இலங்கை பொலீசாருக்கு சட்டமீறல் என்பது ஒன்றும் புதிதல்ல!

 


யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தை அடுத்து, வழக்கம் போலச் சிலர் "நடுநிலை" என்ற போர்வையில் குற்றவாளிகளுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். 


ஒரு நபர் உயிரிழந்த பின்னர் அவரது வயதைக் கணித்து, "அவர் சிறுவன்" என்று முத்திரை குத்தி அனுதாபம் தேடுவது, சட்டத்தையும் ஒழுங்கையும் கேலிக்கூத்தாக்கும் செயலாகும்.


சுட்ட பின்னரே அவர் 17 வயது என்பது தெரியவந்தது. ஆனால், நள்ளிரவு 1:00 மணிக்கு, உரிமம் (License) இன்றி, வான் இருக்கைகளைக் கழற்றிவிட்டு, வாள், கஞ்சா மற்றும் கயிறுகளுடன் உலாவரும் ஒருவரை "சிறுவன்" என்று அழைப்பது எந்த விதத்தில் நியாயம்? இது சிறுவயது அறியாமையல்ல; திட்டமிட்ட கிரிமினல் வேலை.


ஒருவர் குற்றவாளியாக இருந்தாலும், அவருக்குத் தண்டனை வழங்க வேண்டியது நீதிமன்றமே தவிர துப்பாக்கி அல்ல. இலங்கையின் சட்டப் புத்தகங்கள் பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகம் குறித்து என்ன சொல்கின்றன?


கைது செய்யும்போது ஒருவர் இணங்கவில்லை என்றால், அவரைப் பிடிக்கத் தேவையான பலத்தைப் பிரயோகிக்கலாம். ஆனால், பிரிவு 23(2) இன் படி, அவர் மீதான குற்றம் மரண தண்டனைக்குரியதாக இருந்தாலொழிய, அவரது மரணத்தை விளைவிக்கும் அளவுக்குப் பலத்தைப் பிரயோகிக்க அனுமதியில்லை. வீதி ஒழுங்கு மீறல் அல்லது தப்பியோடல் என்பவை மரண தண்டனைக்குரிய குற்றங்கள் அல்ல.


பொலிஸார் தங்கள் உயிருக்கு அல்லது பொதுமக்களின் உயிருக்கு உடனடி ஆபத்து ஏற்படும் போது மட்டுமே சுட முடியும். வாகனம் பொலிஸாரைத் தாண்டிச் சென்றுவிட்ட நிலையில் (Fleeing suspect), முதுகில் சுடுவது தற்காப்பு உரிமையின் கீழ் வராது.


ஓடும் வாகனங்களை நோக்கிச் சுடுவது கடைசித் தெரிவாகவே இருக்க வேண்டும். அப்படியே சுட்டாலும் ரயரை (Tyre) நோக்கித்தான் சுட வேண்டும். ஆனால், இங்கே சாரதி மீது தோட்டா பாய்ந்திருப்பது சட்ட மீறலாகவே பார்க்கப்படுகிறது.


இலங்கை பொலீசாருக்கு சட்டமீறல் என்பது ஒன்றும் புதிதல்ல. 


ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரமான மாட்டைத் திருடிச் செல்பவனுக்கும், போதைப் பொருள் வியாபாரிக்கும் பெரிய வித்தியாசமில்லை. ஏழைத் தாய்மார்கள் பிள்ளையைப் போல வளர்க்கும் மாடுகளை இறைச்சிக்காகக் கடத்துவது, அந்தப் மக்களின் சாபத்தைத் தேடிக்கொள்ளும் செயல்.


நியாயமாக பார்த்தால் இவர்களை சுட்டுக்கொல்ல வேண்டும். சிறுவன் என நியாயம் கற்பிக்க கூடாது.


இந்த குரிமினலை காப்பாற்றும் விதமாக சமூகநல ஆவலர்கள் முன்வைக்கும் கூற்றுக்களை ஏற்க முடியாது.


வயல் அறுவடைக்கு ஆள் பிடிக்க நள்ளிரவு ஒரு மணிக்கு, இருக்கைகள் இல்லாத வாகனத்தில் சென்றார்கள் என்ற கதையைச் சிறுபிள்ளை கூட நம்பாது.


வானில் கிடைத்த துருப்பிடித்த வாள் என்றால் அது குற்றத்திற்குப் பயன்படுத்தாதது என்று அர்த்தமல்ல.


வாகனத்தில் இருந்த கயிறு மற்றும் சாணம் ஆகியவை அந்த வாகனம் எதற்காகப் பயன்படுத்தப்பட்டது என்பதற்குச் சாட்சி.


உடற்கூற்றுப் பரிசோதனையில் உயிரிழந்தவர் 'ஐஸ்' மற்றும் ஹெரோயின் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது.


ஒரு 17 வயது "சிறுவன்" போதைப் பொருட்களுக்கு அடிமையாகி, வாள் மற்றும் திருட்டுத் தொழிலில் ஈடுபடுகிறான் என்றால், அங்கே பரிதாபத்திற்கு இடமில்லை. இவ்வாறான சட்டவிரோத செயல்களுக்குக் குடும்பங்களே ஊக்கமளிப்பது சமூகம் எவ்வளவு சீரழிந்து கொண்டிருக்கு என காட்டுகிறது.


மாடு திருடிப் பிடிபட்டால் மிக எளிதாகப் பிணையில் வர முடியும் என்ற சட்ட பலவீனமே, இவர்களைத் துணிச்சலாக இவ்வாறான செயல்களில் ஈடுபட வைக்கிறது. பொலிஸார் தடுத்தபோது நிறுத்தாமல் தப்பியோடியது, லஞ்சம் கொடுத்துக் குற்றத்தை மறைக்க முயன்றது என அனைத்தும் இவர்களின் கிரிமினல் புத்தியையே பறைசாற்றுகின்றன.


பொலிஸார் லஞ்சம் வாங்கியது தவறு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, ஆனால் அதற்காகப் பெரும் குற்றவாளிகளைக் "அப்பாவிகளாக"ச் சித்தரிப்பதை நிறுத்த வேண்டும்.


குடும்பங்களின் ஒரே வாழ்வாதாரமான மாடுகளைத் திருடிச் செல்லும் இவர்களுக்கு மன்னிப்பு என்பதே கிடையாது. அவர்கள் சிந்திய கண்ணீரே இன்று இவர்களுக்குப் வினையாக வந்துள்ளது.


சமூக விரோதிகளுக்கு வயது ஒரு தடையல்ல. குற்றவாளிகளைப் பாதுகாக்கும் போக்கு தொடர்ந்தால், சாதாரண மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். சட்டமும் நீதியும் கிரிமினல்களுக்கு வக்காலத்து வாங்காமல், பாதிக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்க வேண்டும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.