காட்டுயானை தாக்கத்திலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பு!📸


காட்டுயானைகளின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாப்பதற்கான பாதுகாப்பு வேலிகளை அமைப்பது தொடர்பான முன்னேற்பாட்டு கலந்துரையாடல், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சு. முரளிதரன் தலைமையில் இன்றைய தினம் (09.04.2026) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.


பொதுமக்களின் வாழ்விடங்களுக்கு உட்பிரவேசித்து அன்றாட வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக மாறிவரும் காட்டுயானைகளின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இப்பாதுகாப்பு வேலி அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.


கடந்த காலங்களில் இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தபோதிலும், சில முரண்பாடுகள் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது. எனினும், தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு இத்திட்டத்தை விரைவாக மீண்டும் ஆரம்பிப்பது அவசியமானது என மாவட்ட அரசாங்க அதிபர் வலியுறுத்தினார்.


மேலும், ஒப்பந்தக்காரர்கள் உரிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில் பொருத்தமான இடங்களைத் தேர்வு செய்து பாதுகாப்பு வேலிகளை அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினரால் விரைவில் கள ஆய்வு (field visit) மேற்கொள்ளப்படவுள்ளது.


இத்திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கிராம உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன், அமைக்கப்படும் பாதுகாப்பு வேலிகள் சுத்தமாகவும் பராமரிப்புடனும் தொடர்ச்சியாக பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன.


இக்கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதம கணக்காளர், பிரதம பொறியியலாளர், கரைச்சி மற்றும் கண்டாவளை பிரதேச செயலாளர்கள், சம்பந்தப்பட்ட கிராம உத்தியோகத்தர்கள், வனவளத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.