போராளிகளும் மரணங்களும்....!


போராளி வைதேகி அக்கா அண்மையில் காயங்களின் தாக்கத்தால் மரணித்திருந்தார், 


தேச விலைதலைக் கனவைச் சுமந்தவரின் ஆத்மா அமைதி பெறட்டும்.


யுத்தம் முடிவுற்ற பின்னர் போராளிகள் மிகவும் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டே இருக்கின்றார்கள் 


2009 பின்னர் சுகதேகியான போராளிகள் பலரும் நோயாளிகளாகவே காணப்படுகின்றனர். 


இதில் அதிகமானோருக்கு வயிற்றுப் பிரச்சனை,சுவாசப் பிரச்சனை,காயங்களின் தாக்கத்தால் பிரச்சனையென தொடர்கிறது. 


இரண்டு நாட்களுக்கு முன்பு நான் எனது சிகிச்சைக்காக மருத்துவமனை சென்றிருந்தேன். 


அங்கு என் தோழிகள் நால்வர் வந்திருந்தார்கள்.அதில் ஒருவருக்கு வயிற்றுப் பிரச்சனையும் இன்னொருவருக்கு சுவாசப் பிரச்சனையுமென தொடர் சிகிச்சை பெறுபவர்களாக இருந்தனர் 


இவை உணவைக்கொண்டு உருவாக்கப்பட்ட நோய்களா?அல்லது வெடிமருந்தை சுவாசித்ததனால் ஏற்பட்ட நோய்களா என்பது தெரியாது. 


ஆனால் இன்று பல போராளிகள் சிகிச்சையோடுதான் தங்கள் வாழ்நாளை கழிக்கின்றார்கள். 


பலர் புற்றுநோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இறந்து போய்விட்டார்கள்.இன்னும் சிலரோ புற்றுநோயால் அவதிப்பட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.


ஒரு கிழமைக்கு முன்புகூட சக போராளி ஒருவருக்கு வவுனியாவில் Endoscopy செய்வதற்கு மருத்துவமனையில் வந்து நிற்கும்படி கூறியுள்ளதாக இன்னொரு போராளி தங்கை ஒருத்தி கூறி கவலைப்பட்டிருந்தார். 


நோயாளியான தோழி திருமணம் ஆகாத நாற்பத்து ஐந்து வயதை கடந்தவர்.பொருளாதார பிரச்சனையால் மிகவும் சிரமப்படுபவர்.தாய் தந்தையை கவனித்துக்கொள்பவரும் இவரே


வயதான பெற்றோரின் வாழ்க்கை முடிந்த பின்னர் யாருமின்றி தனிமையோடும் நோயோடும் பொருளாதார ரீதியிலும் பெரும் சிரமப்படப்போகிறேன் என்ற எண்ணமே அவரை இன்னும் நோயாளி ஆக்கிக்கொண்டிருக்கின்றது.


அதிகரித்த நோயின் தாக்கத்தாலும் காயத்தின் வலிகளை தாங்க முடியாமலும் தற்கொலை செய்த போராளிகளும் உண்டு.


மக்களுக்காக தங்கள் இளமைக்கால வாழ்க்கையை தியாகம் செய்தவர்களை இப்போது கஸ்ரமும் நோயும் ஆட்டிப் படைத்துக்கொண்டிக்கின்றது


போராளிகளின் மரணங்கள் இன்னும் தொடர்கதைகளாகவே இருக்கப்போகின்றது என்பதே பெரும் துயரமான விடயமாகிறது...


பிரபா அன்பு

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.