சிறுவர்களுக்கான மகிழ்வூட்டும் பிறந்தநாள் விழா !📸
விசேட தேவைக்குட்பட்ட சிறுவர்களுக்கான மகிழ்வூட்டும் பிறந்தநாள் விழா சாவகச்சேரியில் சிறப்பாக நடைபெற்றது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் விசேட தேவைக்குட்பட்ட சிறுவர்களை மகிழ்வூட்டும் நோக்கில் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்வு ஒன்று நேற்றைய தினம் (09.04.2026) சாவகச்சேரி கலாசார மண்டபத்தில் காலை 9.30 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.
வேல்ட் விஷன் லங்கா நிறுவனம், யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வு, நிறுவனத்தின் சாவகச்சேரி மற்றும் சங்கானை பிரிவுகளுக்கான முகாமையாளர் திரு. ஆர். அமிர்தநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும், வேல்ட் விஷன் லங்கா நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் திரு. A.U நிஷாந்தன், சாவகச்சேரி பிரதேச செயலாளர் திரு. F.C சத்தியசோதி, சங்கானை பிரதேச செயலாளர் திருமதி கவிதா உதயகுமார் மற்றும் உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ. தர்ஷினி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இதன்போது உரையாற்றிய மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள், கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் விசேட தேவையுடைய பிள்ளைகளின் சமூக நிலைமையில் கணிசமான மாற்றம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். முன்பு இவ்வாறான பிள்ளைகள் கல்வி மற்றும் சமூக செயல்பாடுகளில் பங்குபெற முடியாமல் இருந்த நிலையில், தற்போது அவர்கள் சமூகத்துடன் இணைந்து பல்வேறு போட்டிகள் மற்றும் நிகழ்வுகளில் பங்கேற்று தமது திறமைகளை வெளிப்படுத்தும் நிலை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், பிரதேச செயலகங்கள் மற்றும் சமூக அமைப்புகளின் பங்களிப்பால் இத்தகைய முன்னேற்றம் சாத்தியமாகியுள்ளது எனவும், தேசிய மட்ட போட்டிகளில் கூட யாழ்ப்பாண மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளமை பாராட்டத்தக்கதாகும் எனவும் கூறினார். கடந்த ஆண்டு சமூக சேவைகள் திணைக்களம் நடத்திய நடனப் போட்டியில் மாவட்ட மாணவர்கள் இரண்டாம் இடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது என்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் கடந்த மூன்று மாதங்களில் பிறந்தநாள் கொண்டாடிய விசேட தேவைக்குட்பட்ட சிறுவர்களுக்காக கேக் வெட்டி கொண்டாடப்பட்டதுடன், அவர்களுக்கு உணவு வழங்கி மகிழ்வூட்டப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, கலந்து கொண்டிருந்த மாணவர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
இந்த நிகழ்வில் சங்கானை, சாவகச்சேரி உள்ளிட்ட வேல்ட் விஷன் லங்கா நிறுவனத்தின் செயற்பாட்டு பிரதேசங்களுடன் பருத்தித்துறை, கரவெட்டி, கோப்பாய், நல்லூர் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த மொத்தம் 80 விசேட தேவைக்குட்பட்ட சிறுவர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், வேல்ட் விஷன் லங்கா நிறுவன அதிகாரிகள், மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விசேட கல்வி அலகு ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர்.
இத்தகைய சமூக வலுவூட்டும் நிகழ்வுகளை தொடர்ந்து முன்னெடுத்து வரும் வேல்ட் விஷன் லங்கா நிறுவனத்திற்கு மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் நன்றியும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.



.jpeg
)





கருத்துகள் இல்லை