தமிழர் நிலங்கள் பறிபோகும் நிலையில் புலம்பெயர் தமிழருக்கு முதலீட்டு அழைப்பு – தமிழர் தரப்புகள் விசனம்📸


டாவோஸ் உலகப் பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ள சுவிற்சர்லாந்து வந்துள்ள இலங்கை பிரதமர் டாக்டர் ஹரினி அமரசூரிய, சூரிச்சில் இலங்கை–சுவிற்சர்லாந்து வர்த்தக சமூக உறுப்பினர்களைச் சந்தித்து முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பு 2026 ஜனவரி 22ஆம் திகதி சூரிச் விமான நிலையத்தில் நடைபெற்றது.


இதில் தொழில் அமைச்சரும் நிதி பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ, உலக வர்த்தக அமைப்பிற்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி சமந்த விஜேசேகர உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு, நிலையான மற்றும் வெளிப்படையான கொள்கைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், ‘World Woman Davos Agenda 2026’ நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர், தீர்மான எடுப்பு செயல்முறைகளில் பெண்கள் விலக்கப்படுவது கட்டமைப்பு சார்ந்த பிரச்சினை என சுட்டிக்காட்டினார். அத்துடன், சுவிற்சர்லாந்து நாட்டின் ஹமில்டன் மெடிக்கல், வேரியோசிஸ்டம்ஸ் நிறுவனங்களுக்கு விஜயம் செய்து தொழிற்பயிற்சி, கல்வி தொடர்பான ஒத்துழைப்புகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினார்.


இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவையும், சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினத்தையும் பிரதமர் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து கலந்துரையாடினார்.


அதே சமயம், ஊடகங்களை நேரடியாகச் சந்திப்பதற்கும், வர்த்தகத்தைத் தாண்டி இலங்கையின் இனப்பிரச்சனை, தமிழர் அரசியல் உரிமைகள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கும் பிரதமர் மறுப்புத் தெரிவித்ததாக ஊடக வட்டங்கள் கவலை வெளியிட்டுள்ளன.


ஆனால், பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்வதும், தமிழர் நிலங்கள் தொடர்ந்து சூறையாடப்படுவதும், இனப்பிரச்சனைக்கான நிரந்தர அரசியல் தீர்வு முன்வைக்கப்படாமையும் உள்ள நிலையில், புலம்பெயர் தமிழர்களை நாட்டை கட்டியெழுப்ப அழைப்பது நேர்மையற்ற அணுகுமுறை என தமிழர் தரப்புகள் அதிருப்தி வெளியிட்டுள்ளன.


இணுவையூர் மயூரன்

23.01.2026


படங்கள்: நன்றி சுபீட்சம்










#news #NewsUpdate #switzerland #srilanka #HariniAmarasuriya #davos

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.