ஆண்டவனின் ஆற்றலை அறிய முடியுமா?
ஒரு பெரிய வியாபாரி பணப்பையுடன் சந்தையிலிருந்து திரும்பினான். வழியில் மழை சோவென்று கொட்டியது. வியாபாரியும் அவன் சவாரி செய்த குதிரையும் சொட்டச் சொட்ட நனைந்து போனார்கள்.
வழிப்பயணத்தில் தனக்கு இவ்வளவு சிரமம் நேர்ந்ததற்காக ஆண்டவனை அந்த வியாபாரி நிந்தித்தான். ''ஆண்டவனைக் கருணையுடையவன் என்று தெரிந்தவர்கள் சொல்லுகிறார்கள். நானும் என் குதிரையும் மழையால் அவதிப்படுவதைப் பார்த்தால் ஆண்டவனைக் கருணையுடையவன் என்று எப்படிச் சொல்ல முடியும்?'' என்று பழித்தான்,
சிறிது நேரத்திற்குப் பின் மழையின் வேகம் சிறிது தணிந்ததே அல்லாமல் ஓய்ந்தபாடாக இல்லை. வியாபாரி செல்ல வேண்டிய காரியமோ அவசரமான காரியம். ஆகவே மழை பெய்வதைப் பொருட்படுத்தாமல் அவன் தொடர்ந்து பிரயாணம் செய்தான்.
வழியில் அடர்ந்த காடு ஒன்று குறுக்கிட்டது. ஒரு திருடன் வியாபாரியை வழிமறித்துத் துப்பாக்கியை நீட்டிப் பயமுறுத்தினான். ''பணப்பையைக் கொடுத்து விடு. இல்லையென்றால் துப்பாக்கியால் உன்னைச் சுட்டுத் தள்ளுவேன்'' என்று சொல்லித் துப்பாக்கியின் விசையை இழுத்தான். துப்பாக்கி சுடவில்லை. பலத்த மழை காரணமாக உள்ளே இருந்த மருந்து பதத்துப் போய்விட்டதால், திருடனால் சுட முடியவில்லை.
விவரம் தெரிய வந்ததும் வியாபாரி மகிழ்ச்சியடைந்தான். குதிரையை முடுக்கிவிட்டுத் திருடனிடமிருந்து தப்பித்துக் கொண்டான். வீட்டை அடைந்ததும் வாயார, மனமார, ஆண்டவனை அந்த வியாபாரி வாழ்த்தினான்.
“மழை பெய்வித்ததற்காக ஆண்டவனைப் பழித்த என் மடமையை என்னவென்று சொல்வது! மழை பெய்ததனால்தான் மருந்து கெட்டுப்போயிற்று. இல்லாவிட்டால், திருடன் என்னைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருப்பான். என் பணப்பையையும் அபகரித்துச் சென்றிருப்பான். ஆண்டவன் அளவற்ற கருணையுடையவன் என்பது உண்மைதான். புல்லறிவுடைய மனிதனால் ஆண்டவனுடைய பெருமையையும் ஆற்றலையும் சரிவர அறிய முடியாது; அளக்கவும் முடியாது'' என்று சொல்லித் தன்னைத் தானே அந்த வியாபாரி கடிந்து கொண்டான்.
From :- MUTHUKAMALAM

.jpeg
)





கருத்துகள் இல்லை