தமிழர் தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட கூட்டாட்சித்தீர்வுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்!
தமிழர் தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட கூட்டாட்சித்தீர்வுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும். - கஜேந்திரன் வலியுறுத்தினார்.
தீர்வு என்னும் பெயரில் அனுரகுமார அரசாங்கம் ஏக்யராஜ் வரைபை புதிய அரசியலமைப்பாகக் கொண்டுவந்து நிறைவேற்றுவதனை இந்தியா தடுக்க வேண்டும்.
ஸ்ரீலங்கா மீது அழுத்தங்களைப் பிரயோகித்து ஒற்றையாட்சி முறைமையை நீக்க இந்தியா அவசரமாகத் தலையீடு செய்ய வேண்டும். – செல்வராசா கஜேந்திரன் வலியுறுத்தினார்.
இலங்கைக்கு இன்று 19.04.2026 வருகைதந்துள்ள இந்திய துணை சனாதிபதிக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் கொழும்பு காலிமுகத்திடலில் உள்ள தாச்சமுத்திரா நட்சத்திர விடுதியில் இடம்பெற்றது.
இந்தச் சந்திபில் தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் கலந்து கொள்ள முடியாத நிலையில் அவர்சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கலந்து கொண்டிருந்தார்.
தமிழரசுக் கட்சி சார்பில் சிவிகே சிவஞானம், எம்ஏசுமந்திரன், இரா சாணக்கியன் எம்பி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கலந்து கொண்டிருந்தனர்.
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் அக்கட்சியின் இணைத்தலைவர்களில் ஒருவராகிய சித்தர்த்தன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
அங்கு கருத்துக்களை முன்வைத்த கஜேந்திரன் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாகவும், தமிழ்த் தேசத்தில் சைவ ஆலயங்கள் அழிக்கப்பட்டு பௌத்த மயமாக்கப்படுகின்றமை தொடர்பிலும் இந்திய துணை சனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டுவந்திருந்தார்.
இலங்கையில் 77 ஆண்டுகளாக நீடித்து வரும் ஈழத்தமிழர்களது இனப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை அடைவதற்கு இந்தியா அவசர தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
குறிப்பாக இனப்பிரச்சினையைத் தீர்க்கப்போவதாகக் கூறி இலங்கைக்கு புதிய அரசியலமைப்பை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளில் அனுரகுமார திசாநாயக்க அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. ஆனாலும் அவர்கள் கொண்டுவரவுள்ள யாப்பானது ஒற்றையாட்சி அரசியல் யாப்பு என்பதை சுட்டிக்காட்டி அதனை தடுத்து நிறுத்துவதற்கு இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதே நேரத்தில் தற்போதுள்ள ஒற்றையாட்சி அரசியல் யாப்பினை நீக்குவதற்கான அழுத்தங்களை இலங்கை மீது ஏற்படுத்தி கூட்டாட்சி யாப்பினைக் கொண்டுவரச் செய்வதற்கான அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.
கூட்டாட்சி அரசியல் யாப்பானது தமிழர் தேசம் அதன் தனித்துவமான இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமையை முழுமையாக அனுபவிக்கக்கூடியதாக அமைய வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
1987 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தமானது தமிழர்களது பாரம்பரிய தாயகம் வடக்கு கிழக்கு என்பதனை அடையாளப்படுத்தியுள்ளது மேலும் தமிழ் மக்களது அபிலாசைகள் பூர்த்தி செய்யப்படல் வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
அவ்வாறான நிலையில் ஜேஆர் அரசாங்கம் அந்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தல் என்னும் பெயரில் ஒற்றையாட்சி முறைமையை நீக்கி சமஸ்டி அரசியல் அமைப்பு ஊடாக தீர்வு காண்பதற்குப் பதிலாக ஒற்றையாட்சிக்குள் 13 ஆம் திருத்தத்தையும் அதன் ஊடாக உருவாக்கப்பட்ட மாகாண சபைகளுக்கும அரசியல் யாப்பு ரீதியான அதிகாரங்கள் எதுவும் இல்லாமையினால் 38 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்துமாறு கோருவதனைத் தவிர வேறு எதவும் நடைபெறவில்லை.
மாகாண சபைகள் உருவாக்கப்பட்டது 38 ஆண்டுகளாகியும் அதற்கு எந்தவிதமான அதிகாரங்களும் இல்லை. அனைத்து அதிகாரங்களும் பாராளுமன்றத்திலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியிடமுமே குவிந்திருக்கின்றது.
கடந்த 38 ஆண்டுகளில் 13 ஆம் திருத்தம் மற்றும் மாகாண சபைகள் தொடர்பில் உச்ச நீதிமன்றில் இடம்பெற்ற வழக்குளில் வழங்கப்பட்ட 32 தீர்ப்புகளின் பிரகாரம் அதிகாரங்கள் அனைத்தும் மத்தியிடமே இருக்க முடியும் என்றும் மாகாண சபைக்கு எந்தவிதமான அதிகாரங்களும் இல்லை என்றும் மிக தெளிவாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் 13ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தல் என்பது ஒருபொழுதும் சாத்தியமற்றது. எனவே ஒற்றையாட்சி முறைமையை ஒழித்து தமிழர் தேசம் இறைமை சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட கூட்டாட்சியை ஏற்படுத்துதே தமிழர் தேசம் பாதுகாக்கப்படுவதற்கான ஒரே வழி என்பதனையும் கஜேந்திரன் சுட்டிக்காட்யிருந்தார்.
சிறீலங்கா அரசானது பொருளாதார ரீதியாக பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கின்றது. அதிலிருந்து மீண்டெழுவதற்கு இந்தியா பாரிய உதவிகளை மேற்கொண்டு வருகின்றது. பொருளாதாரத்தில் முன்னேறுவதற்காக இந்தியாவில் முழுமையாகத் தங்கியிருக்கும் இந்நிலையில் இந்தியா அழுத்தங்களைப் பிரயோகித்தால் மாத்திரமே அரசியலமைப்பு மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
மாறாக இலங்கை அரசு பொருளாதாரத்தில் மீண்டெழுந்த பின்னர் ஒருபோதும் இந்தியாவின் கருத்தை மதிக்கப்போவதில்லை அது இந்தியாவுக்கு விசுவாசமாக இருக்கப்போவதில்லை என்பதனையும் மாறாக கடந்த காலத்திலும் தமிழர் தேசம் இந்தியாவின் நட்புசக்தியாகவே இருந்து வந்துள்ளது என்றும் எதிர்காலத்திலும் தமிழர் தேசம் இந்தியாவின் நட்புசக்தியாக இருகக்கூடிய தமிழர் தேசத்தின் அங்கீகாரத்தை உறுதிப்படுத்த இந்திய மத்திய அரசு அவசர தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் என்றும் கோரினார்.
வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசத்தில் சைவ அடையாளங்களை அழித்து பௌத்த மயமாக்குகின்ற செயல்பாடுகளும் தீவிரமாக முன்னெடுக்கப்படுகின்றது குறுந்தூர் மலையிலே ஆதி சிவன் அய்யனார் ஆலயம் அழிக்கப்பட்டு அதற்கண்மையிலே ஒரு பௌத்த விகாரை சட்டவிரோதமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. வெடுக்குநாறிமலை புராதன சிவன் ஆலய விக்கிரகங்கள் அழிக்கப்பட்டும் தொல்பெர்ருள் திணைக்களம் மற்றும் வனபாதுகாப்புத் திணைக்களம் ஊடாக அப்பகுதிகள் கையகப்படுத்தப்பட்டு சுதந்திரமான வழிபாட்டிற்குத் தடை ஏற்படுத்தப்பட்டு அப்பகுதியை பௌத்த மயமாக்குதவற்கான முயற்சிகள் தீவிரமாக இடம் பெறுகின்றது. குறிப்பாக கடந்த வாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய புத்தசாசன அமைச்சர் வெடுக்குநாறிமலையில் காணப்படும் அடையாளங்கள் அனைத்தும் பௌத்த மத்திற்குரியவை என்று அப்பட்டமான பொய்யினைக் கூறியுள்ளார். இதன் மூலம் அப்பகுதியை பௌத்த மயமாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எந்த விதமான விஞ்ஞான ரீதியாக ஆய்வுகள் எதுவும் செய்யப்படாமல் கண்மூடித்தனமாக இனவாத அடிப்படையில் அவர்கள் உண்மைகளை மறைத்து அதன் பௌத்தத்துக்குரியது என்று கூறி வரலாற்றைத் திரிபுபடுத்த முயல்கின்றார். அதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்திலே செம்மலை நீராவியடி பிள்ளையார் கோவிலிலும் இராணுவத்தினரது உதவியுடன் சட்டவிரோமாக ஒரு புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஆதனால் பிள்ளையார் ஆலயம் அழிவுக்கு உள்ளாகி வருவதுடன் எமது தனித்துவமான பண்பாடு திட்டமிட்டு அழிக்கப்படுகின்றது. அதேபோன்று திருகோணமலை மாவட்டத்தில் திரியாய் பகுதியிலேயே 2 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குள் 28 விகாரைகள் அமைக்கப்படுகின்றன அங்கே தொல்பொருள் திணைக்களத்தின் ஊடாகவே இவ்வாறான திட்டமிட்ட செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது இந்த செயல்பாடுகள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
திருக்கோணேஸ்வரர் ஆலயப் பிரதேசம் படிப்படியாக பெரும்பான்மையினத்தவர்களால் ஆக்கிரமிக்கப்படுகின்றது. தொல்பொருட் திணைக்களம் இந்த ஆக்கிரமிப்புச் செயற்பாடுகளுக்கு உறுதுணையாகச் செயற்படுகின்றது.
இவ்வாறு அரச அதிகாரத்தைப் பயன்படுத்தி பெரும்பான்மையினச் இனவாதிகளால் தமிழர் தாயகம் படிப்படியாக சிங்களமயமாக்கப்படுகின்றது இந்த விடயத்தில் தலையிட்டு இந்த செயல்பாடுகளை கட்டுப்படுத்தி தமிழர்களுடைய பண்பாடு கலாச்சாரத்தை பாதுகாப்பதற்கு இந்தியா உரிய அழுத்தங்களை கொடுக்க வேண்டும் என்றும் கஜேந்திரன் இந்திய துணை சனாதிபதியிடம் கோரிக்கையினை முன்வைத்தார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை