கொரெட்டி’ பனிப் புயலால் பிரிட்டனில் பேரழிவு!📸


பிரித்தானியாவை தாக்கிய ‘கொரெட்டி’ (Goretti) கடும் பனிப் புயல், தற்போது நாட்டை விட்டு விலகிச் சென்றாலும், மோசமான வானிலை நிலைமைகள் தொடர்ந்தும் நிலவுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மணிக்கு 99 மைல் (சுமார் 159 கிமீ) வேகத்தில் வீசிய பலத்த காற்று மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் பத்தாயிரக்கணக்கான மக்கள் இன்னும் மின்சார வசதி இன்றி அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இங்கிலாந்தின் தென்மேற்கு பகுதிகள் இந்த புயலால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


உயிர் ஆபத்து எச்சரிக்கை


தென்மேற்கு இங்கிலாந்தில் அரிய ‘சிவப்பு எச்சரிக்கை’ அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு 40,000-க்கும் அதிகமான வீடுகள் மின்சாரம் இழந்தன. இதுவரை சுமார் 1.5 இலட்சம் வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ சமூக மையங்கள் திறக்கப்பட்டு உணவு மற்றும் அவசர உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. செம்மஞ்சள் குறுக்கு சங்கமும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளது.


போக்குவரத்து முற்றிலும் பாதிப்பு


பனியும் புயலும் காரணமாக, நாடு முழுவதும் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்கொட்லாந்தில் பல சாலை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதுடன், சில ரயில் சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன.

ஹீத்ரோ விமான நிலையத்தில் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பர்மிங்காம் மற்றும் ஈஸ்ட் மிட்லண்ட்ஸ் விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டாலும், சேவைகள் வரம்புடன் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோர்ன்வாலில் A30 பிரதான சாலை, மரங்கள் முறிந்து விழுந்ததால் இருபுறமும் மூடப்பட்டுள்ளது.


 மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்


கடுமையான வானிலை மத்தியிலும் RNLI மீட்புக் குழுக்கள், கடலில் ஏற்பட்ட 7 விபத்துகளுக்கு உடனடி உதவி வழங்கியுள்ளன. பல மணி நேரங்கள் கடலில் தங்கி, ஆபத்தில் இருந்தவர்களை அவர்கள் மீட்டதாக தெரிவிக்கப்படுகிறது.


அரசின் அவசர நடவடிக்கை கோரிக்கை


நிலைமையை கட்டுப்படுத்த அரசின் அவசர ‘கோப்ரா’ குழுவை கூட்ட வேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், ஸ்கொட்லாந்து, வடக்கு இங்கிலாந்து மற்றும் மிட்லண்ட்ஸ் பகுதிகளுக்கு மஞ்சள் வானிலை எச்சரிக்கை தொடர்ந்தும் அமலில் இருப்பதால், பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு வானிலை துறை அறிவுறுத்தியுள்ளது.






கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.