நாம் எங்கே செல்கிறோம்!!

 


சிந்திக்க முடியாத தலைமுறையாக மாற்றப்பட்டுக்கொண்டு இருக்கிறோமா!?


     கிளிநொச்சி கனகாம்பிகைக்குளத்தில் அமைந்துள்ள ‘அன்னை இல்லம்’, 1995 ஒக்ரோபர் 30ம் திகதி இடம்பெற்ற யாழ்ப்பாண இடம்பெயர்வின் பின் உருவாக்கப்பட்ட ஓர் உளவளத்துணை நிலையமாகும். இவ்வில்லம் அமலமரித்தியாகிளால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. 


     இன்று, ‘அன்னை இல்லத்தின்’ 30ம் ஆண்டு நிறைவுநாள். காலச் சூழ்நிலைகளால் உளவளத்துணைப் பணி முல்லைத்தீவு உண்ணாப்புலவில் அமைந்திருக்கும் ‘அமைதித் தென்றல்’ என்ற இடத்திற்கு மாற்றப்பட  ‘அன்னை இல்லம்’ கல்விசார் நடபடிக்கைகளில் கால்பதித்து பயணித்துக் கொண்டிருக்கிறது. 


     அன்னை இல்லத்தின் முன்னோடியாக அருட்தந்தை ச. எட்மன்ட் றெஜினோல், அமதி அவர்கள் விளங்குகிறார். போர்க்காலத்தில் வன்னிப் பிரதேசத்தில் உளவளத் துணையாளர்களை உருவாக்கிய பெருமை அருட்தந்தை ச. எட்மன்ட் றெஜினோல்ட், அமதி, அருட்சகோதரி இ. கிறிஸ்ரபெல், அருட்சகோதரி லூட்ஸ் ஆகியோரைச் சாரும்.


     இவ்வில்லத்தில் 05 குழுக்களாக உளவளத்துணையாளர்கள் பயிற்றப்பட்டு களத்தில் பணியாற்றி இருக்கிறார்கள் — பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். 


     சிறப்பாக, போர்க் காலத்திலும், பெரும் இராணுவ இடப்பெயர்வுகளிலும், சுனாமி பேரனத்த காலத்திலும் என மிகவும் இறுக்கமான காலங்களில் இவர்களின் பணி அளப்பெரியது. 


     இப்பணியாளர்களுடனான ஓர் ஒன்றுகூடலில் பங்கேற்க இன்றைய நாளில் ஒரு வாய்ப்புக் கிடைத்தது. 


     அக்கலந்துரையாடலில் பங்கேற்ற முக்கிய பிரமுகர் ஒருவர் குறிப்பிட்ட விடயம் என் மனத்தை வெகுவாகப் பாதித்தது! 


     “உளச் சிதைவை ஏற்படுத்திச் சிந்திக்க முடியாத தலைமுறையாக மாற்றப்பட்டு இருக்கிறோம்!…” இதற்கு உதாரணமாக போதைப் பாவனையைக் கூறலாம். உளச்சிதைவின் ஒரு விளைவாக தற்கொலையைக் குறிப்பிடலாம். 


     “இதிலிருந்து நாம் மீளவேண்டும் என்றால் உளவளத்துணை மட்டும் போதாது உளவளத்துணையோடு அதற்கு அப்பாலும் நாம் பயணம் செய்யவேண்டிய பெரும் தேவை இருக்கிறது…!” எனவும் குறிப்பிட்டார். 


     ஆழ்ந்து சிந்தித்தபோது இவ் அவதானிப்பின் ஆழம் புரிந்தது!… சிந்திக்க முடியாத தலைமுறையாக மாற்றப்பட்டுக் கொண்டு இருக்கிறோமா!?


செ. அன்புராசா

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.