கனடாவில் LTTE சின்னங்களை பொதுவில் பயன்படுத்துவதைத் தடைசெய்யுமாறு இலங்கை கோரிக்கை!


இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், கனடாவில் பிரிவினைவாதக் கொள்கைகளை ஊக்குவிக்கும் செயற்பாடுகளுக்கு எதிராகவும், குறிப்பாக விடுதலைப் புலிகளின் (LTTE) சின்னங்களை பொதுவில் பயன்படுத்துவதைத் தடைசெய்யக் கோரியும் கனடா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் இசபெல் கெத்தரின் மார்ட்டின் அவர்களுடன் நேற்று ( 24) நடைபெற்ற சந்திப்பின்போது அமைச்சர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.


கனடாவில் இயங்கும் உள்ளூர் குழுக்களின் இத்தகைய நடவடிக்கைகள், இலங்கையில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு முரணானது என அமைச்சர் ஹேரத் வலியுறுத்தினார். எனவே, பிரிவினைவாதக் கருத்துக்களை புதுப்பிக்க முற்படும் அல்லது இலங்கையின் இன சமூகங்களிடையே பிளவுகளை உருவாக்கும் நிகழ்வுகள் மற்றும் பிரச்சாரங்களைத் தடுக்க வேண்டியதன் அவசியத்தை ஒட்டாவாவுக்குத் தெரிவிக்குமாறு உயர்ஸ்தானிகரிடம் அவர் கேட்டுக்கொண்டார்.


இந்தச் செயற்பாடுகளைத் தடுக்காமல் விடுவது இலங்கையில் சமூகங்களிடையே சகவாழ்வை வலுப்படுத்த எடுக்கும் முயற்சிகளைப் பாதிப்பதுடன், இருதரப்பு உறவுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும் வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


இதற்குப் பதிலளித்த உயர்ஸ்தானிகர் மார்ட்டின், LTTE அமைப்பு கனடாவில் தடைசெய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பாகவே இன்றும் நீடிப்பதாகவும், LTTE அல்லது பிற பிரிவினைவாதக் கொள்கைகளுடன் தொடர்புடைய எந்தவொரு சின்னத்தையும் கனடாவின் மத்திய அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை என்றும் மீண்டும் வலியுறுத்தினார்.


மேலும், இலங்கையின் இறையாண்மைக்கும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கும் கனடா தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.