கிபுல் ஓயா திட்டம் - 'புதிய மொந்தையில் பழைய கள்' ("Old wine in a new bottle" )?


வரலாற்றுப் பாடங்களும்,  சமகால அரசியலில் நம்பிக்கையீனம் VS  நம்பிக்கைளும்!


கிபுல் ஓயா நீர்ப்பாசனத் திட்டம் என்பது வெறும் ஒரு கட்டுமானப் பணி அல்ல; அது வடக்கு-கிழக்கு தமிழ் மக்களின் வரலாற்றுப் பயம் மற்றும் எதிர்கால நம்பிக்கைகளுக்கு இடையிலான ஒரு பரீட்சைக் களம். 


இத்திட்டம் தமிழ் மக்களுக்கான அபிவிருத்தித் திட்டம் என்றும், காணியற்ற தமிழ் மக்களே அங்கு குடியமர்த்தப்படுவார்கள் என்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் வழங்கியுள்ள உறுதிமொழி, ஒரு புதிய அரசியல் அத்தியாயத்திற்கான தொடக்கமாகப் பார்க்கலாமா என்ற ஐயம் தமிழ் மக்களிடம் தொடரகிறது. 


கடந்த கால அரசாங்கங்கள் நீர்ப்பாசனத் திட்டங்களை இனப்பரம்பலை மாற்றியமைக்கும் கருவியாகப் பயன்படுத்திய தவறுகள், தமது ஆட்சியில் ஒருபோதும் நிகழாது என்ற அமைச்சரின் அறிவிப்பு, காயப்பட்ட ஒரு சமூகத்திற்கு உண்மையை வெளிப்படுத்துமா?.


இந்த உறுதிமொழி என்பது ஒரு சாதாரண நிர்வாக வாக்குறுதியாக மட்டும் கடந்து சென்றுவிட முடியாது. 1948-ஆம் ஆண்டுக்குப் பின்னரான இலங்கையின் அரசியல் வரலாறு, அபிவிருத்தி என்ற போர்வையில் தமிழ் மக்களின் தாயக நிலப்பரப்பில் திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலம் நிகழ்த்தப்பட்ட பாரிய இனப்பரம்பல் மாற்றங்களைச் சுமந்து நிற்கிறது. 


வவுனியாவில் தமிழ் மக்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து இத்திட்டத்திற்கு எதிராக முன்னெடுத்த போராட்டங்கள் தற்செயலானவை அல்ல. மாறாக, அவை கடந்த காலங்களில் அனுபவித்த துரோகங்கள் மற்றும் 'அபிவிருத்தி' என்ற பெயரில் பறிபோன நிலங்கள் குறித்த வரலாற்று நினைவுகளின் வெளிப்பாடாகும். எனவே, இத்திட்டத்தை முன்னெடுக்கும்போது அந்த வரலாற்றுப் புண்களை ஆற்ற வேண்டிய பொறுப்புமிக்க கடமை NPP அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்கவிற்கும் உண்டு.


'புதிய மொந்தையில் பழைய கள்' என்ற பழமொழிக்கேற்ப, இத்திட்டமும் பழைய குடியேற்ற அரசியலின் மறுவடிவமாக மாறிவிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் இன்னும் அகலவில்லை. 


இந்த நம்பிக்கையீனத்தைப் போக்க வெறும் வாய்மொழி உத்தரவாதங்கள் மட்டும் போதுமானவை அல்ல. கிபுல் ஓயா திட்டம் உண்மையான மக்கள் நலத் திட்டமாக அமைய வேண்டுமாயின், அதில் வெளிப்படையான நிர்வாக நடைமுறைகளும், தெளிவான சட்டச் சட்டகங்களும் உருவாக்கப்பட வேண்டும். குறிப்பாக, குடியேற்ற நடவடிக்கைகளில் இன நீதியும், சமூக சமத்துவமும் பேணப்படுவதை உறுதி செய்யும் பொறிமுறைகள் அவசியம்.


ஆளும் தரப்பு தனது இந்த உத்தரவாதங்களைச் சொல்லளவில் மட்டுமன்றி, நடைமுறையில் செயல்படுத்திக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இது ஒரு நீர்ப்பாசனத் திட்டத்தின் வெற்றி-தோல்வி குறித்த விவகாரம் மட்டுமல்ல; மாறாக, தங்களை நம்பி வாக்களித்த மக்களின் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கான ஒரு அரசியல் பரிகாரமுமாகும். 


வரலாற்றின் பாரம் கனத்த இந்த மண்ணில், அபிவிருத்தி என்ற பெயரில் மீண்டும் ஒரு அநீதியை விதைக்காமல், சமகால அரசியல் முதிர்ச்சியுடன் நியாயத்தை நிலைநாட்டுவதில்தான் கிபுல் ஓயா திட்டத்தின் உண்மையான அர்த்தம் பொதிந்துள்ளது.


#ஞாபகங்கள் #nadarajarah_kuruparan #journalist #tamilpolitics #நடராஜா_குருபரன்  #AKD #ANURAKUMARADISSANAYAKE #HariniAmarasuriya #TilvinSilva #LalKantha #VijithaHerath #WasanthaSamarasinghe #NPP #NPPGovernment  #LalKantha


இந்தப்பதிவு எனது தனிப்பட்ட பதிவு. அதற்கு முழுமையாக நானே பொறுப்பு. ஆரோக்கியமான விவாதங்கள், கருத்தியல் ரீதியான விமர்சனங்கள் மகிழ்வுக்க உரியதாக இருக்கும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.