கந்தபுரம் கரும்புத்தோட்டப்பகுதி!!
வாய்க்கால் கரையோரத்தின் பச்சையாய் மண்டிய பற்றைக்கருகில் -ஒரு குடும்பம் வாழ்தல் சாத்தியமா என்ற பரிதாபக் கேள்வி எழுப்பும் ஒரு அகதிக்குடிசை. அதைக் குடிசை என்பதே அதிகம். உண்மையில், நாங்கள் சின்னஞ்சிறு வயதில் அம்மா - அப்பா விளையாடுவதற்கு கட்டுகின்ற கொட்டிலைப்போல அது மோசமாக இருக்கிறது. ஆனால், அதற்குள்ளும் ஒரு வாழ்வு நடக்கிறது..
ஒவ்வொருநாளும் அந்தக் கொட்டிலில் உலை கொதிப்பதில்லை தான் , ஆனால் தவறாமல் அங்கு வாழும் ஐந்து சீவன்களின் வயிறுகளும் கொதிக்கும். பகலெல்லாம் கபகபவென்று குடலைப் பற்றியெரியும் பசித்தீயை, இரவு காச்சுகின்ற கஞ்சியும் -நித்திரையும் தணித்துவிடும் பகலெல்லாம் பற்றியெரியும் கனவுகளோடு பசித்தீக்கங்குகள் நீறுபூக்கும்.
..
விடியாமலே இருந்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும் " அந்தக் குடும்பம் நினைத்துக்கொள்ளும். ஆனால் பகல், இரவையும் இரவு, பகலையும் தின்னுவதை நிறுத்துவதில்லையே!
இலட்சுமி அம்மா ஒரு தொய்வுநோயாளி. தொய்வு கண்டு விட்டால் அம்மாவிற்கு மரண அவஸ்தைதான். கண்முழி பிதுங்கி, தொண்டை நரம்புகள் புடைத்து. வயிறு முதுகோடு ஒட்டுமளவிற்கு, இழுப்பு அம்மாவைப் பாடாய்ப்படுத்தும். நாளாந்த நிகழ்வானாலும் பிள்ளைகள் பரிதவித்துப் போவார்கள். அவர்களால் என்னதான் செய்யமுடியும்? அத்தனையும் பிஞ்சுகள்!
இலட்சுமி அம்மாவிற்கு கரும்புத்தோட்டத்தில் கூலி வேலை. தினக்கூலி அறுபது ரூபா. எல்லா நாட்களிலும் வேலை இருப்பதில்லை: வேலையுள்ள நாட்களில் கஞ்சியும், வேலையில்லாத நாட்களில் வெறும் வயிறுமாய், அம்மாவின் உழைப்பை மட்டுமே நம்பிய பட்டினிச்சீவியம் அவர்களுடையது.
இலட்சுமி அம்மாவின் குடும்பம் வறுமைக்கு உதாரணமாய் வாழ்ந்ததல்ல. ஜெகநாதன் இலட்சுமியைக் கைபிடித்த மறுவருடத்தில் அவர்களின் முதல் இடப்பெயர்வு நிகழ்ந்தது, அது 1973ஆம் வருடம், கண்டியிலிருந்து வன்னிக்கு. இங்கு வந்து குழந்தை குட்டிகள் என்று குடும்பம் பெருகி, கூலித்தொழில் பார்த்து அவர்கள் நன்றாகத்தான் வாழ்ந்தார்கன்.
அந்தக் குடும்பத்தின்
ஆர்ப்பாட்டமற்ற அமைதியான வாழ்வை நிலைகுலைத்துச் சரித்தது ஒரு இடப்பெயர்வு, சத்ஜய இடப்பெயர்வும் அதனைத் தொடர்ந்த குடும்பத்தின் மூத்தஉயிர்களின் இழப்புகளுமே இலட்சுமி அம்மாவையும் சின்னஞ்சிறுசுகளான நான்கு பிள்ளைகளையும் யாருமேயற்ற நிர்க்கதி நிலைக்குத் தள்ளின.
ஜெகநாதன் - இலட்சுமி தம்பதியினருக்கு ஒன்பது பிள்ளைகள், இலட்சுமி அம்மாவின் இரண்டு பெண்களும் ஒரு மகனும் திருமணம் முடித்து விட்டிருந்தார்கள். அம்மாவின் தாய்மைப் பாத்திரத்தில் இரண்டுவகை.
ஒன்று பிள்ளைகனின் தாய், இன்னொன்று, போராளியின் தாய்.
அம்மாவிற்கு போராளித்தாய் என பெருமையைக் கொடுத்தவன் மகேந்திரன் - கடற்புலி சிறையஞ்சன். யாழ்பாணத்தில் சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை நடந்து கொண்டிருந்தபோது (1995) மகேந்திரன் இயக்கத்திற்கு நடந்தான்.
ஆனையிறவு படைத்தளத்திலிருந்து கிளிநொச்சி நோக்கிப் பரவிய சிங்கள இராணுவ இயந்திரத்தின் சத்ஜய படைச்சக்தி வன்னிப்பெருநிலத்தின் ஒரு பெருநகரையும் நகர் சார்ந்த கிராமங்களையும் விழுங்கியது.
பாரதிபுரத்திலிருந்து - அவர்கள் வாழ்ந்த, அவர்களோடு வாழ்ந்த எல்லாவற்றையும் இழந்து -இலட்சுமி அம்மாவின் குடும்பம் பொன்னகருக்கு இடம்பெயர்ந்தது.
சத்ஜய படைச்சக்தியின் திரண்ட மையமாகிய கிளிநொச்சிப் படைத்தளம், தன்னைச் சுற்றிலும் தூரத்தே ஒடுங்கியிருந்த குடியிருப்புகளை எல்லாம் அச்சுறுத்தியபடி திமிர் பூத்துக்கிடந்தது
படைத்தளத்திற்கும் படைத்தளத்தைக் கண்காணிக்கும் விடுதலைப்புலிகளின் காவலரண் வரிசைக்கும் இடைப்பட்ட மனித சூனியப் பிரதேசத்திற்குள் இருக்கும் கிராமங்களைச் சேர்த்த இடம்பெயர்ந்த மக்கள், தங்கள் வீடுகளுக்குச் சென்று பொருட்கள் எடுத்துவருவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்கள். கிளிநொச்சிப் பகுதியில் வீடு பார்க்கச் சென்றவர்கள். வெட்டுண்ட பிணங்களாக . கண்டெடுக்கப்படும் நிகழ்வுகள் மலிந்திருந்தபோதும், தங்கள் வயிற்றுத் தேவைகளின் போதாமையைச் சமாளிக்க அவர்களுக்கு அதைத்தவிர வேறுவழி இருக்கவில்லை.
செத்துப்போகும் கணம்வரைக்கும் நான் சாகமாட்டேன் என்று நினைத்திருப்பதுதானே மனித இயல்பு. தங்களுக்கு எதுவும் நடக்காது. இராணுவத்தின் கொலைக்கரங்களில் சிக்காமல் நாங்கள் தப்பிண்டுவோம். என்ற நம்பிக்கையோடு எல்லோருமே வீடு பார்க்கச் சென்று வந்தார்கள். நம்பிக்கைதானே வாழ்க்கை. அதை அவர்கள் கடைப்பிடித்தார்கள். ஆனால், இந்த விடயத்தில், சில நம்பிக்கைகள் வீண்போகவில்லையாயினும் பல நம்பிக்கைகள் பிணமாய்த்தான் போயின.
வீடு பார்க்கச் சென்றுவரும் இந்த வழக்கமான நிகழ்வொன்றின் போதுதான். தனக்கு மூன்று பேரப் பிள்ளைகளைத் தந்த தனது மூத்த மகன் இராஜேந்திரனை இலட்சுமி அம்மா இழந்தான்.
சம்பவ தினம் இராஜேந்திரனும் இலட்சுமி அம்மாவின் இளையமகன் சசிக்குமாரும் வீட்டுக்குச் சென்றிருந்தார்கள். காடுமண்டி மயான வெறுமைசூழ அநாதையாய் நின்றிருந்த தங்கள் வீட்டில், இருவரும் காரியங்களில் ஆழ்ந்திருந்தார்கள்.
பற்றைகளுக்குள்ளிருந்து சந்தடியற்று வெளியேறிய சிங்களப்படையாட்கள் சகோதரர்கள் இருவரையும் சூழ்ந்தனர். திகைத்து, நாக்கு மேலண்ணத்தில் ஓட்டி ஒரு பேச்சும் வராது சகோதரர்கள் இருவரும் கையெடுத்துக் கும்பிட்டார்கள். சிங்களப்படைக்கு தமிழர்கள் எல்லோருமே புலிகள்தானே ! புலி புலியென்று கத்தியபடி காடைக்கும்பல் இருவரையும் நையப்புடைத்தது.
சசிக்குமாரை ஒரு மரத்தோடு சேர்த்துக் கட்டிவிட்டு இராஜேந்திரனைக் கதறக் கதறக் கொண்டு போனார்கள். உச்சஸ்தாயியில் உருவெடுத்த அவனது அவலக்குரல். "தேய்ந்து, தேய்ந்து சற்றைக்கெல்லாம்
அடங்கிப்போனது. கட்டோடு போராடி - தன்னை விடுவித்துக் கொண்டு இரத்தமும் கண்ணீருமாய் அம்மாவிடம் வந்துசேர்ந்தான் சசிக்குமார்.கயிறு சிராய்த்து, மரம் சிராய்த்து. இராணுவச் சப்பாத்து மிதித்து, இரத்த விளாறாகி வந்து நின்ற பிள்ளையைப் பார்த்து விக்கித்து நின்றாள் அம்மா. என்னய்யா கோலமிது !. என்ர குஞ்ச ஆரய்யா இந்தப் பாடுபடுத்தினது" பிள்ளையின் கண்டல் காயங்களையும் சிராய்ப்புக் காயங்களையும் தடவியவாறு அம்மா பதறினாள்.
இதற்குப் பதில் .. சொல்விவிடலாம். ஆனால் அண்ணா எங்கையப்பு என்று அம்மா கேட்கப்போகும் அடுத்த கேள்விக்கு என்ன பதிலைச் சொல்வது?
சசி திணறிக் கொண்டிருந்தபோது அம்மா அதைக் கேட்டாள் " அண்ணா எங்கையப்பு." சசி மௌனமாய் அழுதான். அம்மாவிற்கு அபத்தமாய் சந்தேகம் பொறிதட்டியது முகத்தில் கலவரம் படர. பதிலொன்றும் கூறாமல் கண்ணீர் வழிய வழிய பேயறைந்தவன் போல் நின்ற பிள்ளையின் தோள்களைப் பற்றி உலுக்கி அம்மா கத்தினாள் அண்ணா எங்கையடா ?.....
அதற்கு மேலும் தாயின் தவித்த நிலையைத் தாங்க முடியாமல் " அண்ணனைக் கொண்டு போயிற்றாங்கள் அம்மா " என்றபடி தாயின் மடியைக் கட்டிக்கொண்டு கதறினான் சசி. அம்மா
இடிவிழுந்தவள் போலானாள்......
இராஜேந்திரனைக் கட்டியவள் மனஞ்சுருண்டு நொருங்கிப் போனாள். பொட்டழியும் வயதா அவளுக்கு! பட்டப்பகலிலும் காலம் இருண்டதாய் உணர்ந்தாள். செத்துப் போவதை சுவாமியிடம் போய்விட்டதாகச் சொன்னால் நம்புகின்ற வயதுப் பிள்ளைகள், அப்பா சுவாமியிடம் போய்விட்டதாக நம்பினார்கள்.............
புறப்படும் போது ஒரு ஆதியந்த
உறவைப் பார்க்கப்போகும் ஆவலும் சுறுசுறுப்பும் அவர்களைத் தொற்றிக்கொள்கிறது. ஒரு குடும்பத்தின் இன்பம் - துன்பம் என்ற இரண்டு முதன்மை உணர்வுகளிலும் முதலில் பங்கெடுத்துக் கொள்வது வீடுதானே! அதுதானே அவர்களின் முதல் உறவு.அந்த உறவு. அவர்களுக்கு எல்லாமுமாக இருக்கிறது.
வீட்டுக்குச் சென்று முற்றத்தில் நடந்து. திண்ணையில் சரிந்து, கிணற்றில் குளித்து. இடம் பெயர்ந்த வாழ்வின் அவலச் சுமைகளை இறக்கி வைத்துவிட்டு- அந்த உறவோடு வாழ்ந்த இன்பமான பொழுதுகளை நெஞ்சில் கிளர்த்தி மனதை இலேசாக்கி மீள்கிறார்கள்.
இங்கே, உயிரை விடவும் அந்த உறவு தரும் ஆறுதல் பெரிதாய் இருப்பது ஆச்சரியமல்ல.
உயிரையும் பொருட்படுத்தாது ஆறுதலைப் தேடுமளவிற்கு மனங்களைச் சிதைக்கும் இடப்பெயர்வு
வாழ்வின் அவலங்கள் தான். ஆச்சரியமானவை.
அன்றும் (03.05.1996) அப்படித்தான்; அப்பாவுடன் சசிக்குமாரும் புவனேஸ்வரியும் பாரதிபுரத்திற்குச் சென்றார்கள். வீட்டு வளவிற்குள் அவர்கள் நுழைந்தவுடன் எங்கிருந்து முளைத்தார்களோ தெரியாது- முப்பதுக்கு மேற்பட்ட சிங்களப் படையாட்கள் அவர்களை மொய்த்துக் கொண்டார்கள்.
பத்து வயதுச் சிறுமியான புவனேஸ்வரியையும், அவளை விட நான்கு வயதுகள் அதிகமான சசிக்குமாரையும். அவர்களின் முதிய தந்தையையும் இராணுவத்தினர் புலியென்று சொல்லி வதைத்தார்கள். கைகளை முதுகுப் புறமாகச் சேர்த்துக்கட்டி ஒரு பற்றை மண்டிய பகுதிக்கு அழைத்துப்போனார்கள். அங்கே, பாரதிபுரத்தில் புவனேஸ்வரியின் வீட்டிற்கருகில் வசித்தவரான கணேஸ் என்பவரை (மூன்று பிள்ளைகளின் தந்தை ) குரூர மனப் பட்டாளம் அடித்து நெருக்கிப் போட்டிருந்தது. எல்லோரையும் ஒன்றாக இருத்திவிட்டு இராணுவக் கும்பல் தனது வழமையான வெறியாட்டத்திற்குத் தயாரானது.
இனவெறியேறிய முகங்கள் விளங்காத பாசையின் இடையிடையே விளங்கும் கொச்சைத்தமிழ் -முரட்டுக்கத்திகள் - இவையெல்லாம் பருந்தில் கூர்நக விரல்களில் சிக்கியிருக்கும் கோழிக் குஞ்சுகளாய் வதங்கியிருந்த நான்கு கையறுநிலை உயிர்களுக்கும் அவர்களின் அவலமுடிவைத் தெரிவித்துவிட்டன. உடல் கசிந்த குருதியுலர்ந்து விகாரமாய்த் தெரிந்த முகங்களை ஒருவரையொருவர் பாவமாய்ப் பார்த்தார்கள்
இராணுவச்சப்பாத்துக்கள் S
ஒரு இராணுவத்தினன் அப்பாவின் கைக்கட்டவிழ்த்து. பற்றை மறைவுக்கு கூட்டிப்போனான். புவனேஸ்வரியின் மிரண்ட விழிகள் அப்பா சென்று மறைந்த பற்றையை ஏக்கமும் அச்சமுமாய் துளாவின. இராணுவச் சப்பாத்துக்கள்
தெரிந்தன. தோளில் இருந்த துவாய்த்துண்டை விரித்து அப்பா படுப்பதும் தெரிந்தது. அப்பாவின் முகத்தில் அசாதாரண அமைதி. அப்பாவின் ஏக்கவிழிகள் பிள்ளைகள் இருந்த திசையை ஒருதடவை பார்த்தன. அதன்பிறகு அப்பாவின் தலையை ஓருவன் நிலத்தோடு சேர்த்து அழுத்திப்பிடிப்பது மட்டும்தான் தெரிந்தது. சொற்பநேரத்தில் அவர்கள் மட்டுமே திரும்பிவந்தார்கள் அப்பா திரும்பப் போவதில்லை என்பதை அவர்கள் கைகளிலிருந்த முரட்டுக்கத்திகளின் குருதிச்சொட்டுகள் சொல்லின.
அப்பாவைக் கொன்றுவிட்டார்கள். அப்பா பாவம். பிள்ளைகளுக்காக மாடாய் உழைத்த அப்பா. உயிர் பிரியும் இந்தக்கணத்திலும் பிள்ளைகள் உயிர் தப்பிவிட வேண்டும் என்றுதான் அப்பா நினைத்திருப்பார். இருந்த நிலையில் நிலத்தோடு - சரிந்து பிள்ளைகள் இருவரும் அழுதார்கள். புவனேஸ்வரிக்கு அப்பாவைப் பார்க்க வேண்டும் போல் இருந்தது. அப்பாவை அவர்கள் குற்றுயிராய் விட்டுவந்திருந்ததால். அப்பா "தண்ணி- தண்ணி என்று கேட்பது போல் பிரமை தட்டியது. ஆனால், எழும்பிப் போக தைரியமில்லை அவளுக்கு. சுற்றிலும் கொடிய சர்ப்பவிஷம் பொருந்திய மனிதர்கள். சற்று அசைந்தாலும் தன்னையும் கொன்று விடுவார்களென்று சாவுக்கஞ்சி அந்தப் பிஞ்சுப்பெண் கேவிக் கேவி அழுதபடி கிடந்தாள்.
ஒரு வெறியாட்டுப் படலத்தை முடித்த பின்னு அங்கிருந்து நகரும் எண்ணம் அந்த இராணுவக் கும்பலுக்கு இருக்கவில்லை. பொழுது இருண்டு மயானக்கிலி பரவத்தொடங்கியது. புவனேஸ்வரியின் அழுகையை கொச்சைத்தமிழில் அதட்டியவாறு கைக்கட்டுகளை அவிழ்த்துவிட்ட ஒரு இராணுவ வெறியன் மூவருக்கும் உணவுப்பொதி கொடுத்தான். அப்பாவைக் கொன்ற இரத்தக்கைகளால் பிள்ளைகளுக்கு உணவு கொடுக்கும் குரூரப்பரிகாசம். இதுதான் சிங்கள பௌத்தம்!
உப்புப் புளி இல்லாத பண்டமும் சுவையாகத் தெரியும் பசி அவர்களுக்கு. ஆனாலும் எப்படிச் சாப்பிடுவார்கள்? வீட்டில் பிணங்கிடக்கும் போது அடுப்பில் உலையேற்றாத பாரம்பரியமல்லவா எங்களுடையது! அதுவும் இங்கே, கண்ணுக்கு முன்னால் கொடூரச்சாவடைந்து கிடப்பது அவர்களின் குருதி மூலமல்லவா! தங்களை ஊட்டி வளர்த்த அப்பா பிணமாகக்கிடக்கும்போது பசி ஒரு குறையாகவா இருக்கும் பிள்ளைகளுக்கு.
அந்த மரணப்பொழுது மெது மெதுவாய் கழிந்து கொண்டிருந்தது. புவனேஸ்வரிக்குப் பக்கத்தில் வந்து சம்மணமிட்டு அமர்ந்தான் ஒரு படையினன். துப்பாக்கிக் கத்தியை எடுத்து விரல்தடவி அதன் கூர்மையைப் பரிசோதித்தவாறு அவளிடம் கொச்சைத்தமிழில் பேச்சுக்கொடுத்தான்.
அவளின் வலதுகையைப் பிடித்து கட்டை விரலில் கத்தியால் மெதுவாகக் கீறியபடி கேட்டான் பாப்பாவுக்கு புலி தெரியுமா? சாவை மிக அருகில் உணர்ந்த அவளுக்கு ஒரு பதிலும் சொல்ல வரவில்லை. பெருவிரலில் வலிதெறிக்க அவளின் அழுகை வலுத்தது.
பாப்பா அழவேணாம். பயம் வேணாம். நாளைக்கு பாப்பா வீட்ட போகலாம்" சொல்லியவன், இப்போது அவளின்
வலதுகை மணிக்கட்டில் இரத்தவரிகளைக் கீறினான். அழுதால் தன்னைக் கொன்று விடுவான் என்ற பயத்தில் அழுகையை மென்று விழுங்கி வலியை முனகினாள் புவனேஸ்வரி,
மூன்று உயிர்களையும் மெது மெதுவாய் உயிர்வதை செய்தே இரவைக் கழித்துக் கொண்டிருந்த ராணுவக்கும்பல். இரையாக்கிக் கொள்ளுமுன் பூனையின் முன் விளையாட்டுகளால் வதையுறும் சுண்டெலியின் நிலையிலிருந்தார்கள் மூவரும்.
அதிகாலை மூன்று மணியளவில் அந்த இராணுவக்கும்பல் புறப்பட ஆயத்தமானது. தங்களை உயிர் பிழைக்க விட்டுப் போகப் போகிறார்கள் என்று இவர்கள் நினைக்க,கத்திகள் முளைத்த கைகளுடன் அவர்கள் சூழ்ந்தனர்
சாவு தங்களை அண்மிப்பதைத் தெரிந்துகொண்ட மூன்று சீவன்களும் கையெடுத்துக் கும்பிட்டு, கண்ணீர் பெருக்கி, கால்பிடித்துக் கெஞ்சிக் கதறக் கதற வெட்டினார்கள் வெறியர்கள். ஒருகத்தி சசிக்குமாரின் கழுத்தில் மிக ஆழ இறங்கியது. பீறிப்பாய்ந்த குருதி வெட்டியவனின் முகத்திலும் வழிந்தது. இன்னொருவனின் கத்தி கணேஸ் அண்ணனின் கழுத்தைப் பிளந்தது. புவனேஸ்வரியின் கழுத்தில் கத்தி இறங்கும்போதே
எதேச்சையாக கத்தியின் விசையை எதிர்க்காது அதன் விசையோடு சேர்ந்து அவளும் விழுந்தாள். கழுத்திலிருந்து குருதி வழிந்தது. ஆனால், உயிர் வழிந்து விடவில்லை" அசைவெதையும் காட்டாது விறைத்துக் கிடந்தாள்.
தங்களின் தேர்ந்த வெட்டுகளில் நம்பிக்கை மிகக்கொண்டு,இரண்டாவது வெறியாட்டுப் படலத்தையும் முடித்துக்கொண்டு வெறிக்கூச்சல் எழுப்பியபடி அங்கிருந்து அகன்றது இராணுவக்கும்பல்.
சிங்களக் கூச்சல் தூர விலகும் வரை பொறுத்திருந்து தலையைத்துக்கி அருகில் கிடந்த . உடல்களிரண்டையும் தடவி அண்ணனைக் கண்டுபிடித்து அசைத்துப் பார்த்தாள். அவனில் ஒரு சலனமுமில்லை. புவனேஸ்வரிக்கு கழுத்திலிருந்து குருதி வழிந்து சட்டை தெப்பலாகியிருந்தது. தலையைச் சுற்றியது. தொண்டை வரண்டு தண்ணி விடாய்த்தது. எழுந்து உட்கார்ந்து கணேஸ் அண்ணனை அசைத்துப் பார்த்தாள் உயிரசைவு தெரிந்தது. தன்னைச் சமாளித்துக்கொண்டு எழுந்து கணேசண்ணனின் தலையைப் பிடித்து நிமிர்த்தினாள். வலுவின்றி தலை கெளித்து விழுந்தது. அண்ணனுக்கு அருகில் அமர்ந்து தோளைப்பிடித்து நிமிர்த்த முயன்றாள். முகம் அவனது முதுகு பார்க்கத் திரும்பியது. அவனது கழுத்து ஏறக்குறைய துண்டித்த நிலையில் இருந்தது. எந்தச் சந்தேகமும் இல்லாமல் அண்ணன் இறந்து விட்டிருந்தான். புவனேஸ்வரி தன் ஆசையண்ணனைத் தடவித் தடவி அழுதாள். திக்குகள் தெரியாமல் மூடியிருந்த இருளுக்குள் அடுத்து என்ன செய்வது என்று அந்தக் குழந்தைப் பெண்ணுக்குப் புலப்படவேயில்லை.......
அப்பா கிடந்த பற்றையையும் அண்ணனையும் மாறிமாறிப் பார்த்தாள். மீண்டும் அழுகை பொத்துக்கொண்டு வந்தது. அப்பாவையும் அண்ணனையும் அநாதைப் பிணங்களாக விட்டுப்போக அவளால் முடியவில்லை. ஆனால் அந்த இராணுவக் கும்பல் திரும்பவும் வந்துவிடுமோ என்ற சாவச்சம் அவளை அங்கிருந்து துரத்தியது....
நம்பிக்கையை வரவழைத்துக் கொண்டு தன் பலம் முழுவதையும் பிரயோகித்து கணேசண்ணனைத் தூக்கி நிமிர்த்தினாள். தன் அண்ணனின் சாரத்தைக் கிழித்து அவரது கழுத்துக்கும் தனது கழுத்துக்கும் கட்டுப்போட்டாள்.
கணேசண்ணனின் தலை கெளிதலுக் கெளித்து விழுந்தது. அவரால் அசையக் கூட முடியவில்லை. ஆனால், புவனேஷ்வரி விடாப்பிடியாக நின்று அவரைத் தூக்கி நிறுத்தி-ஆதரவாக அணைத்துப் பிடித்து நடத்தி - புவிகளின் காவலரண் ஒன்றுக்கு கொண்டுவந்து சோத்தாள்.....
இரத்தமும் கண்ணீருமாய் பத்து வயதுப் பிள்ளை மனதில் துயரவடு விழுத்திய அந்தக் கொடிய இரவு புவனேஸ்வரியைப் பொறுத்தவரை விடியவே இல்லை. அதன் இருள் இன்னமும் அவள் மனதைக் கப்பியிருக்கிறது!.........
-வெறியாட்டுப் படலம்
-எஸ். உமாஜிப்ரான்
-விடுதலைப்புலிகள் இதழ் .மாசி-பங்குனி 1999.
தொகுப்பு : தமிழரசன் அப்துல்காதர்

.jpeg
)





கருத்துகள் இல்லை