78வது சுதந்திர தினம் – யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறப்பாக அனுஷ்டிப்பு !
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட நிகழ்வு இன்று புதன்கிழமை (04.02.2026) காலை 07.30 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வு அணிவகுப்பு மரியாதையுடன் ஆரம்பமாகி, தேசியக் கொடி ஏற்றல், தேசிய கீதம் இசைத்தல், சர்வ மதத் தலைவர்களின் ஆசியுரை மற்றும் அரசாங்க அதிபர் அவர்களின் உரை ஆகியவற்றுடன் தேசிய உணர்வை வெளிப்படுத்தும் விதத்தில் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.
இதனுடன், யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை, கொக்குவில் இந்துக் கல்லூரி, பரியோவான் கல்லூரி மற்றும் யாழ் இந்து ஆரம்ப பாடசாலை ஆகியவற்றின் பாண்ட் (Band) வாத்தியக் குழுவினரின் அணிவகுப்பு நடைபெற்றது. அதேபோல், வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, யாழ் இந்து மகளிர் கல்லூரி மற்றும் கொக்குவில் இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளின் தேசிய மாணவர் படையணி (Cadet) அணிவகுப்பும், சாரணர் அணிவகுப்பும், அரசாங்க உத்தியோகத்தர்களின் அணிவகுப்பும் நிகழ்விற்கு சிறப்புச் சேர்த்தன.
மேலும், அணிவகுப்பில் பங்கேற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வுடன், மர நடுகை மற்றும் சிரமதான செயற்பாடுகளும் இடம்பெற்று சமூகப் பொறுப்புணர்வை வலியுறுத்தின.
இந்நிகழ்வில் பலாலி பாதுகாப்புப் படைகளின் தலைமையகத்தைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ராசிக் அவர்கள், பொலிஸ் மற்றும் கடற்படை உள்ளிட்ட முப்படைகளின் உயர் அதிகாரிகள், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்ட செயலகப் பதவிநிலை உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.


































.jpeg
)





கருத்துகள் இல்லை