காணாமல் போனோர் ஆர்ப்பாட்ட பேரணிக்குள் என் தோழி (சங்கவி/அன்பினி)யின் புகைப்படம். !


சங்கவியின் புகைப்படத்தை வைத்துத்தான் அவள் அம்மாவை இனம் கண்டுகொண்டேன்.


கன்னங்களில் கண்ணீர் வழிந்தபடியே அழுதுகொண்டிருக்கும் அம்மாவின் புகைப்படத்தைப் பார்த்தபோது நான் ஒரு கணம் கலங்கிப்போனேன். 


தன் மகளினைத்தேடி இந்தத்தாய் 2009 ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை எவளவு கண்ணீரை சிந்திக்கொண்டிருக்கின்றார். 


தன்பிள்ளையின் முகத்தை ஒரு தடவையேனும் பார்த்துவிடமாட்டேனா என 17 வருடங்களாக தேடி அலைந்துகொண்டிருக்கின்றார். 


இன்றுதான் என் தோழியின் அம்மாவின் தொலைபேசி எண் கிடைத்தது.அம்மாவோடு கதைப்பதற்காக போன் நம்பர் வாங்கினேன்.ஆனால் அவரோடு கதைக்க என்னால் முடியவில்லை.


எப்படியும் நான் தொலைபேசி அழைப்பெடுத்து "அம்மா நான் உங்கள் மகளோடு ஒன்றாக நின்ற பிள்ளை" கதைக்கிறேன் என்று கதைக்கும்போது அம்மா நிச்சயமாக மீண்டும் மகளை நினைத்து அழத்தொடங்குவார் என்பதால் தவிர்த்துக்கொண்டேன்.


பிள்ளையை பிரிந்து 17 வருடங்களாக காணாமல்போனோர் ஆர்ப்பாட்டங்களுக்குச் சென்று நீதிகேட்டு அலையும் ஒரு தாயின் வலி,கண்ணீர் எவளவு கனதியானதென்பதை நானறிவேன். 


2009 க்கு முன்பு மரணித்துப்போன என்,தோழிகளின் பெற்றோர் என்னோடு கதைக்கும்போது கூறுவதெல்லாம் "பிள்ளை உங்களோட கதைப்பது எங்களுக்கு ஒரு ஆறுதல்"என்றுதான். 


தமது பிள்ளைகள் மண்ணோடு மறைந்து போனாலும் அவர்களோடு நின்ற சகதோழிகளுடன் கதைப்பது பெற்றோருக்கு ஒரு ஆறுதலாக அமைந்துவிடுகிறது. 


இப்போதுவரை சங்கவியை அவளது அம்மா தேடிக்கொண்டுதான் இருக்கிறார்.அவள் பற்றிய இறுதிக்கால தகவல் தெரிந்தபோதும் எதுவும் என்னால் கதைக்கவும் முடியவில்லை. 


சங்கவி/அன்பினா வைப் பற்றி கூறுவதாக இருந்தால் அன்புக்கும் காமடிக்கும் இவளிடம் பஞ்சம் இருக்காது.கோபப்படத் தெரியாதவள். 


பயிற்சிகளின் இடையில் யாராவது இயலாமல் நின்றாலும் ஊக்கப்படுத்தி கூட்டிச் செல்லுவாள். 


வேலைக் களைப்பில் சாப்பாடு வேண்டாமென இருப்போரையும் பகிடிக்கதைகள்கூறி சாப்பிடவைத்து விடுவாள். 


இயலாதென்று அவள் கூறி நாம் அறியோம். 


சங்கவி என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.சகலதும் தெரிந்த,அறிந்த துடிப்பான இந்த கெட்டிக்காரியைத்தான் 


இன்று அவள் அம்மா காணாமல் போனோர் பட்டியலில் தேடிக்கொண்டிருக்கின்றார். 


என் தோழியே உன் பெற்றவளோடு கதைப்பதற்கோ அவரை ஆறுதல்படுத்திடவோ எம்மால் முடியவில்லை. 


காலம்தான் உன் தாயாரின் மனக்கவலையை ஆறுதல்படுத்த வேண்டும்


பிரபா அன்பு

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.