தேசிய புத்தரிசி விழா ஜனாதிபதி தலைமையில்!


உலகில் எந்தவிதமான நெருக்கடிகள் ஏற்பட்டாலும், இலங்கையில் உணவு நெருக்கடி ஏற்படாதிருப்பதற்கு எமது விவசாயிகளின் உன்னதமான அர்ப்பணிப்பே காரணமாகும்


- அதற்காக எனது கௌரவத்தை தெரிவிக்கிறேன்


விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை தற்போதைய நிலையை விடவும் மேம்படுத்துவற்கு அரசாங்கத்திடம் பாரிய திட்டங்கள் உள்ளன


எமது முதலாவது பதவிக்காலத்திற்குள், வடமத்திய மக எல கால்வாய் ஊடாக மககனதராவ குளத்திற்கு நீரைக் கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்


உலக சந்தையில் உரத்தின் விலை எவ்வளவு அதிகரித்த போதிலும், சிறுபோகத்தில் ஒரு மூட்டை உரத்தை அதிகபட்சமாக 10,200 ரூபா என்ற விலைக்கு வழங்குவோம்.


- ஜனாதிபதி


சம்பிரதாயபூர்வமாக வருடாந்த பெரும்போகத்தில் அறுவடை செய்யப்பட்ட புத்தரிசியை கொண்டு ஜய ஸ்ரீ மஹா போதிக்கு பூஜை செய்யும் 2026 தேசிய புத்தரிசி விழா, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (09) முற்பகல் வரலாற்று சிறப்புமிக்க அநுராதபுரம் ஜய ஸ்ரீ மஹா போதிக்கு அருகாமையில் நடைபெற்றது.


அடமஸ்தானாதிபதி வண பல்லேகம ஹேமரதன நாயக்க தேரரின் அனுசாசணையின் பேரில் “உணவினால் பாதுகாக்கப்பட்டதொரு தேசத்தை உருவாக்கும் பொருட்டு பிடியளவு கமநிலத்திற்கு” என்ற தொனிப்பொருளின் கீழ் விவசாய அமைச்சு மற்றும் கமநல அபிவிருத்தித் திணைக்களம் என்பன இணைந்து 59 ஆவது தேசிய புத்தரிசி விழாவை ஏற்பாடு செய்திருந்தன. 


பண்டைய காலத்திலிருந்து கடைப்பிடிக்கப்பட்டு வரும் இந்த சம்பிரதாய நிகழ்வில் நாடு முழுவதிலுமிருந்து ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டதுடன் "நேரத்திற்கு மழை பொழிய வேண்டும் - விளைநிலங்கள் செழுமையாக வேண்டும்" என்று பிரார்த்தித்து, விவசாயத்தின் மூலம் நாடு தன்னிறைவு பெற்று, வளமான பொருளாதாரம் உருவாக வேண்டும் என நாடு மற்றும் தேசத்திற்காக ஆசி வழங்குவதும் பாரம்பரிய முறைப்படி இங்கு இடம்பெற்றது


தேசிய புத்தரிசி விழாவில் கலந்து கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, முதலில் வரலாற்று சிறப்புமிக்க ஜய ஸ்ரீ மஹா போதியை தரிசித்து ஆசி பெற்றுக்கொண்டார்.


சம்பிரதாயபூர்வமாக ஜய ஸ்ரீ மஹா போதிக்கு பூஜை செய்யவதற்கான தூய தேன் பானை இதன்போது ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில எத்தோவினால் ஜனாதிபதியிடம் வழங்கப்பட்டதுடன்,ஜய ஸ்ரீ மஹா போதியவிற்கு நெய் பூஜை செய்வதற்காக சப்ரகமுவ வரலாற்று சிறப்புமிக்க சமன் தேவாலயத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட நெய் பானையும் ஜனாதிபதியிடம் இதன்போது கையளிக்கப்பட்டது.


59 ஆவது தேசிய புத்தரிசி விழாவின் நினைவுப் பதிப்பும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதுடன், இந்நாட்டின் விவசாய அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்த விவசாய அமைப்புகளின் தலைவர்களை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராட்டினார். 


அங்கு சிறிய அளவிலான நீர்ப்பாசனத் திட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி விவசாயி கிங்ஸ்லி குமாரவும், பாரிய நீர்ப்பாசனத் திட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி விவசாயி டபிள்யூ. சுமித் லக்ஷ்மன் குமாரவும், மகாவலித் திட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி விவசாயி எச்.எம். உபாலி தர்மரத்னவும் ஜனாதிபதியிடமிருந்து பாராட்டு விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.


மாகாண மட்டத்தில் விவசாயிகளுக்கு விதை நெல் பகிர்ந்தளிக்கும் நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.


அதன் பின்னர், அங்கு நடைபெற்ற விழாவில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, உலகில் எத்தகைய நெருக்கடிகள் ஏற்பட்டாலும், ஒரு தேசமாக நாம் உணவு நெருக்கடிக்கு முகம் கொடுக்காமல் இருப்பதற்கு, நமது விவசாயிகள் இரவு பகல் பாராது, வெயில், மழை மற்றும் பனி என எதனையும் பொருட்படுத்தாமல் விவசாயத்திற்காக வழங்கும் மகத்தான பங்களிப்பே காரணம் என்றும், அதற்காக விவசாயிகளுக்கு கௌரவத்தை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.


இரத்தம், கண்ணீர் மற்றும் வியர்வையின் மீது கட்டியெழுப்பப்பட்ட இந்நாட்டு விவசாயிகளின் வாழ்க்கையை இதைவிட உயரிய மட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக அரசாங்கத்திடம் பாரிய திட்டம் இருப்பதாகவும், அதன்போது 07 பிரதான துறைகள் குறித்து கவனம் செலுத்தி கமத்தொழில் மற்றும் விவசாயத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.


அதன்படி, நாட்டின் சிறிய மற்றும் மத்திய அளவிலான குளங்களின் கட்டமைப்பை மறுசீரமைத்து தேவையான நீர் வளத்தை வழங்குதல், விவசாய உள்ளீடுகளை நியாயமான விலையில் 


பெற்றுக்கொடுத்தல், விவசாயத்திற்கு நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துதல், விளைச்சல் வீணாவதைத் தடுப்பதற்காக களஞ்சியப்படுத்தல் வசதிகள், பொதியிடல் மற்றும் சந்தை பொறிமுறையை வலுப்படுத்துதல், விளைச்சலுக்கு நியாயமான விலையைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கத்தின் விவசாயக் கொள்கைகளும் திட்டங்களும் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.


எந்தவொரு நாட்டிற்கும் தனக்கே உரித்தான ஒரு பயணப்பாதை இருக்கின்றது என்று இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எமக்கே உரிய கலாசாரமும் பயணப்பாதையும் விவசாயத்தின் மீது கட்டியெழுப்பப்பட்டுள்ளது என்றும், விவசாயத்துடன் பிணைந்துள்ள அந்த உன்னதமான கலாசார விழுமியத்தை இந்த புத்தரிசி விழா பிரதிபலிக்கின்றது என்றும் சுட்டிக்காட்டினார்.


இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க,


குறிப்பாக நமது நாட்டின் தோற்றம், இருப்பு மற்றும் எதிர்காலம் ஆகியவை பெருமளவில் விவசாயத்திலேயே தங்கியுள்ளன என்பதை நாம் அறிவோம். நமது தொழில்நுட்பமானது விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டே வளர்ச்சியடைந்தது. நீண்டகாலமாக நமது பொருளாதாரத்தை வலுப்படுத்தி வருவது விவசாயமாகும். நமது மக்களின் வாழ்வாதாரமும் விவசாயத்தை மையப்படுத்தியே கட்டியெழுப்பப்பட்டுள்ளது.


அதேபோல், நமது கலாசாரத்தின் பெரும்பகுதியை விவசாயத்தோடு தொடர்புடைய கலாசாரச் செயல்பாடுகளே பிரதிபலிக்கின்றன. விவசாயம் ஆரம்பிக்கப்பட்டது முதல், அறுவடை செய்யப்பட்டு 'புத்தரிசி விழா' கொண்டாடப்படும் வரை விவசாயத்துடன் பிணைந்த ஏராளமான கலாசார நிகழ்வுகள் காணப்படுகின்றன. மழை மற்றும் காலநிலை சிறப்பாக அமைவதற்கும், விலங்குகள் மற்றும் பூச்சிகளிடமிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்கும் ஆசிர்வாதம் வேண்டிப் பல்வேறு நேர்ச்சைகளும் வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன.


அங்கிருந்து ஆரம்பமாகும் விவசாயத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் கடைப்பிடிக்கப்படும் பழக்கவழக்கங்கள், எமது கலாசாரத்துடன் இணைந்து கட்டியெழுப்பப்பட்டுள்ளன. இறுதியாக அறுவடை செய்யப்பட்ட விளைச்சலைக் கொண்டு, விவசாயத்திற்கு நீர் வழங்கிய மகா குளத்தின் மேட்டுப் பகுதியில் பால் பொங்கி தமது நேர்ச்சைகளை நிறைவேற்றுகின்றனர்.


அதன் மிக முக்கியமான மைல்கல்லாக அமைவது, அறுவடை செய்த விளைச்சலின் முதற்பகுதியை ஜய ஸ்ரீ மகா போதிக்கு பூஜை செய்து, அந்தப் புண்ணியத்தை அர்ப்பணித்து, எமது 


விவசாயத்திற்கும், பயிர்ச்செய்கைக்கும் மற்றும் மக்களின் வாழ்க்கைக்கும் ஆசி வேண்டி நடத்தப்படும் புத்தரிசி விழா ஆகும்.


அடமஸ்தானாதிபதி தேரர் தலைமையிலான மகா சங்கத்தினரின் அனுசாசணைகள் மற்றும் தலையீட்டுடன் ஒவ்வொரு வருடமும் இந்த புண்ணிய நிகழ்வு நடத்தப்படுகிறது. இத்தகைய கலாசார நிகழ்வுகள் ஒரு நாட்டின் தனித்துவம், கலாசார பிணைப்பு மற்றும் முன்னேற்றத்திற்கான அடித்தளத்தை பறைசாற்றுகின்றன. எந்தவொரு நாட்டிற்கும் தனக்கே உரித்தான ஒரு தனித்துவமான பாதை உள்ளது. எமக்கே உரித்தான கலாசாரமும், அந்தப் பயணப்பாதையும் இந்த விவசாயத்தின் மீதே கட்டியெழுப்பப்பட்டுள்ளது.


நமது நாட்டின் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் வாழ்க்கையை மிகவும் உயர்தரமான வாழ்க்கையாக மாற்ற வேண்டும் எனும் உன்னத நோக்கத்திற்காக எமது கொள்கைகளும் திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளன. நமது நாட்டின் கிராமப்புற மக்களில் பெரும் பகுதியினரின் பிரதான வருமான ஆதாரமாக விவசாயமே காணப்படுகிறது என்பதை நாம் அறிவோம். எனவே, விவசாயத்தில் பெறப்படும் வெற்றியினைப் பொறுத்தே விவசாயிகளின் வாழ்க்கை தரம் உயர்கிறதா? இல்லையா? என்பது தீர்மானிக்கப்படுகிறது.


வெற்றிகரமான விவசாயத்தின் மூலம் எமது கிராமப்புற மக்கள் சிக்கியுள்ள வறுமையிலிருந்து அவர்களை விடுவிக்க முடியும். எனவே, ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் எமது கொள்கைகளையும் திட்டங்களையும் நாம் வகுப்பது, கிராமப்புற மக்களின் வறுமை ஒழிக்கப்பட வேண்டும், அதற்காக விவசாயத்திற்கான ஒரு தொலைநோக்குப் பார்வையும் வேலைத்திட்டமும் அவசியம் என்ற அடிப்படையிலாகும்.


விவசாயமானது பல பிரதான அம்சங்களுடன் பிணைக்கப்பட்டுள்ளது. எமது நாட்டு விவசாயிகளுக்கு காணி தொடர்பான பல சிக்கல்கள் இருப்பதை நாம் அறிவோம். முறையான காணி உரிமை இல்லாமை விவசாயிகள் எதிர்நோக்கும் ஒரு பாரிய பிரச்சினையாகும். எனவே, தற்போது கமத்தொழில் அமைச்சரின் தலைமையில் அந்தக் காணிகளில் உள்ள சிக்கல்களைத் தீர்த்து, நிரந்தர அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்காக ஹிமிகம  (உரித்து) வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் அநுராதபுரத்திற்குச் சென்று அந்த காணி உறுதிப்பத்திரங்களை வழங்கியபோது, அந்த மக்களின் கண்களில் இருந்த கண்ணீரை நான் கண்டேன்.


எனவே, தமக்குச் சொந்தமான காணியின் உரிமையை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான மிகவும் வலுவான ஒரு வேலைத்திட்டத்திற்குள் நாம் பிரவேசித்துள்ளோம். வெவ்வேறு காலப்பகுதிகளில் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. அவை அனைத்திலும் ஏதோ ஒரு 


மட்டத்தில் சிக்கல்கள் உருவாகியுள்ளன. அவை அனைத்தையும் தீர்த்து, தெளிவான ஒரு உறுதிப்பத்திரத்தை வழங்கும் திட்டத்தை நாம் தற்போது தயாரித்துள்ளோம்.


இரண்டாவதாக, விவசாயத்தின் மிக முக்கியமான பகுதி நீர் ஆகும். எம்மிடம் எவ்வளவுதான் நில வளம் இருந்தாலும், பயிர்ச் செய்கைக்குத் தேவையான நீர் வசதிகளைப் பெற்றுக்கொள்ள முடியாவிட்டால் அதில் பயனில்லை. எமது முன்னோர்களும், மன்னர்களும் மேற்கொண்ட பிரம்மாண்டமான நீர்ப்பாசனக் கட்டமைப்பு காரணமாகவே இந்த 'ரஜரட்ட' பிரதேசம் 'குளங்கள் சூழ்ந்த இராஜ்ஜியம்' எனப் பெயர் பெற்றது என்பதை நாம் அறிவோம். எமது கிராமங்கள் கூட இந்த நீர்ப்பாசனக் கட்டமைப்பின் விளைவாகவே கட்டியெழுப்பப்பட்டன.


எமது முன்னோர்களும் அரசர்கரும் சுமார் 32,000 குளங்களை நிர்மாணித்துள்ளனர். நாம் ஒரு மகத்தான நீர்ப்பாசன வரலாற்றுக்கு உரிமையாளர்களாக இருக்கிறோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இக்குளங்களில் பெரும் பகுதி இன்று அழிந்து போயுள்ளன. இன்றைய தரவுகளின்படி, சுமார் 14,000 குளங்கள் மாத்திரமே எஞ்சியுள்ளன. எனவே, ஒரு பிரதான பொறுப்பாக நாம் எமது குளங்களைப் பாதுகாக்க வேண்டும்.


ஒக்டோபர் மாதம் ஆரம்பமானதும் பலத்த மழை பெய்யத் தொடங்கும். அந்த நீரை எமது நீர்த்தேக்கங்களில் சேமித்து வைத்தால் மாத்திரமே பெரும்போகத்திற்குத் தேவையான நீரைப் பெற்றுக்கொள்ள முடியும். இன்று கண்டி வாவி முதல், அதிகாரமும் செல்வமும் உள்ளவர்கள் குளத்தின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளை ஆக்கிரமித்துள்ளனர். அவை சேதமடைந்து, வண்டல் மண் நிரம்பிக் காணப்படுகின்றன. எமது கலாசாரம் என்பது வெறும் குளங்களைச் சார்ந்து அமையவில்லை. அது நீர்ப்பாசனத் தொகுதியாகவே கட்டியெழுப்பப்பட்டிருந்தது. இதனுள் நிலைபேறான அபிவிருத்தி குறித்த கருத்தாடல் அடங்கியுள்ளது. இன்று நிலைபேறான அபிவிருத்தி பற்றிய பாரிய முன்மொழிவுகள் குறித்துப் பேசப்படுகிறது. ஆனால், நிலைபேறான அபிவிருத்தியின் உன்னதமான படைப்பு எமது குளம் சார்ந்த நீர்ப்பாசனக் கட்டமைப்பு.


ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தலைமுறை தலைமுறைக்கு உணவளிப்பதற்காக இந்த குளம் சார்ந்த நீர்ப்பாசன  கட்டமைப்பு நமக்கு உதவியாக இருந்துள்ளது. இந்தக் குளங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக விவசாயத்திற்குத் தேவையான நீரைத் தொடர்ச்சியாக வழங்கி வருகின்றன. உலகில் நிலையான அபிவிருத்திக்கு  ஓர் உதாரணம் தேவையென்றால் அது எமது குளங்களாகும். ஆனால், தற்போது எமது மனித சமூகத்தினாலேயே நிலையான அபிவிருத்தியின் பெரும் பெறுமதியாகக் கருதப்படும் எமது சிறிய மற்றும் நடுத்தர அளவிலான குளக்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டு வருகின்றன. எனவே, மீண்டும் எமது நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான 


குளக்கட்டமைப்புகளை மறுசீரமைக்க வேண்டும் என ஒரு நிலையான தீர்மானத்தை எடுத்துள்ளோம். சில நேரங்களில் இதற்கு எதிர்ப்புகள் கிளம்பலாம். ஆனால், நிலையான அபிவிருத்தியின் மிகச்சிறந்த கருவியான இந்த குளக்கட்டமைப்பை நாம் பாதுகாப்போம் என்பதில் உறுதியான தீர்மானத்துடன் இருக்க வேண்டும். தற்போது எமக்கிருக்கும் பொறுப்பு யாதெனில், இந்த குளக்கட்டமைப்புகளை எதிர்கால சந்ததியினருக்காக பாதுகாத்து வழங்குவதாகும். இதற்காக விவசாய அமைச்சு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் ஜனாதிபதி என்ற ரீதியில் நானும், அரசாங்கமும் பாதுகாப்பை வழங்குவோம்.


அதேபோல், முன்னரை விட எமது பயிர்ச்செய்கை நிலங்களின் அளவு அதிகரித்துள்ளது, உணவுத் தேவையும் உயர்ந்துள்ளது. எனவே, வானிலிருந்து கிடைக்கும் மழை மட்டும் நமக்கு போதுமானதல்ல. குறிப்பாக இந்த உலர் வலயத்திற்கு, எமது மத்திய மலைநாட்டிற்கு பெய்யும் மழையை இந்த வடமத்திய மாகாணத்தின் பயிர்ச்செய்கைகளுக்காக எவ்வாறு கொண்டு வருவது என்பது குறித்த மிக முக்கியமான திட்டமாக ‘வடமத்திய பாரிய கால்வாய்’ திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் சில சிக்கல்கள் உள்ளன, இருப்பினும் இத்திட்டத்தை நாம் நிறைவு செய்ய வேண்டும். தற்போது ஏரு குளம் முதல் மகாகந்தராவ வரை கால்வாய் வெட்டி முடிக்கப்பட்டுள்ளது. எனவே, எமது முதலாம் காலப்பகுதிக்குள் இந்த மகாகந்தராவ குளத்திற்கு வடமத்திய  பாரிய கால்வாய் மூலம் நீரை வழங்க நாம் எதிர்பார்க்கிறோம். அதேபோல், நிறுத்தப்பட்டிருந்த மல்வத்து ஓயா திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்காக இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம்.


அத்துடன், உள்ளீடுகள்  குறித்து நாம் ஆய்வு செய்ய வேண்டும். ஏனெனில் எம்மால் நிலத்தின் அளவை அதிகரிக்க முடியாது. அவ்வாறாயின், பயிர் நிலத்திலிருந்து பெறப்படும் அறுவடையை அதிகரிக்க வேண்டும். அதற்கு புதிய உள்ளீடுகள் நமக்குத் தேவை. எனவே, ஆராய்ச்சிகள் மூலம் புதிய உள்ளீடுகளுக்கு மாற முடியும் என நாம் நம்புகிறோம். அத்துடன் விவசாய மக்களுக்கு உள்ளீடுகளை நியாயமான விலையில் வழங்க வேண்டும்.


எனவே, உலக சந்தையில் யூரியாவின் விலை எவ்வளவு உயர்ந்தாலும், இந்த சிறுபோகத்திற்காக 10,200 ரூபா என்ற உத்தரவாத விலைக்கு உட்பட்டு யூரியாவை வழங்கத் தீர்மானித்துள்ளோம். மேலதிகமாக, நெல் விவசாயிகளுக்கான உர மானியத்தை 25,000 - 30,000 ரூபாய் வரை அதிகரிக்கவும், வயல்களில் பயிரிடப்படும் மரக்கறி விவசாயத்திற்காக வழங்கப்படும் 15,000 ரூபா மானியத்தை 18,000 ரூபா வரை அதிகரிக்கவும் தீர்மானிக்கப்பட்டது. உலகில் ஏற்பட்டுள்ள யுத்த மோதல்களால் இந்த உள்ளீடுகளின் விலை உயர்ந்துள்ளது. அதனை விவசாயிகளால் தனித்து தாங்கிக்கொள்ள முடியாது. எனவே நாம் உள்ளீடுகள் குறித்து கவனம் செலுத்தியுள்ளோம்.


மேலும், விவசாயத்திற்கு நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு வர வேண்டும். புதிய இளம் தலைமுறையினர் புதிய கருவிகளை உற்பத்தி செய்து வருகின்றனர். நாம் அவர்களை ஊக்குவிக்க வேண்டும். விவசாயத் துறையில் நாம் உழைப்பு ரீதியான பெரும் சிக்கலை எதிர்கொண்டு வருகிறோம். எனவே, விவசாயத்துடன் நவீன தொழில்நுட்பத்தை இணைக்க வேண்டியுள்ளது. உலகம் முழுவதும் நிலத்தை தயார் செய்தல், விதைத்தல், உரமிடுதல், அறுவடை செய்தல் என அனைத்தும் குறிப்பிடத்தக்க அளவில் நவீன தொழில்நுட்பத்திற்கு மாறியுள்ளன. எனவே, மிக வேகமாக எமது விவசாயத்திற்கு நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் எம்மால் உற்பத்தித்திறனை அதிகரிக்க முடியும்.


அதேபோல், அறுவடை செய்யப்படும் பயிர்கள் வீணாவதைத் தடுப்பது முக்கியம். இதில் களஞ்சியப்படுத்தல், பொதியிடல் மற்றும் சந்தை பொறிமுறையை வலுப்படுத்த வேண்டும். இதற்காக அறுவடைக்கு பிந்தைய நஷ்டத்தைத் தடுப்பதற்காக அநுராதபுரத்தில் ஒரு நிறுவனம் நிறுவப்பட்டுள்ளது. அங்கு புதிய ஆராய்ச்சிகள் மற்றும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் பலனை நாம் இன்று அனுபவிக்கிறோம். நாம் இன்னும் முன்னோக்கிச் செல்ல வேண்டும். அதற்காக புதிய ஆராய்ச்சிகளை ஊக்குவிக்க வேண்டும். இதற்கான ஒரு வேலைத்திட்டத்தை நாம் தயாரித்துள்ளோம்.


எமது விவசாயிகள் எப்போதும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை யாதெனில், அறுவடை செய்யும் பயிர்களுக்கு நியாயமான விலை கிடைக்கிறதா என்பதுதான். காலம் காலமாக இருந்து வரும் இந்த முறைப்பாட்டிற்கு ஒரே இரவில் தீர்வு காண முடியும் என்று நான் கூறவில்லை. ஆனால், அதற்கான தீர்வு குறித்த ஒரு திட்டத்தில் நாம் இருக்கிறோம்.


இதன்படி 7 துறைகளை மையமாகக் கொண்டு விவசாயத்தை மேம்படுத்தவும், விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும் நாம் பணியாற்றி வருகிறோம். அரசியல் அதிகாரம் என்ற ரீதியில் எமக்கு அந்த அக்கறையும் விருப்பமும் உள்ளது. நானும் விவசாய அமைச்சரும் இந்த அநுராதபுரத்தின் கிராமங்களில் வளர்ந்து, வயல்களுடனும் தோட்டங்களுடனும் பணியாற்றிய மனிதர்கள். அதேபோல், எமது அதிகாரிகள் வினைத்திறனுடன் இந்த மாற்றத்திற்காக வேகமாக தலையிட வேண்டும்.


மேலும், இதில் எமது விவசாயிகளின் ஒத்துழைப்பு அவசியம். எமது விவசாயிகள் இதற்காகப் பெரும் அர்ப்பணிப்புகளைச் செய்து வருகின்றனர். அதற்காக நாம் அவர்களுக்கு கௌரவம் அளிக்க வேண்டும். உலகில் எந்த நெருக்கடி ஏற்பட்டாலும் எமக்கு உணவு நெருக்கடி ஏற்படாமல் இருப்பதற்கு எமது விவசாயிகள் இரவு பகலாக, வெயில், மழை, பனி என பாராது செய்யும் அர்ப்பணிப்பே காரணமாகும். எனவே, இரத்தம், கண்ணீர், வியர்வை மீது கட்டியெழுப்பப்பட்ட விவசாயிகளின் வாழ்க்கையை இதைவிட உன்னதமாக்குவதற்கு எம்மிடம் பாரிய திட்டம் உள்ளது. 


ஒரு நல்ல வீடு, வருமான வழி, மன அமைதி மற்றும் பிள்ளைகளுக்கு நல்ல கல்வி, சிறந்த சுகாதாரக் கட்டமைப்பு என இவை அனைத்தையும் வழங்கினால்தான் விவசாயிகளுக்கு ஒரு நல்ல சமூக வாழ்க்கை அமையும். இவை அனைத்தையும் முன்னெடுக்க நாம் செயற்பட்டு வருகிறோம். விவசாயிகளுக்கு கௌரவம் செலுத்தும் அதேவேளை, அவர்களைப் பாதுகாக்கும் மற்றும் வாழ்க்கையை உறுதிப்படுத்தும் பொறுப்பை ஏந்தி, அந்தப் பணிகளை வெற்றிகொள்ள அனைவரும் ஒன்றிணைவோம் என கேட்டுக்கொள்கிறேன்.


அட்டமஸ்தானாதிபதி நுவர கலாவிய பிரதான சங்கநாயக்க வணக்கத்திற்குரிய பல்லேகம ஹேமரதன நாயக்க தேரர், ருவன்வெலி சைத்தியாராமாதிபதி ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் வேந்தர் வணக்கத்திற்குரிய ஈதலவெடுணுவாவே ஞானதிலக்க தேரர், வடமத்திய மாகாணத்தின் பிரதான சங்கநாயக்க லங்காராமதிபதி வணக்கத்திற்குரிய ரளபனாவே தம்மஜோதி தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால் காந்த, வர்த்தக, வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க, வடமத்திய மாகாண ஆளுநர் வசந்த குமார விமலசிறி, கமத்தொழில், கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன மற்றும் விவசாய அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் பெருமளவிலான விவசாயிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.