ஸ்பெயினின் அதிரடி முடிவு: 5 லட்சம் குடியேறிகளுக்கு அங்கீகாரம்!
ஐரோப்பாவையே உற்றுநோக்க வைத்துள்ள ஸ்பெயினின் அதிரடி முடிவு: 5 லட்சம் குடியேறிகளுக்கு அங்கீகாரம்!
ஐரோப்பிய நாடுகள் பலவும் குடியேறிகளுக்கு எதிராகக் கடுமையான சட்டங்களைக் கொண்டுவரும் வேளையில், ஸ்பெயின் (Spain) எடுத்துள்ள ஒரு துணிச்சலான முடிவு ஐரோப்பிய அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
"ஸ்பெயின் 5,00,000 சட்டவிரோதக் குடியேறிகளை வரன்முறைப்படுத்தப் போகிறது. இது ஐரோப்பாவிற்குள் மேலும் சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் நுழைவதற்கான ஒரு அழைப்பாக (Appel d'air) அமையும்" என்ற விமர்சனம் தற்போது பலமாக எழுந்துள்ளது.
இந்தச் செய்தியின் பின்னணி, காரணம் மற்றும் விளைவுகளை பற்றிய விரிவான பார்வை .
ஸ்பெயின் நாடாளுமன்றம் சமீபத்தில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முன்மொழிவை விவாதத்திற்கு ஏற்றுக்கொண்டுள்ளது. அதன்படி, தற்போது ஸ்பெயினில் முறையான ஆவணங்கள் இன்றி (Undocumented) வசித்து வரும் சுமார் 5 லட்சம் பேருக்கு சட்டபூர்வமான குடியுரிமை அல்லது வசிப்பிட அனுமதி (Residency Permit) வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் அவர்கள் சட்டவிரோதவாதிகள் என்ற நிலையிலிருந்து மாறி, முறையான தொழிலாளர்களாக அங்கீகரிக்கப்படுவார்கள்.
2. இந்தத் திட்டத்தின் மிகவும் சுவாரசியமான அம்சம் என்னவென்றால், இது அரசாங்கத்தால் தானாகக் கொண்டுவரப்பட்ட திட்டம் அல்ல. இது "மக்கள் சட்டமன்ற முன்முயற்சி" (Popular Legislative Initiative - ILP) என்ற மக்கள் திரள் அமைப்பின் முன் முயற்சியால் கொண்டுவரப்பட்ட திட்டமாகும்.
ஸ்பெயின் நாட்டு மக்களே, "எங்களுடன் வசிக்கும் இந்த மக்களுக்கு அங்கீகாரம் கொடுங்கள்" என்று கோரி 7 லட்சத்திற்கும் அதிகமான கையெழுத்துகளைச் சேகரித்து நாடாளுமன்றத்திற்கு அனுப்பினர்.
சுமார் 900-க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் மற்றும் கத்தோலிக்கத் திருச்சபை கூட இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
3. ஸ்பெயின் அரசாங்கம் இதை மனிதாபிமான அடிப்படையில் மட்டுமல்லாமல், பொருளாதாரத் தேவையாகவும் பார்க்கிறது:
ஸ்பெயினில் இளையோர் எண்ணிக்கை குறைந்து, முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு துறைகளில் வேலை செய்ய ஆட்கள் இல்லாத நிலை உள்ளது .
விவசாயம், கட்டுமானம், ஹோட்டல் மற்றும் முதியோர் பராமரிப்பு போன்ற துறைகளில் ஸ்பெயின் மக்களுக்குச் செய்ய விருப்பமில்லாத வேலைகளை இந்தக் குடியேறிகளே செய்து வருகின்றனர்.
இவர்களுக்கு ஆவணங்கள் கொடுப்பதன் மூலம், இவர்களை வரி வளையத்திற்குள் கொண்டுவர முடியும். ஒவ்வொரு குடியேறியும் ஆண்டிற்கு சுமார் 3,400 யூரோக்களுக்கு மேல் அரசுக்கு வரியாகச் செலுத்துவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது நாட்டின் சமூகப் பாதுகாப்பு நிதிக்கு (Social Security) பெரும் பலம் சேர்க்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
4. ஸ்பெயினின் வலதுசாரி கட்சிகள் (உதாரணமாக ஸ்பெயினின் VOX கட்சி) மற்றும் அண்டை ஐரோப்பிய நாடுகள் சில இதை கடுமையாக எதிர்க்கின்றன.
'ஸ்பெயின் இப்படி 5 லட்சம் பேரை ஏற்றுக்கொண்டால், ஆப்பிரிக்கா மற்றும் பிற நாடுகளிலிருந்து இன்னும் அதிகமானோர், "ஸ்பெயினுக்குப் போனால் எப்படியாவது வதிவிடவுரிமை கிடைத்துவிடும்" என்ற நம்பிக்கையில் ஐரோப்பாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயற்சிப்பார்கள்' என்பது அவர்களின் வாதம்.
பிரான்ஸ் போன்ற அண்டை நாடுகள், ஸ்பெயின் வழியாகத் தங்கள் நாட்டிற்குள் குடியேறிகள் ஊடுருவக்கூடும் என்று அஞ்சுகின்றன.
சுருக்கமாக...
ஸ்பெயின் தனது பொருளாதாரத்தைச் சரிசெய்யவும், மனிதாபிமான அடிப்படையிலும் "கதவுகளைத் திறக்கிறது". ஆனால், மற்ற ஐரோப்பிய நாடுகள் இது "எல்லைப் பாதுகாப்பிற்கு ஆபத்து" என்று எச்சரிக்கின்றன.
ஐரோப்பா , அகதிகள் வருகையை தடுக்க வேலிகள் அமைக்கும்போது, ஸ்பெயின் மட்டும் பாலம் அமைக்க முயல்வது ஒரு துணிச்சலான முடிவு என்றே கூறலாம்.
இந்த விடயம் தொடர்பாக ஸ்பெயின் சமூகப் பாதுகாப்பு மற்றும் குடியேற்றத்துறை அமைச்சர் எல்மா சாய்ஸ் (Elma Saiz) வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்தத் திட்டத்தில் பயன்பெற இரண்டு முக்கிய நிபந்தனைகள் உள்ளன:
விண்ணப்பதாரர்கள் 2025 டிசம்பர் 31-ம் தேதிக்கு முன்னதாக ஸ்பெயினுக்குள் வந்திருக்க வேண்டும்.
அவர்கள் ஸ்பெயினில் குறைந்தது ஐந்து மாதங்களாவது தங்கியிருக்க வேண்டும்.
இது வெறும் காகித அங்கீகாரம் மட்டுமல்ல. சட்டபூர்வமாக்கப்படும் இந்த 5 லட்சம் பேரும்:
ஸ்பெயினின் எந்தப் பகுதியிலும் வசிக்கலாம்.
எந்தத் துறையிலும் சட்டபூர்வமாக வேலை செய்யலாம்.
அரசு அமைச்சர் கூறுவது போல, "இது அந்த மக்களுக்குக் கண்ணியத்தையும், உரிமைகளையும், வாய்ப்புகளையும் வழங்குவதோடு, ஸ்பெயினின் பொருளாதாரத்திற்கும் புதிய உத்வேகத்தை அளிக்கும்."
ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sánchez) தலைமையிலான அரசுக்குப் பெரும்பான்மை பலம் இல்லை. எனவே, நாடாளுமன்ற வாக்கெடுப்பில் இந்தத் திட்டம் தோல்வியடைவதைத் தவிர்க்க, அரசு ஒரு "ராஜ தந்திரத்தை" கையாண்டுள்ளது.
அரசியலமைப்பில் உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, இதை ஒரு "அரச ஆணை" (Royal Decree) மூலம் நிறைவேற்றியுள்ளனர்.
பொதுவாக அகதிகளின் வருகையை "அதிகப்படியான ஊடுருவல்" என்று வலதுசாரி கடசிகளும் அமைப்புக்களும் கூச்சலிடப்படும் நிலையில், புள்ளிவிவரங்கள் வேறு கதையைச் சொல்கின்றன:
2024-ம் ஆண்டை ஒப்பிடும்போது, 2025-ல் ஸ்பெயினுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்களின் எண்ணிக்கை 42.6% குறைந்துள்ளது.
2024-ல் 64,000 பேர் வந்த நிலையில், 2025-ல் அது 37,000 ஆகக் குறைந்துள்ளது.
இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள ஒரு குறுகிய காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது:
ஏப்ரல் 2026 முதல் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.
ஜூன் 30, 2026 அன்றுடன் இதற்கான காலக்கெடு முடிவடையும்.
மொத்தத்தில், 4.9 கோடி மக்கள் தொகை கொண்ட ஸ்பெயினில் ஏற்கனவே 70 லட்சம் வெளிநாட்டினர் வசித்து வரும் நிலையில், மேலும் 5 லட்சம் பேரை அரவணைக்க ஸ்பெயின் எடுத்துள்ள இந்த முடிவு, 2026-ம் ஆண்டின் மிக முக்கியமான ஐரோப்பிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
-சிவா சின்னப்பொடி

.jpeg
)





கருத்துகள் இல்லை