வாயால் மட்டும் கூறினால் போதாது வடக்கு ஆளுநரே!!
வாயால் மட்டும் கூறினால் போதாது வடக்கு ஆளுநரே... இடையிடையேயாவது செயலிலும் செய்யுங்கள்!
"எந்தவொரு பின்தங்கிய கிராமமாக இருந்தாலும், அங்குள்ள மக்களுக்குக் கல்வியும் மருத்துவ சேவைகளும் எவ்விதத் தடங்கலுமின்றிச் சென்றடைவதில் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் அதீத அக்கறை காட்டி வருகின்றது. அந்த வகையில், இரணை இலுப்பைக்குளம் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையமும் எதிர்வரும் காலங்களில் மேம்பட்ட வசதிகளுடன் தரமுயர்த்தப்படுவதை பரிசீலிக்க முடியும்" என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.
மன்னாரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் வடக்கு மாகாண ஆளுநர் ஆற்றிய உரை இது.
ஆனால் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் நிலை ஆளுநருக்கு தெரியாதா? அல்லது வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலை அமைந்துள்ள அதே பகுதியில் நிரந்தரமாக வசிக்கும் ஆளுநரின் செயலாளர் சத்தியசீலன் அவர்களுக்கு தெரியாதா?
வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் மிகவும் பிரமாண்டமான கட்டடங்கள் இருந்தாலும் மருத்துவ சேவைகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது. இந்த இலட்சணத்தில் மன்னார் வைத்தியசாலைக்கு சென்று வாய்க்கு உவப்பான உரை ஒன்று.
வட்டுக்கோட்டை பகுதி மக்களும் வரி செலுத்துகின்றார்கள், அரசாங்கத்துக்கு சேரவேண்டிய அனைத்து கொடுப்பனவுகளையும் செலுத்துகின்றார்கள். ஆனால் அந்த வைத்தியசாலையின் சேவைகளை மட்டும் உங்களால் ஏன் விரிவுபடுத்த முடியவில்லை?
குறித்த வைத்தியசாலையை நீங்கள் புறந்தள்ளி விட்டீர்களா? அல்லது அப்படி ஒரு வைத்தியசாலை இருக்கின்றது என்று உங்களுக்கு தெரியாதா? உங்களுக்கு தெரியாவிட்டால் உங்களது செயலாளரை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள், அவரும் அதே ஊர் என்பதால் அவருக்கு தெரியும். அவருக்கும் ஊரில் உள்ள வைத்தியசாலையின் நிலை தெரியாவிட்டால் எங்களை கேளுங்கள் நாங்கள் சொல்கிறோம்.
இளவாலை வைத்தியசாலையும் இதே நிலையில் இருப்பது, நேற்றையதினம் வெளியாகிய ஒரு செய்தி மூலம் தெரியவருகிறது. அதாவது மயக்கமுற்ற பாடசாலை மாணவன் ஒருவனை இளவாலை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை வைத்தியர்கள் இல்லை என்று கூறி அவனுக்கு சிகிச்சை அளிக்கவில்லை.
வேறு வைத்தியசாலைகளில் அளவுக்கு அதிகமாக நியமனங்களை செய்ததால் காலுக்கு மேல் கால் போட்டு போன்களை பார்த்து அரட்டை அடித்துக்கொண்டு இருக்கின்ற வைத்தியர்கள், தாதியர்கள், சுகாதார பணியாளர்களை இப்படியான வைத்தியசாலைக்கு மாற்றுங்கள்.
பல எலி சேர்ந்தால் புற்றுறாது என்று முன்னோர்கள் சொல்லியுள்ளார்கள். அதேபோலதான் தேவைக்கு அதிகமாக ஒரு வைத்தியசாலைக்கு நியமனங்கள் வழங்கினால் அந்த வைத்தியசாலை உருப்படாது. அந்த பணியாளர்களை தேவையுள்ள வைத்தியசாலைக்கு மாற்றினால் அந்த பகுதி மக்கள் எவ்வளவோ பயனடைவார்கள்.
மேலும், ஆரம்ப, கிராமிய, பிரதேச வைத்தியசாலைகளின் மருத்துவ சேவைகளை விரிவுபடுத்தவதன் மூலம் ஆதார வைத்தியசாலைகள், மாவட்ட வைத்தியசாலைகள், போதனா வைத்தியசாலைகள் போன்றவற்றில் ஏற்படும் நெருக்கடிகளை தவிர்க்க முடியும். இந்த விடயங்கள் நிர்வாகப் பிரிவுக்குள் இருந்த நாங்கள் சொல்லித்தான் தெரியவேண்டும் என்ற நிலை வந்துள்ளமை மனவருத்தத்தையும், தங்களது நிர்வாகத் திறன் மீது கேள்வியையும் ஏற்படுத்துகிறது.
எனவே இனிமேல் வாய்க்கு உவப்பான உரையை விட்டுவிட்டு செயலில் செய்து காட்டுங்கள். அதற்கு பின்னர் நீங்கள் செயல்வடிவான ஆளுநர் என்பதை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.
அருச்சுனா எம்.பி எப்படி எம்.பி ஆகினார் என்று இதுவரை உங்களுக்கும், உங்கள் அரச நிர்வாக பிரிவினருக்கும் விளக்கமில்லை என்பது நன்றாகவே தெரிகிறது.

.jpeg
)





கருத்துகள் இல்லை