பியூஜோ, சிட்ரோயன் உட்பட 7 இலட்சம் கார்களைத் திரும்பப் பெறும் 'ஸ்டெல்லாண்ட்!
தீவிபத்து அபாயம்: பியூஜோ, சிட்ரோயன் உட்பட 7 இலட்சம் கார்களைத் திரும்பப் பெறும் 'ஸ்டெல்லாண்டிஸ்' நிறுவனம்!
உலகளவில் சுமார் 7 இலட்சம் Hybrid கார்களைத் திரும்பப் பெறுவதாக முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஸ்டெல்லாண்டிஸ் (Stellantis) அதிரடியாக அறிவித்துள்ளது. அதிக ஈரப்பதம் காரணமாக இந்தக் கார்களில் தீப்பிடிக்கும் அபாயம் உள்ளதே இந்த மாபெரும் நடவடிக்கைக்குக் காரணமாகும்.
பிரான்ஸில் மட்டும் 2023 முதல் 2026 வரை தயாரிக்கப்பட்ட 2,11,725 கார்கள் பழுதுபார்ப்பதற்காகத் திரும்ப அழைக்கப்படவுள்ளன. இதில் பாதிக்கும் மேற்பட்டவை 'பியூஜோ' (Peugeot) நிறுவனத்தின் கார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்களின் சில உதிரிபாகங்களில் (பெட்ரோல் வடிகட்டி குழாய் மற்றும் 48V ஆல்டர்னேட்டரின் பாதுகாப்பு மூடி) போதிய இடைவெளி இல்லாததால், ஈரப்பதமான நேரங்களில் மழைநீர் அல்லது ஈரப்பதம் உள்ளே புகுந்து மின்கசிவு (Electric arc) ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் கார் அதிக வெப்பமடைந்து தீப்பிடிக்கலாம் என பிரான்ஸ் அரசின் நுகர்வோர் பாதுகாப்பு இணையதளம் (Rappel Conso) எச்சரித்துள்ளது.
இந்தத் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக உலகளவில் இதுவரை 36 புகார்கள் பதிவாகியுள்ளன; அதில் 12 சம்பவங்களில் கார்களில் லேசான தீப்பற்றியுள்ளது என ஸ்டெல்லாண்டிஸ் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
இதற்குத் தீர்வாக, அதிகாரப்பூர்வக் கார் பழுதுபார்க்கும் மையங்களுக்குக் கார்களைக் கொண்டு சென்றால், வெறும் 30 நிமிடங்களில் ஒரு பெரிய பாதுகாப்பு மூடியை (Protective cap) மாற்றித் தர நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.
பாதிக்கப்பட்ட கார்களின் முழுமையான பட்டியல்:
(வாகன அடையாள எண் - VIN அடிப்படையில் திரும்பப் பெறப்படும் கார்கள்)
Peugeot (பியூஜோ): 208 V2, 2008 V2 மாடல்கள் (அதிகபட்சமாக 1,22,091 கார்கள்)
Citroën (சிட்ரோயன்): C3 V5, C3 Aircross V3, C4 V3, C4X மொடல்கள் (42,349 கார்கள்)
Opel (ஓப்பல்): Corsa, Mokka, Frontera மொடல்கள்(16,142 கார்கள்)
DS Automobile (டி.எஸ்): DS 3 Crossback மொடல்(4,840 கார்கள்)
Jeep (ஜீப்): Avenger / MHEV மொடல்கள் (4,491 கார்கள்)
Alfa Romeo (ஆல்ஃபா ரோமியோ): Junior - MHEV மொடல் (4,491 கார்கள்)
Fiat (ஃபியட்): Fiat 600, Grande Panda மொடல்கள்(1,492 கார்கள்)
Lancia (லான்சியா): Ypsilon மொடல்கள் (911 கார்கள்)
ஏற்கனவே 'பியூர் டெக்' (Pure Tech) இன்ஜின்களில் ஏற்பட்ட கோளாறு மற்றும் 'டகடா' (Takata) ஏர்பேக் பிரச்சினைகளால் பெரும் நெருக்கடியைச் சந்தித்து, பல லட்சம் கார்களைத் திரும்பப் பெற்ற ஸ்டெல்லாண்டிஸ் நிறுவனத்திற்கு, தற்போதைய இந்த அறிவிப்பு சந்தையில் மேலும் ஒரு மாபெரும் பின்னடைவாக அமைந்துள்ளது.

.jpeg
)





கருத்துகள் இல்லை