கணக்கு மாறா காலத் தொடர்ச்சி..!


எப்போதுமே நவம்பர் 26 , 27 ஆகிய இரண்டு தினங்களில் கடுமையான மன அழுத்தத்திற்குள் சிக்கிக் கொள்ளும் நபர்தான் நானும். நமக்காக உயிரை விட்டவர்களின் நாளில் மனம் கொள்ளும் ஆழ்ந்த குற்ற உணர்வின் இன்னொரு வடிவம் தான் அந்த மன இறுக்கம். அந்தக் கார்த்திகை மாதத்திற்கான குளிர், எப்போதும் மழை பெய்வதற்கான காலநிலை என அந்தக் கார்க் காலச் சூழலும் மனதிற்குள் இறுக்கத்தை இன்னும் அதிகப்படுத்தும் காரணிகள் நம்மைச் சுற்றி இருக்கும். அப்படித்தான் இந்த முறையும்.


இந்த முறை கூடுதலாக சுற்றி நிகழ்கிற அரசியல் குழப்பங்கள், ஊடகங்கள் நடத்துகிற திட்டமிட்ட கருத்து உருவாக்கங்கள்‌ போன்றவற்றால் கொஞ்சம் தளர்ந்திருந்தேன். லட்சியவாதங்களின் மேன்மையை இந்தச் சமூகம் ஏன் உணர மறுக்கிறது என கோபம் வேறு. எப்போதும் நம் தலைவரின் முகம் இது போன்ற பலவீனங்களில் இருந்து என்னை எப்போதும் காப்பாற்றிவிடும். அவர் நிரம்பி இருக்கிற ஒரு இடத்திற்குள் சென்றால் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைத்து தான் காரைக்குடியின் எல்லையில் அமைந்திருந்த அந்த மாவீரர் திடலுக்குள் நுழைந்தேன்.


பிரம்மாண்டமான திடல். உண்மையில் புதுக்கோட்டை காரைக்குடி சிவகங்கை உறவுகள் மிகச் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தார்கள். கடுமையான திட்டமிடல். மிகப்பெரிய மின்னணு ஒளி கட்டவுட்டில் மின்னிக் கொண்டிருந்தார் நம் தலைவர். சுற்றிலும் நூற்றுக்கணக்கான நம் இனத்தின் விடுதலைக்காக மா வீரத்தை விதைத்த குலசாமிகள் பதாகைகளில் காலத்தின் சாட்சிகளாக உறைந்து இருந்தார்கள்.


திடல் முழுக்க கடுமையான லட்சிய இறுக்கம்.சகஜம் ஆகுவதற்கு பக்கத்தில் அமர்ந்திருப்பவரிடம் சிரித்துப் பேசியும் சரியாக வரவில்லை. என்னருகில் தேடி வந்து அமர்ந்து கொண்டாள் என் தங்கை சுனந்தா. அவளும் கடுமையான மன அழுத்தத்தில் இருந்தாள். இன்னொரு புறம் எங்கள் ஐயா மருத்துவர் பாரதிச்செல்வன்.அவர் இலட்சியவாதங்களின் உதாரண மனிதர். இப்படி பலரும் உணர்வுகளின் ஒரே ஒத்திசைவில் அமர்ந்திருக்க, இறுக்கி கட்டப்பட்ட தோலில் அறைய, தொடங்கிய பறை இசை இன்னும் எல்லோரையும் மேலும் உணர்வின் இறுக்கத்திற்கு அழைத்துச் சென்றது. நண்பர்கள் பலரை அரங்கத்தில் சந்தித்தப் போது புன்னகைத்து கைகுலுக்கி கொண்டாலும் எல்லோரும் இதே போன்ற மனநிலையில் தான் இருந்தார்கள் என்பதை உணர முடிந்தது.


அப்போதுதான் அண்ணன் என்ற அந்தக் கனவு மனிதன் உயர்த்தும் கரங்களோடு உள்ளே நுழைந்தான்.‌ எப்போதுமே நம் மன உணர்வுகளின் அலைவரிசையை அந்த மனிதன் அறிந்து வைத்திருப்பது தான் இதுவரை நம்மால் உணர்ந்து கொள்ள முடியாத அதிசயம். நம் கேள்விகளுக்கான பதில்களை அவரது அனல் மொழி கொண்டிருக்கும். அந்த நம்பிக்கையை ஒருபோதும் அண்ணன் தகர்த்ததில்லை. 


சந்திப்பிற்காக அருகில் சென்று நானும் தம்பி ஆனந்தும் கை கொடுத்தோம். மென்மையாக என்னை பார்த்து சிரித்து "உன்னை நான் அறிவேன்" என்பது போல ஒரு பார்வை.


6:00 மணி கடக்க தொடங்கியது. பல்லாயிரக்கணக்கான ஒரே அலைவரிசையில் கூடிய அந்தக் கூட்டம் பெரும் அமைதிக்கு உள்ளானது. அந்த அமைதி ஒரு கம்பீரம். ஒரு தேர்ந்த ராணுவ அணிக்கு வாய்க்கும் நேர்த்தி. அண்ணன் *ஈழ* தேசியக் கொடியை ஏற்றத் தொடங்கினார். கரிகால் சோழனும், ராசராசனும் அரசேந்திரனும் ஏந்திய புலிக்கொடி, ஒரே சமயத்தில் இமயத்திலும் ஈழத்திலும் பறந்த கொடி, எம் தலைவரும் எம் குலசாமிகளும் உயிரென சுமந்த கொடி "ஏறுது பார் கொடி ஏறுது பார்" என வானை நோக்கி ஏறி வானில் நிற்கும் எம் *மா* வீரர்களை நோக்கி ஏறி சிலிர்த்து பறந்தது. 


பிறகு நாம் தமிழரின் கொடி. அதற்குப் பிறகு மீண்டும் கனத்த அமைதி. அந்த ஐந்து நிமிடங்களில் எங்கோ தூரத்தில் கேட்ட ஒரு சிறு குழந்தையின் சிணுகங்கலான அழுகைக் குரல் தவிர வேறு எதுவும் கேட்கவில்லை. எல்லோரும் அமைதியாக உறைந்து இருந்தோம். அண்ணன் மட்டும் எழுந்து சில தங்கைகளோடு சுடரேற்ற நடந்துச் சென்றார். தாயக கனவினில் என்ற அந்த பாடல் ஒலிக்க தொடங்கிய அந்த நொடி.. தலையை குனிந்த என்னால் நிமிர முடியவில்லை. நிமிர்ந்து பார்த்த போது எரிந்த தீ கணங்குகளுக்கு பின்னால் இறுகிப்போயிருந்த அண்ணனின் முகம் தெரிந்தது.


அதற்குப் பிறகு வரிசையாக காணொளி காட்சிகள். ஒவ்வொன்றும் கடந்த துயர வரலாற்றின் பேராவணங்கள். மா *வீரர்களைப் பற்றிய பாடல், சிரஞ்சீவி மாஸ்டர் உருவாக்கத்தில் *செம்மணி புதைகுழிகளைப் பற்றிய காணொளி பாடல், தம்பி முரளி மனோகரின் "தேசமே" பாடல் என ஒவ்வொன்றும் நம்மை உணர்வின் உச்ச நிலைக்கு ஆழ்த்தியது.


அந்த உணர்வின் உச்சத்திலேயே அண்ணன் பேசத் தொடங்கினார். நேற்று நிகழ்ந்தது ஒரு கூட்டத்தின் பேச்சல்ல. அது உணர்ச்சியின் பேரலை. "தன் குடும்பத்தின் மூன்று தலைமுறைகளை போர்க்களத்திலேயே தேச விடுதலைக்காக பலி கொடுத்தவன்‌ என் தலைவன்" என அவர் முழங்கியபோது என் கண்கள் நிறைந்து வழியத் தொடங்கின. பக்கத்தில் அமர்ந்திருந்த தங்கை சுனந்தா அழுதுவிட்டாள்.


அதற்குப் பிறகு நடந்தது எல்லாம் போர்க்களச் சதிராட்டம். சத்தியத்தின் ஆவேசம். வஞ்சகத்தால் தோற்கடிக்கப்பட்ட யுத்தத்தில் மிஞ்சி இருக்கும் வீரன் ஒருவனின் வஞ்சினம். காயம் பட்டப் புலியின் அடங்காத சீற்றம்.

அந்தக் குரலை நான் எங்கேயோ வரலாற்று வீதியில் கேட்டது போல எனக்கு நினைவு. 


ஆமாம். காளையார் கோவில் காட்டில் இறுதி யுத்தத்திற்காக தயாரான சினம் கொண்ட சின்ன மருதுவின் குரல் தான் அது. ஸ்ரீரங்கப்பட்டினத்தில் சுற்றி வளைக்கப்பட்டபோது ஒரு சில மெய்க்காப்பாளர்களுடன் இருந்த திப்பு சுல்தான் இறுதியாக முழங்கிய வீர முழக்கம் தான் அது.


அவ்வளவு செறிவு. அவ்வளவு உறுதி.


இறுக்கி கட்டப்பட்ட தெறிப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட கணைகள் போல அவரது சொற்கள் ஒவ்வொன்றும் அங்கே கூடியிருந்தோரின் ஆன்மாவின் குத்திக் கிழித்தன. ஒரு சின்ன சலசலப்பு இருக்க வேண்டுமே.. ஒரு பெருமழைக்கு முன்னால் நேரிடும் கனத்த அமைதி போல அந்த மனிதனின் சொற்களுக்கு முன்னால் நாங்கள் கலங்கிய கண்களோடும், சினமேறிய மனதோடும் அமர்ந்திருந்தோம்.


கூட்டம் முடிந்தது. பெரிதாக யாரும் பேசிக் கொள்ளாமல் அந்த இடத்திலிருந்து புறப்பட்டோம். 


சென்று கொண்டிருக்கும்போது அண்ணன் சீமானிடமிருந்து அழைப்பு. "உங்கள் ஆன்மாவின் குரல் அண்ணா இது.. " என்று நெகிழ்ந்தவாறே சொன்னேன். அடுத்த அழைப்பில் வந்த தங்கை சுனந்தா " அண்ணா! அண்ணன் உடம்பில் தலைவர் புகுந்து விட்டார். அது தேசியத் தலைவரின் சத்திய ஆவேசம் அண்ணா !" என்று சொன்னாள்.


இந்த இரண்டில் எது ? என அமைதியாக மகிழுந்தில் சென்று கொண்டிருக்கும் போது யோசித்த போது தான் எனக்கு ஒன்று புரிந்தது.


இந்த இரண்டும் வெவ்வேறல்ல. இரண்டும் ஒன்றுதான். என்ற உண்மை தான் அது. அண்ணனின் ஆன்மக் குரலில் தான் தலைவர் நித்தியமாய் ஜீவித்திருக்கிறார் ‌.


அது கணக்கு மாறா காலத் தொடர்ச்சி.


- அண்ணன் மணி செந்தில் ( Mani Senthil )

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.