியாற்றி அனுபவத்தின் அடிப்படையில், இது பற்றி சில குறிப்புக்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று எண்ணுகின்றேன். இளஞ்செழியனுக்கான சேவை நலன் பாராட்டு விழா என்னும் அடிப்படையில் லண்டனில் ஆரம்பித்த நிகழ்வானது, தற்போது ஏனைய நாடுகளிலும் இடம்பெற்றிருக்கின்றது. பணமுள்ளவர்கள், தாங்கள் விரும்புவோரை அழைத்து பாராட்டு விழாக்கள் நடத்துவது அவர்களின் தனிப்பட்ட உரிமை. ஆனால் சாக்கடை அரசியலை பூக்கடையாக்கிவிடுவேன் என்று கதைவிடுவதுதான் பிரச்சினையானது. உச்சநீதிமன்ற நீதிபதி சி.வி.விக்கினேஸ்வரனை அரசியலுக்கு கொண்டு வந்த போது சம்பந்தன் கூறியது – ஜ.எம்.எப், உலக வங்கியோடு பேசுதற்கு எங்களுக்கு ஒரு ஆள் வேண்டும் - அதற்காகத்தான் அவரைக் கொண்டு வருகின்றேன் - இறுதியில் சம்பந்தனும் விக்கினேஸ்வரனும் கதைப்பதற்கே, இன்னொருவரின் உதவி தேவைப்பட்டது.
விக்கினேஸ்வரனை ஆரம்பத்தில் ஆதரித்தவர்களில் நானும் ஒருவன்தான் ஆனால் அவருடன் பழகிய போதுதான், எதிர்பார்த்தவாறு அவரிடம் ஒன்றுமில்லை என்பது தெரிந்தது. அவரிடம் தலைமைத்துவம் என்னும் விடயமே இல்லை. ஆரம்பத்தில் சம்பந்தனும் சுமந்திரனும் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தார் பின்னர் அவர்களுடன் முரண்பட்டுக் கொண்டு, ஜங்கரநேசனும், நிமலன் கார்த்திகேயனும் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்தார் - பின்னர், தமிழரசு கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவர முயற்சித்த போது, அதுவரையில் கருத்தில் கொள்ளாமல் இருந்த கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் ஆதரைப் பெற்று, அவர்களுடன் இணைந்து செயற்பட்டார். தனிக் கட்சியில் நாடாளுமன்ற உறுப்பினரான பின்னர், அவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டவர்கள், அவர்களுடன் கூட்டு வைத்துக் கொள்ள முடியாது என்றார். மொத்தத்தில் விக்கினேஸ்வரனின் முதலமைச்சர் காலம் வீணாகிப் போனதுதான் மிச்சம். தமிழர்களிடம் அதிகாரத்தைக் கொடுத்தாலும் கூட, அதனைக் கையாளும் ஆற்றல் அவர்களுக்கு இல்லை என்பதைத்தான் விக்கினேஸ்வரன் நிரூபித்துச் சென்றார்.
இப்போது இன்னொரு ஒய்வுபெற்ற நீதிபதியை கொண்டு வந்தால், தமிழ் மக்களின் அரசியலை அவர் அப்படியே தூக்கி நிறுத்திவிடுவார் என்று கதை சொல்லப்படுகின்றது. இப்படியான சினிமா வசனங்களுக்கு கைதட்டுவதற்கும் ஒரு கூட்டமுண்டு. அவரின் உரைகளை சில நிமிடங்கள் கேட்டுப் பார்த்தேன் - அவருக்கு ஒழுங்காக பேசவே தெரியவில்லை. விக்கினேஸ்வரனாவது எழுதி வாசித்து, தனது பலவீனங்களை மறைத்துக் கொண்டார் ஆனால் இளஞ்செழியனோ ஏதோவெல்லாம் பேசுகின்றார். ஆனால், கைத்தட்டல்கள் இளஞ்செழியனுக்கு அரசியல் போதையை ஊட்டிவிட்டது போல்தான் தெரிகின்றது. அவரும் அதிகம் உளறுகின்றார். முதலாவது கூட்டத்திலேயே கண்ணீர் சிந்தினார். தனக்கு பதவி உயர்வு தரவில்லை என்பதற்காக, கண்ணீர் சிந்திய நீதிபதியென்றால் - இலங்கையின் வரலாற்றில், அது இளஞ்செழியனாகத்தான் இருக்கமுடியும். ஒரு வேளை ஏன் இளஞ்செழியனுக்கு பதவி உயர்வு வழங்கவில்லை என்று அரசாங்கம் வாய் திறந்தால், இளஞ்செழியன் மூக்குடைபட்டிருக்கவும் கூடும் - நல்ல வேளை – அது நடக்கவில்லை.
விக்கினேஸ்வரன் ஒய்வுபெற்ற பின்னர் கம்பன் கழகத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் அவர் எங்கும் தமிழ் மக்களின் உரிமை தொடர்பிலோ முக்கியமாக விடுதலைப் புலிகள் தொடர்பிலோ பேசியதாக நான் அறியவில்லை ஆனால் அரசியலுக்குள் வந்தவுடன் திடிரென்று புலிகளின் ஆதரவாளராக மாறிவிட்டார். நான் முதல் முதலாக விக்கினேஸ்வரனை சந்தித்த சந்தர்ப்பத்தில், ஜயா, நிர்வாக விடயங்கள் தெரிந்த, செல்வின் போன்றவர்களை உள்வாங்கலாமே என்று குறிப்பிட்ட போது – அவர் புலிளுக்கு எதிரானவர் என்று கூறுகின்றார்கள் என்றார். இந்த சந்திப்பின் போது, கட்டுரையாளர் நிலாந்தனும் உடனிருந்தார்.
அதே போன்றுதான், இதுவரையில் அமைதியாக இருந்த இளஞ்செழியனும் இப்போது தன்னையொரு தமிழ்த் தேசியவாதியாக காண்பிக்க முயற்சிக்கின்றார். இளஞ்செழியன் தொடர்பில் எழுதுவோர், அவர் அரசியல் நோக்கங்களுக்காக பழிவாங்கப்பட்டதாக புனைகின்றனர். அரசியல் நோக்கம் என்றால் - அதற்கு என்ன விளக்கம்? இளஞ்செழியனைக் கண்டு அனுர அரசாங்கம் அஞ்சுமளவிற்கு, அவரிடம் அப்படியென்ன அரசியல் இருந்தது? அச்சமூட்டக் கூடியவர் என்று கருதப்பட்ட ரணில் விக்கிரசிங்கவைப் பார்த்தே அரசாங்கம் அச்சப்படவில்லை!
அரச பதவிகளில் முப்பது வருடங்களுக்கு மேல் பணியாற்றி, அரசுக்கு எந்தளவு விசுவாசமாக இருக்க முடியுமோ, அந்தளவிற்கு விசுவாக இருந்து, அதற்கான முழுச் சலுகைகளையும் ஒன்றுவிடாமல் அனுபவித்துவிட்டு, ஒய்வுபெற்ற பின்னர் பிரமுகராக வலம் வருவதற்கு தமிழ்த் தேசியம் தேவைப்படுகின்றது. இது வெறுமனே நீதிபதிகளுக்கு மட்டுமல்ல, பேராசிரியர்கள், அதிபர்கள் தொடக்கம் அரசாங்க சேவையில் இருக்கும் அனைவருக்கும் பொருந்தும்.
இளஞ் செழியன் ஒரு வேளை அரசியலுக்கு வந்தால், விக்கினேஸ்வரனை விடவும் கோமாளிக் கூத்துக்களை காண்பிப்பவராகவே இருப்பார். அந்தத் தவறை எந்தவொரு அரசியல் கட்சியும் செய்யாது என்று நம்புவோமாக – அதனையும் மீறி இளஞ்செழியன் நிறுத்தப்பட்டால், தேர்தல் மேடையில் நகைச்சுவைக்கு பஞ்சமிருக்காது. இன்று தமிழ் தேசிய அரசியலே கிட்டத்தட்ட ஒரு நகைச்சுவை போன்றுதானே ஆகிவிட்டது.

.jpeg
)





கருத்துகள் இல்லை