வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்துபாருங்கள்... பணவரவுக்குக் குறைவே இருக்காது!
வெள்ளிக்கிண்ணத்தில் நாணயங்கள் வீட்டில் வைத்திருந்தால், செல்வம் செழிக்கும். வியாபார இடங்களில் வைத்திருந்தால், தொழிலிலுள்ள தடைகள், நஷ்டங்கள் எல்லாம் நீங்கி லாபம் அதிகரிக்கும்.
நம் வீட்டில் எப்போதும் சந்தோஷமும், செல்வ வளமும், சுபிட்சமும் நிறைந் திருக்க வேண்டுமா? எனில், இந்த எளிய மாற்றங்களைச் செய்தாலே போதும். எப்போதும் வீட்டுச் சமையலறையில் சிறு பாத்திரத்தில் கல் உப்பு இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். கல் உப்பு லட்சுமி அம்சம் நிறைந்தது.
வீட்டின் பிரதான வாசலுக்கு நேர் எதிரில் தெரியும் சுவர் பாகங்கள் வெறுமனே உள்ளனவா? அழகிய தெய்வப் படத்தை - உங்கள் இஷ்ட தெய்வத்தின் படத்தை மாட்டிவையுங்கள். அதன் மூலம் எதிர்மறை சக்திகள் வீட்டை அணுகாமல் பார்த்துக்கொள்ளலாம்.
வீட்டு வாசல் பகுதியில் உட்புறச் சுவரில், கிரக லட்சுமி நம் வீட்டுக்குள் வருவது போன்ற படத்தை மாட்டி வைத்துத் தினமும் வணங்கி வழிபடலாம். வாசற் கதவுகள், தாழ்ப்பாள்களை அசைக்கும்போது `க்ரீச்’ என சத்தம் எழுகிறதா? உடனே சரிசெய்து விடுங்கள்.
பழுதான கதவுகள், தாழ்பாள்கள் குடும்ப முன்னேற்றத்தில் பழுது ஏற்படுத்தும் எனும் நம்பிக்கை உண்டு.
தண்ணீர்க் குழாய்களில் நீர் சொட்டுவதைச் சரிசெய்யுங்கள். அதேபோல் தண்ணீரை வீணே விரயமாக்குவதையும் தவிர்த்து விடுங்கள். நீர் விரயமாகும் இடத்தில் லட்சுமி வசிக்கமாட்டாள் என்கின்றன பண்டைய ஞானநூல்கள்.
தூபம், லட்சுமி கடாட்சம். வாரம் ஒருமுறையேனும் வீட்டில் குங்கிலியம் - சாம்பிராணி தூபம் இடுவது சிறப்பு. இதனால் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். மனதில் உள்ள சஞ்சலங்கள் விலகும்.
வீடு லட்சுமிகடாட்சத்துடன் நிறைந் திருக்க லட்சுமி தேவியை வரவேற்கும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். இனிப்பு பொருட்கள் மீது மிகுந்த பிரியத்துடன் வாசம் கொண்டிருப்பவள் லட்சுமி. கல்கண்டு உள்ளிட்ட இனிப்பு பொருள்களில் லட்சுமி கடாட்சம் நிறைந் திருக்கும். பால், தேன், தாமரை, தானியக் கதிர், நாணயங்கள் ஆகிய ஐந்தும் பஞ்ச லட்சுமியின் அடையாளங்களாகும்.
குறிப்பாக வெள்ளிக்கிண்ணத்தில் நாணயங்கள் வீட்டில் வைத்திருந்தால், செல்வம் செழிக்கும். வியாபார இடங்களில் வைத்திருந்தால், தொழிலிலுள்ள தடைகள், நஷ்டங்கள் எல்லாம் நீங்கி லாபம் அதிகரிக்கும். பணப்பெட்டியிலும் அவ்வாறு வைத்திருக்கலாம். வெள்ளி, சுக்ர அம்சம் நிறைந்தது; பொருள் வரவை ஈர்க்கும்.
நல்ல பழுதற்ற வலம்புரிச் சங்கினை பூஜையில் வைக்கலாம். அதேபோல் லட்சுமி கடாட்சம் நிறைந்த வில்வக் கனியை வைத் தும் தினமும் வழிபட்டு வரலாம். இவை வீட்டில் மங்கலத் தன்மையை யும் செல்வச் செழிப்பையும் அதிகப்படுத்தும்.
வில்வமரத்தில் லட்சுமி வசிப்பதால், அதற்கு ‘லட்சுமி வாசம்’ என்றும் ஒரு பெயர் உண்டு. அதாவது சாதக நூல்களில் வில்வம் லட்சுமியின் இருப்பிடமாக கூறப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமைகளில் லட்சுமியை வில்வ இலையால் அர்ச்சிப்பவர்களுக்குச் சகல செல்வங்களும் கிடைக்கும்.
வெள்ளிக்கிழமை மாலையில் தாமரை வடிவிலான லட்சுமி கோலம் போட்டு, அதன் மீது ஐந்துமுக குத்துவிளக்கை ஏற்றி வழிபட்டால், அந்த வீட்டில் லட்சுமி வாசம் செய்வாள். இப்படிச் செய்தால் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பதும் நம்பிக்கை.
வீட்டின் வடக்குப் புறத்தில் குபேர சிலையோ படமோ வைத்து தினமும் மலர்கள் சாற்றி வணங்கலாம். இதனால் கடன் பாதிப்புகள் விலகும்; புதிய கடன்கள் ஏற்படாதபடி பணவரவு உண்டாகும்.
பஞ்சபூத ஆற்றல் கிடைக்க, ஈசான்ய மூலை காலியாக இருக்க வேண்டும் என்பார் கள். அந்த இடத்தில் டேபிள், சேர் அல்லது வேறு பொருள்கள் இருந்தால், அங்கிருந்து அகற்றிவிடலாம். இந்த ஈசான்ய மூலையில் மாலை நேரத்தில் விளக்கேற்றி வைப்பது, மிகவும் நல்லது.
சிலரது வீடுகளில் சந்தன வில்லைகளைப் பயன்படுத்த மாட்டார்கள். அதற்குப் பதிலாகச் சிறு சந்தனக் கட்டைகளைக் கல்லில் தேய்த்துச் சந்தனம் திரட்டுவார்கள். இப்படி, ஏதேனும் ஒரு வடிவில் சந்தனம் இருக்கும் வீட்டில், செல்வத்துக்குக் குறைவே இருக்காது.
உங்கள் வீட்டுப் பீரோவில்... சிவப்பு நிறத் துணியில் கிராம்பு, பச்சைக்கற்பூரம் ஆகியவற்றை முடிச்சாகக் கட்டி வைத்தால், பணம் வீடு தேடி வரும் என்பது நம்பிக்கை.
வீட்டில் தோட்டம், மாடித்தோட்டதில் நீங்கள் வளர்க்கும் செடிகள் வாடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். தினமும் நீர் ஊற்றிப் பராமரியுங்கள். அவை பசுமையாகத் திகழும்போது, வீடும் சுபிட்சமாக இருக்கும்.
வீட்டுச் சுவர் வண்ணங்களிலும் கவனம் செலுத்தலாம். பொதுவாக பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, இளம் சிவப்பு, நீலம் போன்ற வண்ணங்களுடன் திகழ்ந்தால், எதிர்மறை ஆற்றல்கள் விலகி வாழ்க்கைச் செழிப்பாகும்.

.jpeg
)





கருத்துகள் இல்லை