கிளிநொச்சியில் சிறுபோக நெற்செய்கை விவசாயிகளுக்கு டீசல் வழங்கல் ஆரம்பம்!


கிளிநொச்சி மாவட்டத்தில் 2026 ஆம் ஆண்டு சிறுபோக நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கான நிலப் பண்படுத்தல் நடவடிக்கைகளுக்கு தேவையான டீசல் வழங்கும் பணி இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.


மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் கரைச்சி தெற்கு பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வின் மூலம் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.


இந்நிகழ்வில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் வடபிராந்திய முகாமையாளர் சிவராமலிங்கம் சிவதரன், கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் D. குணசேகர, கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முகமட் சுல்தான் நஜீம், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் எஸ். மோகனபவன், கரைச்சி பிரதேச செயலர் த. முகுந்தன் உள்ளிட்ட அதிகாரிகளும், பல விவசாயிகளும் கலந்து கொண்டனர்.


கமக்காரர் அமைப்புகளின் பரிந்துரையின் அடிப்படையில், கமநல சேவை நிலையங்களால் உறுதிப்படுத்தப்பட்ட பற்றுச்சீட்டுடன் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 30 லீற்றர் டீசல் வழங்கப்படவுள்ளது.


இந்த நடவடிக்கை மூலம் நிலப் பண்படுத்தல் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு, சிறுபோக நெற்செய்கை திட்டமிட்டபடி முன்னெடுக்கப்படுவதற்கு உதவியாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.