ஈரானின் பாதுகாப்பு அரணில் விரிசலும், தலைமை துண்டிப்பும், முள்ளிவாய்க்கால் யுத்தத்தினுடான, அரசியல் வாசிப்பும்!


ஈரானுக்கு எதிராக அமெரிக்கா–இஸ்ரேல் முன்னெடுத்து வருகின்றதாகக் கூறப்படும் தாக்குதல்களில், அந்நாட்டின் உயர் தலைவர், பாதுகாப்பு அமைச்சர், புரட்சிகர காவற்படையின் தளபதி உள்ளிட்ட உயர்மட்டத் தலைவர்கள் பலியாகியுள்ளனர் என்ற தகவல்கள் வெளிவந்துள்ளன. இது வெறும் ராணுவச் சம்பவமாக மட்டும் பார்க்க முடியாத, ஆழமான அரசியல் அதிர்வுகளை உருவாக்கக்கூடிய ஒரு நிகழ்வாகத் தோன்றுகிறது.


ஈரானுக்கு இன்று ஏற்பட்டிருக்கும் இந்த நிலை, 2008–2009 காலப்பகுதியில் முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தை நினைவூட்டுகிறது. 


அந்நேரத்தில் நான் இலங்கையை விட்டு வெளியேறி பிரித்தானியாவில் தஞ்சமடைந்திருந்த சில மாதங்கள். இருந்தாலும், சமாதானப் பேச்சுவார்த்தைக் காலங்களில் உருவான இந்திய, ஐரோப்பிய, அமெரிக்க ராஜதந்திரிகளுடனான உறவுகள் தொடர்ந்துகொண்டே இருந்தன. 


உள்நாட்டு யுத்தம் குறித்து ஒருநாள் தொலைபேசியில் உரையாடிய ஒரு வெளிநாட்டு ராஜதந்திரி, “உங்கள் ஆட்கள் பலமாக இருக்கிறார்களா?” என்று கேட்டார். நிலைமை எனக்குத் தெரிந்திருந்தாலும், நான் விட்டுக்கொடுக்காமல் “ஆம்” என்றேன். அவர் சிரித்தபடி, “உண்மையாகவா?” என்று மீண்டும் கேட்டார். 


பின்னர் அவர் உண்மையகை் கூறினார், இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணி புதுக்குடியிருப்பில் நிற்கிறது; யுத்தம் நடைபெறும் பகுதிகளில் புலிகளோடு புலிகளாக கலந்து நிற்கிறார்கள்; வவுனியாவிலிருந்து காடுகள் ஊடாக நடையாக யாழ்ப்பாணம் செல்கிறார்கள்; மேலும் “உங்கள் ஆட்களில்” பலர் விலைபோய்விட்டார்கள் – எனவே இந்த யுத்தத்தில் பு*லிகள் வெற்றிபெறுவது கடினம் என்று உறுதியாகச் சொன்னார். அந்த உரையாடல், வெளிப்படையாகத் தெரியாத உள்ளக முரணும், மக்களுடனான விரிசல்களும் எவ்வாறு ஒரு இயக்கத்தின் முடிவை விரைவுபடுத்ததின என்பதை உணர்த்தியது.


இலங்கையின் அந்த இறுதி யுத்த அனுபவங்களின் நினைவோடு தான் இக்கட்டுரை ஈரானின் தற்போதைய சூழ்நிலையை அணுகுகிறது. 


1979 ஆம் ஆண்டு Ruhollah Khomeini நிறுவிய விலாயத்-எ-பகீஹ் (Velayat-e Faqih) கோட்பாட்டின் அடிப்படையில் உருவான ஈரானிய அரசியல் அமைப்பில், தற்போதைய உயர் தலைவர் Ali Khamenei வெறும் அரசியல் முகமல்லர்; அவர் கருத்தியல் மையமும் இறுதி அதிகாரத்தின் வடிவும் ஆவார். நீதித்துறை, பாதுகாப்பு, ஆயுதப்படை, வெளிநாட்டு கொள்கை என அனைத்து முக்கியத் தீர்மானங்களும் இந்தப் பதவியின் கீழ் ஒருங்கிணைகின்றன. இப்படியான கட்டமைப்பில், உயர் தலைவர் உட்பட பல மடங்கு உயர்மட்டத் தலைவர்கள் ஒரே நாளில் உயிரிழந்ததாகக் கருதப்படும் சூழல் உருவானால், அது சாதாரண ராணுவத் தாக்குதல் அல்ல; அது “Regime Decapitation Strategy” எனப்படும் “தலைமை துண்டிப்பு” எனும் யுத்த தந்திரத்தின் உச்ச வெளிப்பாடாகவே பார்க்கப்படும்.


இத்தகைய தாக்குதல் சாத்தியமாக வேண்டுமெனில், எதிரி நாட்டின் கட்டளை–கட்டுப்பாட்டு அமைப்பின் முழு வரைபடமும் எதிர் தரப்பின் கைகளில் இருக்க வேண்டும். CIA (Central Intelligence Agency) FBI, மற்றும் மொசாட் (Mossad) போன்ற அமைப்புகள் நீண்டகால மனித உளவு (HUMINT), சமிக்ஞை உளவு (SIGINT), சைபர் ஊடுருவல் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பின் மூலம் மட்டுமே இத்தகைய துல்லியத்தைக் காண முடியும். ஒரே நாளில் பல தலைவர்களின் இருப்பிடங்களை உறுதிப்படுத்தி தாக்குவது தந்திரோபாய உளவிச் செயற்பாடு (tactical intelligence) அல்ல; அது அமைப்பு ரீதியான ஆழ ஊடுருவல் ( structural penetration) செயற்பாடாக அமைய வேண்டும்.


ஆனால் இதனை முழுமையாக வெளிநாட்டு தொழில்நுட்ப ஆதிக்கமாக மட்டும் விளக்குவது எளிமைப்படுத்தலாகும். ஈரானின் புலனாய்வு அமைச்சு (Ministry of Intelligence - MOIS) மற்றும் IRGC உளவுப் பிரிவு போன்ற அமைப்புகள் பல அடுக்குகளைக் கொண்ட பாதுகாப்பு வலையமைப்பை உருவாக்கியுள்ளன. அந்த வலையமைப்பில் விரிசல் ஏற்பட்டிருந்தால், அது வெறும் தொழில்நுட்பத் தோல்வி அல்ல; உள்வீட்டுத் துரோகம், தகவல் கசிவு அல்லது கருத்தியல் சிதைவு காரணமாகவும் இருக்கலாம்.


 மிக இரகசியமான சந்திப்புகள், தலைமை இயக்கத் திட்டங்கள் போன்றவை வெளியில் கசியக்கூடிய சூழல் உருவானால், பாதுகாப்புத் துறையின் உச்ச மட்டங்களிலேயே தளர்ச்சி இருந்திருக்கலாம். அதிகாரிகள் விலைபோயிருக்கலாம்; அல்லது அரசின் சித்தாந்த அடிப்படையிலிருந்து விலகியிருக்கலாம். 


கடந்தகாலத்தில் அணுசக்தி விஞ்ஞானிகள் இலக்காகக் கொள்ளப்பட்ட சம்பவங்கள், அந்நாட்டின் பாதுகாப்பு வளையத்துக்குள் அந்நிய கைகள் புகுந்திருக்கும் சாத்தியத்தை முன்வைத்துள்ளன.

இங்கே “ஐந்தாம் தூண்” (Fifth Column) கோட்பாடு முக்கியத்துவம் பெறுகிறது. நீண்டகால பொருளாதாரத் தடைகள், பணவீக்கம், அரசியல் கட்டுப்பாடு ஆகியவை உள்நாட்டு அதிருப்தியை உருவாக்கும். அந்த அதிருப்தி வெளிநாட்டு உளவு அமைப்புகளுக்கு வாய்ப்பாக மாறும். 


அரசியல் மற்றும் கருத்தியல் விரிசல்கள் ஆட்சிக் கட்டமைப்பின் உள்ளேயே உருவானால், தகவல் கசிவுகள் அதிகரிக்கும் அபாயம் உண்டு. சில அதிருப்தி குழுக்கள், அரசாங்கத்தை பலவீனப்படுத்துவதற்காக வெளிநாட்டு உளவு அமைப்புகளுடன் தரைமட்டத் தகவல்களைப் பகிர்ந்திருக்கலாம் என்ற ஊகமும் எழலாம். எனினும், உறுதியான ஆதாரமின்றி இத்தகைய முடிவுகள் அரசியல் ஊகமாகவே இருக்கும்.


சைபர் யுத்தம் இங்கு மறக்க முடியாத பரிமாணமாகிறது. வான் பாதுகாப்பு அமைப்புகளை தற்காலிகமாக செயலிழக்கச் செய்தல், தொடர்பாடல் வலையமைப்புகளை குழப்புதல், GPS அல்லது ட்ரோன் வழிநடத்தலைத் திசைதிருப்புதல் போன்றவை நவீன யுத்தத்தின் அங்கங்களாகிவிட்டன. இவை அனைத்தும் ஒருங்கிணைந்தபோதுதான் இத்தகைய துல்லியத் தாக்குதல் சாத்தியமாகும்.


அப்படியானால், இதன் விளைவு உடனடி ஆட்சிவீழ்ச்சியா? வரலாறு அதனை உறுதி செய்யவில்லை. Iraq (2003) மற்றும் Libya (2011) ஆகிய நாடுகளில் தலைமை அகற்றப்பட்ட பின் அதிகார வெற்றிடம் உருவானது. ஆனால் சில நேரங்களில் அத்தகைய வெளிநாட்டு தலையீடுகள் கடுமையான தேசியவாத எழுச்சிக்கும் வழிவகுத்துள்ளன. 


ஈரானின் அரசியல் கலாச்சாரம் கருத்தியல் ஒற்றுமையை மையமாகக் கொண்டதால், வெளிநாட்டு தாக்குதல் தேசிய ஒற்றுமையைத் தூண்டும் வாய்ப்பும் நிராகரிக்க முடியாது. தலைமை தளர்ச்சி இராட்சியத்தின் சரிவாக (regime collapse) ஆக மாறாமல், இராட்சியத்தின் மீழுருவாக்கம் (regime consolidation) ஆக மாறும் சாத்தியமும் இருக்கிறது.


புவிசார் அரசியல் கோணத்தில், ஈரானின் தலைமைத்துவத்தை ஒரே அடியில் சிதைக்க முயல்வது, மத்திய கிழக்கில் அதன் ஆதிக்க வலையமைப்பை பலவீனப்படுத்தும் முயற்சியாகக் கருதப்படும். 


ஹிஸ்புல்லா, ஹூதி, ஹமாஸ் போன்ற இயக்கங்களுக்கு வழங்கப்படும் ஆதரவு பாதிக்கப்படலாம். அதேவேளை, இது முழுமையான பிராந்தியப் போருக்கோ அல்லது எதிர்பாராத கடுமையான பதிலடிக்கோ வழிவகுக்கும் அபாயத்தையும் உள்ளடக்குகிறது.


இறுதியாக, எந்த நாட்டின் பாதுகாப்பும் அதன் ஆயுதங்களிலும் தொழில்நுட்பத்திலும் மட்டும் அமையாது; அதன் உள்நாட்டு ஒற்றுமை, தகவல் ஒழுங்கு, கசிவற்ற உளவுத்துறை அமைப்பு ஆகியவற்றில்தான் அதன் நீடித்த பாதுகாப்பு உறுதியாகிறது.


 பல மடங்கு உயர்மட்டத் தலைவர்கள் ஒரே தாக்குதலில் உயிரிழந்ததாகக் கருதப்படும் இச்சூழல் உண்மையாக இருந்தால்கூட, அது வெறும் ராணுவச் சம்பவம் அல்ல; ஒரு அரசியல் அமைப்பின் உள்ளார்ந்த பலவீனங்களையும் பலங்களையும் வெளிச்சமிட்டுக் காட்டும் கண்ணாடியாக அமையும். 


ஈரானின் உயர்மட்டப் பாதுகாப்பு வளையத்திற்குள் ஏற்பட்டிருக்கக்கூடிய இவ்விரிசல்கள், அந்த நாடு தனது பாதுகாப்பு நடைமுறைகளை முழுமையாக மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயத்தை உணர்த்துகின்றன.


ஆதாரப்பூர்வமான உறுதிப்படுத்தலின்றி எந்த முடிவும் இறுதியல்ல. இருப்பினும், இத்தகைய விவாதங்கள் நவீன யுத்தத்தின் மறைமுக அரசியலைப் புரிந்துகொள்ள அத்தியாவசியமானவையாகின்றன.


#Iran #IranPolitics #MiddleEast #Geopolitics #RegimeDecapitation

#SecurityBreach #IntelligenceWar #CovertOperations #CyberWarfare #StrategicAnalysis #PoliticalRisk #NationalSecurity

#PowerStruggle #RegionalStability #GlobalAffairs 

#HistoryInTheMaking #TamilPoliticalWriting #ஞாபகங்கள் #nadarajarah_kuruparan #journalist #tamilpolitics #நடராஜா_குருபரன் 


இந்தப்பதிவு எனது தனிப்பட்ட பதிவு. அதற்கு முழுமையாக நானே பொறுப்பு. ஆரோக்கியமான விவாதங்கள், கருத்தியல் ரீதியான விமர்சனங்கள் மகிழ்வுக்க உரியதாக இருக்கும்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.