வீடும் என் வளவும். - சுரேஷ் தர்மா!!



முற்றத்து மாமரம்

முழுசாக மூடியிருக்க

முள் முருங்கை, கிழுவை

தென்னை,கொய்யா, பூவரசோடு

சாமரம் வீச


ஒய்யாரமாய் 

உயர்ந்து நின்றது 

எங்கட வீடு


அன்றாடம் கேக்கும் 

அம்மாவின் குரல்

அழகான ஆலாபனை

எங்க வீட்டுக்கு.


அப்பு, ஆச்சி

மாமாமார்

மாமிமார் 

மச்சாள்மார்

மச்சான்மார்

தம்பியரும்

தங்கைகளும்

ஊரார் உறவுகள் எண்டு

கூடிக் களிச்சு 

குதூகலிச்ச வீடு அது.


எங்கட

சிரிப்பொலி கேட்டு

சிலாகித்த 

தாய் மடி அது..


காலத்தால் வீசப்பட்டு - நாங்கள்

கலைந்து போன 

அந்நாளில் 

அழுது கரைந்தது 

அந்த வீடு.


எங்கள்

கூக்குரல் கேட்காமல்

அது தவித்த தவிப்பு

ஆருக்குப் புரியும்?


ஆண்டுகள் 

பல கடந்து

மீண்டும் நாங்கள்

வந்த போது

அப்பப்பா 

அதன் கோலம் 

என்னத்தைச் சொல்ல...


புத்து மண்ணால் நிறைஞ்சு

புழுதி மலையாய் படிஞ்சு

சௌந்தர்ய தேவதையின்

ஏழைக்கோலம் போல 

நின்றது எங்கட வீடு.


தூசி படிந்த

அதன் சுவர்களில் 

ஊமைக்குரலாய் 

படிந்து கிடக்கிறது 

எங்களைத் தேடின ஏக்கம்.


என் மனமும் இறுக்கிக் கிடக்கறது...

ஊர் நோக்கிய

உணர்வோடு


அப்புவின் 

அந்தக் கடைசி நிமிடம்

அப்பாவின் 

ஆத்மா பறிப்பு

ஆசை மாமாவின்

உயிர் எடுப்பு

அத்தைகளின்

இழப்பின் வலிக்குள்

அன்பு மச்சாள்

அரும்பழிப்பு


ஆடிப் போனது

அந்த வீட்டின்

அழகு....


ஐயர் அற்ற கோவில் போல்

ஆசை அற்ற மனிதம் போல்

ஓசை அற்ற மணியைப் போல்

வீடும் என் அடி வளவும்  அடங்கிக் கிடக்கிறது....


நெருடும் அந்த நினைவோடு

நகரும் என் நாட்கள்...

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.